- பாலஸ்தீன ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர வேண்டும். நவம்பர் 24-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
- அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் புகுந்து பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலால் தொடங்கியது பிரச்னை. அதன் எதிர்வினையாக காஸா மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை இருதரப்பிலும் சுமார் 17,400 உயிர்கள் பலியாகியுள்ளன. இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பயங்கரவாதத்தின் கொடூரத்தைக் கண்முன் கொண்டுவந்தன என்றால், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் அதற்கு சற்றும் குறைவானதில்லை.
- காஸாவில் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்காத நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்த நடவடிக்கையின் பலனாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும், 50 பிணைக் கைதிகளை ஹமாஸூம் விடுவிக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். போர் நிறுத்த இடைவெளியில் காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
- போர் நிறுத்த காலத்தில் இதுவரை 180 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேலும், 81 பிணைக் கைதிகளை ஹமாஸூம் பல்வேறு கட்டங்களாக விடுவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆவர். ஹமாஸ் அமைப்பினர் 200-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை பிடித்துச் சென்றுள்ள நிலையில், கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிப்பதை அடிப்படையாகக் கொண்டு காஸாவில் தற்போதைய சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் விருப்பம் தெரிவித்தாலும், பிணைக் கைதிகள் விடுவிக்கும் பணி நிறைவடைந்ததும் ஹமாஸ் அமைப்பை பூண்டோடு அழிக்கும் வரை காஸாவில் தாக்குதல் நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்பு மீண்டும் உருவாகாமல் இருப்பதற்காக காஸாவின் பாதுகாப்பு இஸ்ரேல் ராணுவம் வசம் இருக்கும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். இவை ஹமாஸ் குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
- சுமார் 23 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஸாவின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதி நோக்கி 10 லட்சம் பாலஸ்தீனர்கள் போரின் ஆரம்ப கட்டத்தில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் கெடு விதித்த நிலையில், பெரும்பாலானவர்கள் தெற்கு பகுதிக்குச் சென்றுவிட்டனர். ஆனால், காஸாவின் தெற்கிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்ததால் ஒட்டுமொத்த காஸா மக்களின் நிலைமையும் பரிதவிப்புக்குள்ளானது.
- பொதுமக்கள் உயிரிழப்பு ஒருபுறம் இருக்க, காஸாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பே இஸ்ரேலின் தாக்குதல்களில் அழிந்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஹமாஸ் ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கில் ஒட்டுமொத்த பொதுசொத்துகளும் அழிக்கப்படுவது துயரம். இதன் நியாய, அநியாயங்கள் பற்றிய விவாதம் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இப்போதைக்கு அப்பாவி மக்களின் உயிர் காக்கப்படுவதுதான் முக்கியம்.
- பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்காக 1948-இல் உருவானது இஸ்ரேல் நாடு. இதை ஏற்காத அரபு நாடுகள் இஸ்ரேல் மீது பலமுறை படையெடுத்து தோல்வியை எதிர்கொண்டன. 1967-இல் நடைபெற்ற ஆறு நாள் போரில் வெற்றி பெற்று, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையையும், காஸாவையும் இஸ்ரேல் கைப்பற்றியது.
- காஸாவிலிருந்து 2005-இல் இஸ்ரேல் ராணுவம் வெளியேறிவிட்டாலும் மேற்குக் கரை பகுதி இப்போதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது காஸாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான எண்ணத்தை இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.
- காஸாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரை இஸ்ரேல் முற்றிலுமாக அழித்துவிடவில்லை. அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு மேற்கு கரை ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாலஸ்தீன அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், அங்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் மேற்குக் கரையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது நிலைமையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
- காஸாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் முடிவுக்கு வர, போர் நிறுத்தம் நிரந்தரமாவது அவசியம். இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையிலான பிரச்னைக்கு இரு நாடுகள் திட்டம்தான் தீர்வு என அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. பாலஸ்தீனர்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்குவதும், ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்கள் செயலிழப்பதும்தான் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
நன்றி: தினமணி (30 – 11 – 2023)