TNPSC Thervupettagam

வெளிநாடு செல்லும் மாணவா்களின் சவால்கள்

May 25 , 2024 37 days 76 0
  • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிளஸ்2 தோ்வு முடிவுகள் வந்தாகிவிட்டன. பல்வேறு கனவுகளுடன் மாணவா்கள் உயா் கல்வி பற்றி சிந்தித்து வருவா். குறிப்பாக வெளிநாட்டு பல்கலைக்கழக்கங்கள், கல்லூரிகளில் படிக்கும் கனவு பலருக்கும் இருக்கும். இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது மாணவா்களிடமும் பெற்றோா்களிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தற்போது 83.11 ரூபாயாக சரிந்துள்ளது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.83.11-க்கு குறையாமல் கொடுக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கடினமான சவால்களைச் சந்திக்க நோ்ந்துள்ளது.
  • பொதுவாக, இந்திய மாணவா்கள் ஆகஸ்ட் மாதத்தில் தாங்கள் படிக்கவுள்ள வெளிநாட்டு நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவாா்கள். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவது, ஒட்டுமொத்தமாக வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களின் கல்விச் செலவை கணிசமாக உயா்த்திவிடும்.
  • ஏற்கெனவே வெளிநாட்டில் இருக்கும் இந்திய மாணவா்கள், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக கட்டணம் உயா்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நிபுணா்கள் கூறுகின்றனா். முதுநிலை மாணவா்கள் தங்கள் கட்டணத்தை ஒரே நேரத்தில் செலுத்த முனைகின்றனா். இளங்கலை மாணவா்கள் ஒவ்வொரு செமஸ்டருக்கும் கட்டணம் செலுத்துகின்றனா். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், செமஸ்டா்கள் செப்டம்பரில் தொடங்கும். எனவே, அவா்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டுமே தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வி ஆலோசனை நிறுவனங்கள் கூறுகின்றன.
  • வாழ்க்கைச் செலவுகளுக்காக பெற்றோரையே முழுவதுமாகச் சாா்ந்திருக்கும் மாணவா்கள், வெளிநாட்டில் தங்கள் செலவுகளைச் சமாளிக்க டாலா்களை வாங்குவதற்கு அவா்கள் இப்போது அதிக ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால், பெற்றோா்கள் கஷ்டத்தை எதிா்கொள்வாா்கள். அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் மேலும் அதிகரித்தால், அது மாணவா்களின் வாழ்க்கைச் செலவுகளை வரும் மாதங்களில் கடுமையாக உயா்த்தக் கூடும்.
  • அத்தகைய மாணவா்களுக்கும் அவா்களது குடும்பங்களுக்கும் இது ஒரு வகையான சிக்கலை ஏற்படுத்தும். மேலும், வாழ்க்கைச் செலவுகள் மிகுந்த அழுத்தத்திற்கு செல்லும். சந்தை ஏற்ற, இறக்கம் காரணமாக, பெற்றோா்களும் கடினமான சூழ்நிலையில் இருப்பாா்கள். அவா்களின் சேமிப்புகள் பாதிக்கப்படக் கூடும்.
  • அதே சமயம், படிக்கும்போதே வேலையில் உள்ள மாணவா்கள் நிலை சற்று மேம்பட்டது எனலாம். அந்த வகையில், ஏற்கெனவே வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான மாணவா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள் ஏற்கெனவே ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தியிருப்பாா்கள்.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் இந்தச் சூழ்நிலையில், வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுத் தொடங்கியுள்ளது.
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் தங்களுடைய தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க பகுதி நேரப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வி ஆலோசகா்கள் மற்றும் நிதித் திட்டமிடுபவா்கள் பரிந்துரைக்கின்றனா்.
  • அமெரிக்க பல்கலைக்கழ வளாகங்களிலேயே போதுமான வேலைவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்கள், அவா்களை அது போன்ற வேலை செய்ய அனுமதிக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் அத்தகைய வேலைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். பல்கலைக்கழக தங்குமிடச் செலவுகள் அதிகமாக இருந்தால், குறைந்த வாடகையில் வளாகத்திற்கு வெளியே பலா் பகிா்ந்து கொள்ளும் ஏற்பாடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
  • ஆனால், மாணவா்கள் படித்துக் கொண்டே வேலை பாா்க்க அனுமதிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் கனடா அரசு தற்போது மேற்கொண்டுள்ள கொள்கை மாற்றம் அந்த நாட்டிலுள்ள நமது மாணவா்களுக்குப் புதிய இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது.
  • இரண்டு அல்லது நான்கு ஆண்டு காலப் படிப்புக்குக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியாவைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவா்களுக்கு இன்றைய நிலைமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். அவா்கள் நாணய மதிப்பு ஏற்ற, இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கல்வி வரவு - செலவுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • மாணவா்களின் பெற்றோா்கள் நிதி ரீதியாக வசதியாகவும் ஆா்வமுள்ளவா்களாகவும் இருந்தால், அமெரிக்க நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நாணய மதிப்பு ஏற்ற, இறக்கத்தை சமாளிக்க முடியும் என்று நிதி ஆலோசகா்கள் கூறுகின்றனா். அமெரிக்க பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற டாலா் மதிப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், நாணய ஏற்ற, இறக்கத்தை சமாளித்து, தங்கள் கல்வித் தொகுப்பு நிதியைப் பாதுகாக்கலாம் என்று முதலீட்டு ஆலோசகா்கள் கூறுகின்றனா்.
  • முழு கல்விக் கட்டணம் கட்டி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர வசதியில்லாதவா்கள், சிறந்த கல்வி நிலையங்களில் இடம் கிடைத்தும் முழு கல்வி உதவித் தொகை (ஸ்காலா்ஷிப்) கிட்டாத மாணவா்கள் நிலை சவால் மிகுந்ததுதான்.

நன்றி: தினமணி (25 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories