TNPSC Thervupettagam

வெறுப்பும் வதந்திகளும் வேரறுக்கப்பட வேண்டும்

February 27 , 2024 147 days 168 0
  • சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் குழந்தைகளைக் கடத்துபவர் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
  • சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் திருநங்கை ஒருவர், இரவு நேரத்தில் குரோம்பேட்டையிலிருந்து பம்மலில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் இருவர் அவரை வழிமறித்துள்ளனர்.
  • குழந்தைகளைக் கடத்துபவர் என்று வாட்ஸ்ஆப்பில் பரவிவரும் ஒளிப்படத்தில் இருப்பவர் அவர்தான் என்னும் சந்தேகத்தின் பெயரில் மேலும் ஐந்து பேரை அந்த இடத்துக்கு அவர்கள் வரவழைத்திருக்கின்றனர். பின்னர், ஏழு பேரும் சேர்ந்து அந்தத் திருநங்கையைக் கட்டிவைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
  • தாக்குதலுக்குள்ளான திருநங்கை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதன் பின் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இந்தத் தாக்குதலை நிகழ்த்திய ஐந்து பேரைக் காவல் துறை கைதுசெய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது.
  • மேலும், இருவர் தேடப்பட்டுவருகின்றனர். திருநங்கையின் புகாரை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையின் செயல் பாராட்டத்தக்கது; இது மட்டும் போதாது. தவறான தகவல், ஒளிப்படத்தை வாட்ஸ்ஆப்பில் உலவச் செய்வதவர் யார் என்பதைக் கண்டறிய வேண்டியதும் காவல் துறையின் பொறுப்பு.
  • ஒரு காலத்தில் ஏளனத்துக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்ட திருநங்கைகள் மீதான பொதுச் சமூகத்தின் பார்வை இன்றைக்குப் பெருமளவு மாறியுள்ளது. காவல் துறை,மெட்ரோ ரயில் நிலையப் பணி உள்ளிட்ட அரசு தொடர்பான பணிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அவர்கள் பணிவாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
  • பொது இடங்களிலும் அவர்கள் பிறரைப் போல் இயல்பாகப் புழங்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆனாலும் திருநர்கள் மீதான ஒவ்வாமையும் வெறுப்பும் முற்றிலும் விலகிவிடவில்லை. பணிநிமித்தமாகவும் வேறு காரணங்களுக்காகவும் பொது இடங்களுக்குத் திருநங்கைகள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தாக்குதல்களை அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. பொதுச் சமூகத்துடன் கலப்பதற்கான அவர்களின் போராட்டங்கள் நிறைந்த பயணத்தில் இது பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
  • திருநர்கள் மீது பொதுச் சமூகத்தினரில் சிலருக்கு உள்ள வெறுப்பின் வெளிப்பாடாகவே குரோம்பேட்டை சம்பவத்தைப் பார்க்க வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வெறுப்பு மனநிலையை முற்றிலும் களைந்து, திருநர்களின் பாதுகாப்பை அரசும் சமூகமும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • வாட்ஸ்ஆப் வதந்தியின் அடிப்படையில் இத்தகைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் இன்னொரு பிரச்சினைக்குரிய பரிமாணம். சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்களில் வாட்ஸ்ஆப் வதந்தியின் அடிப்படையில் தனிநபர்கள் கும்பல்கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன; தமிழ்நாட்டிலும் ஒரு சில சம்பவங்கள் நடந்தன. அந்தக் கொடூரம் மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது.
  • இந்த விஷயத்தில் அரசு கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்களும் சமூக ஊடகங்களின் மூலம் தம்மை வந்தடையும் தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கு முன்பு, அவை தொழில்முறை ஊடகங்களில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா என்று உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • வெறுப்புக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories