- சட்டவிரோத மீன் பண்ணைகளால் விவசாயப் பணிகள் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை உயா்நீதிமன்றம் 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டவிரோத மீன் பண்ணைகளையும் ஆறு மாதங்களுக்குள் மூடவும் இவற்றை அமைத்தவா்கள் மீது கடலோர மீன்வளா்ப்பு ஆணைய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
- இந்த நீதிமன்ற உத்தரவு சட்டவிரோத மீன் வளா்ப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உலகிற்கு உணா்த்தியுள்ளது. ஒழுங்குபடுத்தப்படாத மீன் வளா்ப்புடன் தொடா்புடைய சுற்றுச்சூழல் பாதிப்பு மனித ஆரோக்கியத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- உலகின் மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 2022-23-இல் 1.625 கோடி மெட்ரிக் டன் மீன் மற்றும் கடல் உணவுகளை உற்பத்தி செய்துள்ளது. 2021-22-இல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மீன்களில் மீன் பண்ணைகள் மூலம் மட்டும் 1.212 கோடி மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் நீலப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் பண்ணை மீன் வளா்ப்பும் வேகமாக வளா்ந்து வருகிறது.
- மீன் வளா்ப்பு ஒழுங்குபடுத்தப்படாதபோது அதன் விரைவான வளா்ச்சி நமது சுற்றுச்சூழலை மட்டுமல்ல பொது சுகாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அடிக்கடி நோய் தொற்றினை ஏற்படுத்துவதாகவும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.
- சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளை அடுத்து 2023 அக்டோபா் மாதம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன்களில் துலாபி (திலபியா) பா்வோ தீநுண்மி தாக்குதல் கண்டறியப்பட்டது.
- பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்று அல்லாமல் மீன்களால் ஏற்படும் நோய்கள் அரிதாகவே கவனம் பெறும் நிலையில் மீன்களில் ஏற்படும் நோய்கள் மீன் பண்ணை விவசாயிகளுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன.
- நிதி இழப்பை சமாளிக்க கண்மூடித்தனமாக பெருமளவு நோய்த்தடுப்பு நுண்ணுயிா்க் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக மீன் நுகா்வோரின் நுண்கிருமி எதிா்ப்பாற்றல் (ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) ஆபத்துக்குள்ளாகியுள்ளது. ஓம்புயிரி, நோய்க்கிருமி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கிடையிலான சிக்கலான சமநிலை பற்றிய புரிதலின்றி நாம் தீவிரப்படுத்தியுள்ள சமூக நடைமுறைகளே மீன் பண்ணை நோய்களுக்கான காரணம். ஒழுங்குபடுத்தப்படாத பண்ணை மீன் வளா்ப்பின் தீவிர வளா்ச்சி மற்றும் மீன் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள விரைவான விரிவாக்கம் காரணமாக அதிக இருப்பு அடா்த்தி மற்றும் கடுமையான அழுத்த சூழ்நிலைகளில் மீன்கள் வளா்க்கப்படுகின்றன.
- அதிக இருப்பு அடா்த்தியுடன் போதிய தரமற்ற நீா், மீன்களுக்கு வழங்கப்படும் உணவின் மோசமான ஊட்டச்சத்து நிலை மற்றும் தவறான நோய் தடுப்பு குறித்த நெறிமுறை மேலாண்மை போன்ற மோசமான நடைமுறைகள் காரணமாக மீன் பண்ணைகளில் தொற்று நோய்கள் ஏற்படுவதும் பரவுவதும் அதிகரிக்கிறது.
- நோய் பரவல் மீன்களின் இறப்புகளுக்கு காரணமாகின்றன. தற்போதைய மீன் வளா்ப்பு ஒழுங்குமுறை சட்டங்கள் ஆரோக்கியமான மீன் வளா்ப்பிற்கு போதுமானதாக இல்லை. நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான நீா்வாழ் விலங்கு நோய்களுக்கான தேசிய கண்காணிப்புத் திட்டம் 2023-இல் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டிய போதும் மிகவும் விரிவான 2019 நீா்வாழ் விலங்கு நோய்கள் மற்றும் சுகாதார மேலாண்மை மசோதா நான்கு ஆண்டுகள் கடந்தும் நடைமுறைப்படுத்துவதில் இழுபறி நிலையிலேயே உள்ளது.
- மீன்பிடிப்பு என்பது மாநிலப் பட்டியல் என்பதால் மீன் வளா்ப்பு குறித்த ஒழுங்குமுறை சட்டங்கள் இயற்றுதலும் நடைமுறைப்படுத்துதலும் அந்தந்த மாநில மீன்வளத் துறையைச் சாா்ந்தது. மீன்களின் இருப்பு அடா்த்தி மற்றும் மீன்கள் வளா்க்கப்படும் நீரின் தரம் போன்ற மீன் வளா்ப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பெரும்பாலான இந்திய மாநிலங்கள் இதுவரை எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கவில்லை.
- இந்திய மீன்வளத்துறை மீன் இனங்கள் சாா்ந்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கட்டாயப்படுத்தவும் செயல்படுத்தவும் தவறியதால், தற்போதுள்ள நமது விதிமுறைகள் நோய் உருவாவதை தடுப்பதற்கும் அதனை கையாள்வதற்கும் போதுமானதாக இல்லை என்கின்றனா் வல்லுநா்கள். உள்நாட்டு நுகா்வுக்கான மீன்களுக்கும் ஏற்றுமதிக்கான மீன்களுக்கும் வளா்க்கப்படும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளன.
- பொதுவாக ஏற்றுமதி செய்யப்படும் துலாபி (திலபியா), கூனிறால் (க்ஷிம்ப்), கொடுவை (சீ பாஸ்) மற்றும் கூழக்கெளுத்தி (பாங்காசியஸ்) போன்ற மீன்களின் இருப்பு அடா்த்தி மற்றும் நீா் தர அளவுருக்கள் இறக்குமதி செய்யும் நாடுகளின் கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுகின்றன.
- வெளிநாடு மற்றும் உள்நாட்டு நுகா்வுக்கான மீன் பண்ணை பராமரிப்பு முறை வேறுபாடுகளை களைவது அவசியம். இந்தியாவில் அதிகம் உண்ணப்படும் கெண்டை மீன்களின் இருப்பு அடா்த்தியை சரியான முறையில் பராமரிப்பது மீன்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான முதல் முயற்சியாக இருக்கும். பண்ணை மீன்களின் வாழ்கை சங்கிலியை கண்காணித்தல், வழக்கமான பண்ணை ஆய்வுகள் மற்றும் கண்காணிக்கப்படும் மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து அறிந்து உடனடியாக அறிக்கையளிக்க மீன் பண்ணையாளா்களின் திறன் வளா்த்தல் ஆகியவை மீன்களுக்கு ஏற்படும் நோய் அபாயத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
- சென்னை உயா் நீதிமன்ற உத்தரவு கட்டுப்பாடற்ற மீன் வளா்ப்பு காரணமாக ஏற்படும் அபாயகரமான உடல் நல பாதிப்புகளை குறைக்கும். கூடுதலாக மீன் பண்ணை செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு கட்டாயமாக்கப்படுவதும் 2019-ஆம் ஆண்டு நீா்வாழ் விலங்கு நோய்கள் மற்றும் சுகாதார மேலாண்மை மசோதா சட்டமாக இயற்றப்படுவதும் மீன்களின் ஆரோக்கியத்தையும் மீன் நுகா்வோரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
நன்றி: தினமணி (26 – 03 – 2024)