TNPSC Thervupettagam

வேண்டாமல் பிறந்தோம் ஆனாலும் சாதிப்போம்

September 18 , 2023 313 days 364 0
  • கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன், பெண்கள் அமைப்பின் அகில இந்திய மாநாடு ஒன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் பிரதிநிதியாக நான் பங்கேற்றேன். அதன் அமர்வுகளில் ஒன்று, இளம் பெண்களுக்கானது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இளம் பெண்கள் – குறிப்பாக மாணவிகள் – மாநாட்டுப் பிரதிநிதிகளாகப் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் இருவர் பேசிய விஷயங்கள் நினைவில் தங்கிப்போனவை.
  • ஒருவர் ஒடிஷாவிலிருந்து வந்தவர். அவருடைய தாயார் கர்ப்பம் தரித்ததிலிருந்தே ஒட்டுமொத்தக் குடும்பமும் உறவுகளும் சேர்ந்து அவரது சிறு சிறு அசைவுகளையும் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து, பிறக்கப் போவது ஆண் குழந்தைதான் என்று உறுதியாக நம்பியதுடன் ஆரூடமாகவும் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், பிறந்ததோ பெண் குழந்தை; பத்து மாத கால அதீத எதிர்பார்ப்பும் விருப்பமும் நம்பிக்கையும் சிதைந்து போனதில் அனைவரின் வெறுப்புக்கும் அந்தப் பெண் குழந்தை ஆளானது.
  • ‘பெண்ணாயினும் அது தங்கள் குழந்தையே’ எனத் தாயும் தந்தையும் மனதைத் தேற்றிக் கொண்டதுடன், ஆணாகப் பிறக்கும் என எதிர்பார்த்து ஏமாந்ததால் ஓர் ஆண் குழந்தையைப் போலவே அந்தக் குழந்தையை வளர்ப்பதில் தங்களைத் திருப்திப்படுத்திக்கொண்டார்கள்.
  • ஆனால், மற்றவர்களோ அக்குழந்தையைக் கொண்டாடவும் இல்லை, அன்பு செலுத்தவும் இல்லை. வெறுப்பை மட்டுமே உமிழ்ந்துகொண்டிருந்தார்கள். பெண் பிறப்பே இழிவான பிறப்பு என்ற சமூக உளவியல் இங்கு வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குடும்பத்தின் முதல் குழந்தை, முதல் வாரிசு ஆணாக மட்டுமே பிறக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை அவர்களிடையே வேர்விட்டு ஆழப் பதிந்திருக்கிறது.
  • “அப்படித்தான் நான் ஓர் ஆண் குழந்தையைப் போல் வளர்க்கப்பட்டு, இன்று துணிச்சல் மிக்க பெண்ணாக இந்த மாநாட்டு மேடை வரை வந்து நிற்கிறேன்” என்றார் அந்தப் பெண். இது ஒருவகையில் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட, துணிவான, தெளிவான மனநிலை.
  • மற்றொரு பிரதிநிதி பஞ்சாபின் கிராமப்புறத்திலிருந்து வந்தவர். அவரும் கருவில் உருவானதில் இருந்தே இது ஆண் குழந்தையாகத்தான் பிறக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்டு, அனைவரின் நம்பிக்கையையும் ‘சிதைத்து’ப் பெண்ணாய்ப் பிறந்தவர். ‘நீ ஆண் குழந்தையைத்தான் பெற வேண்டும். இல்லை என்றால்...’ என்று உறவினர்கள் இவரின் தாயை மிரட்டிஅச்சுறுத்திவந்த நிலையில், ‘பெண்ணாய்ப் பிறந்து விட்டால்?’ என்ற அச்ச உணர்வுகளுக்கு மத்தியில்தான் இவரைப் பெற்றெடுத்திருக்கிறார் தாய்.
  • அப்போது அவர் என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என்பதை இங்கு விவரிக்கத் தேவையில்லை. தாயும்தந்தையும் எந்த வேறுபாடும் செலுத்தாமல் அன்பைவெளிப்படுத்தினாலும், சுற்றமும் சமூகமும் ‘கேவலம்... நீ ஒரு பெண்தானே’ என்ற வசையையும் கடுமையான மனஅழுத்தத்தையும் தொடர்ந்து அவர் மீது செலுத்திக் கொண்டிருந்தன.
  • “இதன் விளைவு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என என் கல்வி தொடர்ந்தபோதும் அனைத்துமே பிரச்சினைக்கு உரியதாக மாற்றப்பட்டன. அப்போதுதான் நான் எந்த நிலையிலும் நம்மை இழந்து, சமாதானத்தை ஏற்க வேண்டியதில்லை என்ற தீர்மானமான முடிவை எடுத்தேன்” என முடித்தார்.
  • இப்படி ‘வேண்டா நாயகி’களாகப் பிறந்த பெண்களின் எண்ணிக்கை ஏராளம். பெண்ணாகப் பிறப்பெடுப்பதைப் பெண்களே மூர்க்கத்துடன் எதிர்க்கும் இழிவான மனநிலையைப் பெண்களிடம் உருவாக்கி வைத்திருக்கும் சமூகம் குறித்து நாம் கவலைகொள்ளத்தானே வேண்டும். பெண்பிறப்பே வேண்டாம் என மறுக்கும் போக்கும் சிந்தனையும் எதன் அடிப்படையில் இங்கு உருவாகிறது? பெண் ஏன் இப்போதும் விரும்பத்தகாதவளாக, வேண்டாதவளாக இருக்கிறாள் என்பது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியது.
  • இதில் பெரிதும் ஆறுதலும் பெருமையும் கொள்ளவேண்டிய ஒன்று, அந்த இரண்டு பெண்களின் பெற்றோரும்தங்கள் மகள்களுக்குக் கல்வி கற்கும் உரிமையை மறுக்கவில்லை என்பதுதான். அவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இடையில்தான் இப்போதும் பல பெண் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். இன்னும் பல பெண்கள் தங்கள் கல்வியை நிறைவுசெய்து பணியாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.
  • “நான் எப்போதேனும் மந்திரியாக நேர்ந்தால், பெண்களின் படிப்புக்காக மட்டுமே பணத்தைச் செலவிடுவேன்” என தந்தை பெரியார் ஒருமுறை குறிப்பிட்டார். அந்த அற்புதமான சிந்தனை வீச்சு எப்போதும் நினைவில் கொள்ளத்தக்கது. பெண் சார்ந்து மட்டுமல்ல, மனதையும் சிந்தனையையும் மறைக்கும் இத்தகைய அடர்த்தியும் அருவருப்பும் மிக்க இரும்புத் திரைகள் முற்றிலும் விலக்கப்பட வேண்டியவை.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories