- மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை (Foreign Trade Policy -FTP), மத்திய வர்த்தகம் - தொழில் துறை அமைச்சர்பியூஷ் கோயல், மார்ச் 31 அன்று வெளியிட்டார். முந்தைய கொள்கையானது 2015-2020 வரையிலான காலகட்டத்துக்கென 2015இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கரோனா பெருந்தொற்று, புவி அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் பல முறை அது நீட்டிக்கப்பட்டுவந்தது. 2023 மார்ச் 31 வரை நடைமுறையிலிருந்த அந்தக் கொள்கையைத் தொடர்ந்து, புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (வெ.வ.கொ.) ஏப்ரல் 1இலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை என்றால் என்ன?
- வெளிநாட்டு வர்த்தக மேம்பாடு-ஒழுங்குமுறைச் சட்டம் 1992இன் கீழ், ஏற்றுமதியை அதிகரித்தல், இறக்குமதியை எளிதாக்குதல், கட்டணச் சமநிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுடன் வர்த்தகக் கொள்கைகளின் உருவாக்கம், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவை அரசாங்கத்தின் முக்கியப் பணிகளாகும்.
- சுதந்திரத்துக்குப் பிந்தைய வர்த்தக நடைமுறைகளை முற்றிலும் கைவிட்டு, உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக, முதல் (1992), இரண்டாவது (1997-2022) ஐந்தாண்டு ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) கொள்கைகள் திட்டமிடப்பட்டன.
- இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான, விரிவான அணுகுமுறையைக் கைக்கொள்ளும் நோக்கில், ‘ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கை’, ‘வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (2004). இதைத் தொடர்ந்து 2009-2014, 2015-2020 ஆகிய காலகட்டங்களுக்கான வெ.வ.கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
வெ.வ.கொ. 2023இன் காலகட்டம்:
- வெ.வ.கொள்கையின் காலகட்டம் ஐந்து ஆண்டுகள் என்கிற வழக்கமான நிலையை இந்த அரசாங்கம் கைவிட்டிருக்கிறது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்பத் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொண்டு மேம்படுத்தும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து சீரான இடைவெளியில் கருத்துகளைப் பெற்றுக் கொள்கையை மேம்படுத்தவும் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- முந்தைய வெ.வ.கொள்கைகள் இலக்குகளை எட்டினவா? - இந்தியாவின் ஏற்றுமதியை 465 பில்லியன் டாலரிலிருந்து (2013-2014), 900 பில்லியன் டாலராக உயர்த்த (2019-2020) வெ.வ.கொ. 2015-2020 இலக்கு நிர்ணயித்தது. ஆனால், சரக்கு - சேவை ஏற்றுமதியின் மதிப்பு, கொள்கைக் காலத்தின் முடிவில் (2019-2020), 526.55 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது; 2020-2021 காலகட்டத்தில் கரோனா பெருந்தொற்று, புவி அரசியல் நெருக்கடிகளால் ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டது. 2022-2023 காலகட்டத்துக்கான ஏற்றுமதி இலக்கு, 760 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெ.வ.கொ. 2023 இன் குறிக்கோளும் இலக்குகளும்:
- வணிகப் பொருள்கள் - சேவைத் துறைகளிலிருந்து சம பங்களிப்புடன் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பை 2030க்குள் 2 டிரில்லியன் டாலராக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 2022 ஜூலையில், ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய கட்டணத் தீர்வுக் கட்டமைப்பின் உதவியுடன், எல்லை தாண்டிய வர்த்தகத்தில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
வெ.வ.கொ. 2023இன் முக்கிய அம்சங்கள்:
- ‘ஒரு மாவட்டம்.ஒரு பொருள்’ திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு பொருளில் கவனம் செலுத்தப்படும்; புதிய மின்னணு வர்த்தக மையங்களும், ஏற்றுமதி மையங்களும் உருவாக்கப்படும்; ஏற்றுமதியில் போட்டித்தன்மையையும், தரத்தையும் ஊக்குவிக்கச் சலுகைகள்; தனி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்; சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மேம்படுத்தப்பட்டு தொழில்-சேவை வளர்ச்சி மையங்களாக மாற்றப்படும். மேலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் உள்நாட்டுத் தொழில்கள் பயன்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி அதிகரிப்பதோடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பயன்பெற முடியும்.
‘ஸ்டேட்டஸ் ஹோல்டர்’:
- சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உதவும் வகையில் வெ.வ.கொ - 2023 சில அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதியில் ‘ஸ்டேட்டஸ் ஹோல்டர்’ என்கிற சிறப்பு நிலை அங்கீகாரம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி அளவு குறைக்கப்பட்டிருப்பது, சிறு ஏற்றுமதியாளர்கள் உயர் நிலை (higher status) பலன்களை எட்டுவதற்கும், பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும்.ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான மூலதனப்பொருள்கள் திட்டம் (EPCG) உள்ளிட்ட அம்சங்கள் மூலம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கானபயனர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; மேலும், எல்லா விதமான கட்டணங்களும் ரூ.5,000-க்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இணைய வர்த்தக ஏற்றுமதி:
- இணையம் வழியாக அயல்நாட்டு வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிமாற்றமான இணைய வர்த்தக (e-commerce) ஏற்றுமதிக்கு, புதிய வெ.வ. கொள்கையானது மிகப் பெரிய உந்துதலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5-10 பில்லியன் டாலராக உள்ள இணைய வர்த்தக ஏற்றுமதியின் வருடாந்திர அளவு, 2030இல் 200-300 பில்லியன் டாலரை எட்டுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதாகஅரசு கருதுகிறது.
- வெ.வ.கொள்கையின் பயன்கள் அனைத்தும் இணைய வர்த்தக ஏற்றுமதிக்கும்விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இணைய வர்த்தக ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக வருவாய்த் துறை, அஞ்சல் துறை, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் (DGFT) ஆகிய துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
- ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நகரங்கள்: ரூ.750 கோடி அல்லது அதற்கு மேல் பொருள்களை உற்பத்தி செய்யும் நகரங்கள், ஏற்றுமதியின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், ‘ஏற்றுமதியில் சிறந்த நகரங்கள்’ [Towns of Export Excellence (TEE)] என அங்கீகரிக்கப்பட முடியும். இருப்பினும், கைத்தறி, கைவினை, விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகிய துறைகளுக்கான உச்சபட்ச வரம்பு, ரூ.150 கோடியாக உள்ளது. நாட்டில் ஏற்கெனவே 39 ‘ஏற்றுமதியில் சிறந்த நகரங்கள்’ இருந்தன; இந்நிலையில், ஃபரிதாபாத் (ஆடைகள்), மொராதாபாத் (கைவினைப் பொருள்கள்), மிர்சாபூர் (கைவினை விரிப்புகள்), வாராணசி (கைத்தறி, கைவினைப் பொருள்கள்) ஆகிய நான்கு நகரங்கள் வெ.வ.கொ. - 2023இல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
நன்றி: தி இந்து (05 – 04 – 2023)