TNPSC Thervupettagam

வேதாந்தா நிறுவனத்தை வீழ்த்திய ஆப்பிரிக்க இளைஞர்

May 21 , 2023 553 days 350 0
  • செக்வேமும்பா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா எனும் நகரத்தில் பிறந்தவர். அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து விளையாடியவர் மும்பா. அந்த ஆற்றின் கரையோரமாக கே.சி.எம். எனப்படும் கொன்கொலா தாமிரச் சுரங்கம் அமைந்திருந்தது. மும்பா சிறுவனாக இருந்தபோதே இருந்த சுரங்கம் அது. அப்போது அரசின் கையில் இருந்த அந்தச் சுரங்கத்தில் மும்பாவின் தந்தையும் வேலை பார்த்திருக்கிறார். அப்போது பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு எதுவும் இல்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு

  • 2004ஆம் ஆண்டு அந்தத் தாமிரச் சுரங்கம், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் பிடிக்குள் சென்றது. மும்பாவின் குடும்பம், தலைநகர் லுசாகாவுக்குக் குடி பெயர்ந்து விட்டது. இந்தநிலையில் ஒருமுறை சொந்த நகரமான சிங்கோலாவுக்கு ஆவலுடன் வந்தார் மும்பா. சிங்கோலா இப்போது அலங்கோலமாக மாறியிருந்தது. காஃபுயே ஆற்றை அவர் ஆவலுடன் காணச் சென்றபோது, காஃபுயே ஆற்றில் இப்போது துர்நாற்றம் வீசியது. ஆற்றில் ஒரு மீன் கூட இல்லை.
  • ஆறு மட்டுமல்ல. அந்தப் பகுதியின் மண்ணின் நிறமும், அதன் குணமும் கூட மாறிப் போயிருந்தது. பயிர்கள் விளைச்சலுக்கு வழியின்றிக் கருகிக் கிடந்தன. கால்நடைகள் நோய் நொடிகளால் வாடிக் கிடந்தன. மக்களுக்கோ தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல், சிறுநீரில் ரத்தம் போன்ற பிரச்சினைகள். காலையில் கண்விழித்தால், கான்ஜூரிங் பேய்ப் படத்தில் வருவது போல மனிதர்களின் உடல்களில் திடீர் திடீர் சிராய்ப்புகள், கீறல் குறிகள்.
  • காஃபுயே ஆற்றோரம் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வேதாந்தா நிறுவனம் தனது தொழிற்சாலையை விரித்திருந்தது. 7 மைல் நீளத்துக்கு ஒரு திறந்தவெளி சுரங்கம். உலகத்தின் இரண்டாவது பெரிய திறந்தவெளி சுரங்கம் அது. இதுபோக நிலத்தடி சுரங்கங்கள், சல்பூரிக் அமிலத் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலை, இன்னும் பலப்பல.

தனியே போராடிய மும்பா

  • சாம்பியா நாட்டின் ஏற்றுமதியில் 77 விழுக்காடு கனிம வளங்கள்தான். அந்த நாட்டின் வருவாயில், 25 விழுக்காடு, சுரங்கப் பொருட்கள் மூலம் வரும் வரி வருவாய்தான். ஆனால், சுரங்கப் பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்தக் கனிமங்களால் துளிகூட எந்தப் பலனும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டும்தான்.
  • ஏன் இந்தக் கொடுமை என்று மும்பாவுக்குப் புரியவில்லை. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக மும்பா, சட்ட நடவடிக்கைகளில் இறங்கியபோது சிலர் சிரித்தார்கள். ‘இது நேர விரயம். கல் சுவரில் முட்டிக் கொள்வதைப்போன்ற செயல்’ என்றார்கள். காரணம் அந்தச் சிலர், ஏற்கெனவே சட்ட முயற்சிகளில் இறங்கித் தோற்றுப் போனவர்கள். மும்பா, உலக அளவில் செயல்படும் நூற்றுக்கணக்கான சட்ட அமைப்புகள், சூழல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கு இணையம் மூலம் கோரிக்கை அனுப்பினார். சிங்கோலா பகுதி மக்கள் படும் துயரத்தைக் கூறி உதவி கேட்டார். பல அமைப்புகளிடம் இருந்து தானியங்கி முறையில், இயந்திரத்தனமான பதில்கள் மட்டுமே வந்தன. இந்தவேளையில் லீ டே என்ற பிரித்தானியச் சட்ட அமைப்பு உண்மையாகவே மும்பாவுக்கு உதவ வந்தது. அந்த அமைப்பின் உதவியுடன் லண்டனில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் மும்பா.
  • காஃபுயே ஆற்றின் தாமிரம், இரும்பு, கோபால்ட் கலந்த நீரின் மாதிரிகள், சிங்கோலா பகுதியில், மண்ணில் கரையாத சல்பேட்டுகளின் மாதிரிகளை அவர் லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பகுதி மக்களின் ரத்தத்தில் தாமிரம், இரும்பு, கோபால்ட் போன்ற கனரகப் பொருட்கள் கலந்திருந்தன. அந்த ரத்த மாதிரிகளும் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • ஆறு ஆண்டுக்காலம் இந்தச் சட்டப் போராட்டம் நடந்தபோது பல இடறுகள், கைது நடவடிக்கைகளை எதிர்கொண்டார் மும்பா. சிங்கோலா பகுதி காவல்துறையினர், வலம் வருவதே வேதாந்தா நிறுவனம் வாங்கித் தந்த வாகனங்களில்தான். ஆகவே, வேதாந்தாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களிடம் கரடுமுரடாக நடந்து கொள்வதுதான் காவல்துறையின் வழக்கம்.
  • ஒருவழியாக நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின், கொன்கொலா தாமிரச் சுரங்கம் வேதாந்தா நிறுவனத்தின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • பொதுவாக மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைத் தங்களது துணை நிறுவனங்கள் மூலம் கொள்ளையிடுவதுதான் வழக்கம். வழக்கு என்று வந்தால் துணை நிறுவனத்தின் செயல்பாடு தங்களைக் கட்டுப்படுத்தாது என்றுகூறி கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பித்துக்கொள்ளும். ஆனால், அது இந்தமுறை எடுபடவில்லை.

பயணங்கள் முடிவதில்லை

  • கொன்கொலா தாமிரச் சுரங்கம் வேதாந்தாவிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டதால் சுற்றுச் சூழல் சீராகி விட்டதா? மீண்டும் காஃபுயே ஆற்றில் மீன் வந்து விட்டதா என்றால் இல்லை. தற்போது அந்தத் தாமிரச் சுரங்கத்தைச் சாம்பியா அரசே மீண்டும் நடத்தி வருகிறது. பயணங்கள் முடிவதில்லை என்பது மாதிரி போராட்டங்களும் அவ்வளவு எளிதில் முடிவதில்லைதான்.
  • இதற்கிடையே, கோல்ட்மேன் என்ற சுற்றுச்சூழல் விருதை வென்றிருக்கிறார் மும்பா. விருதுகள் அரிதிலும் அரிதாக, எப்போதாவது தகுதியான நபர்களுக்கும் கிடைத்து விடுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிரான மும்பாவின் இந்தப் போரும், அதன் வெற்றியும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நைஜர் டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தீ பரவட்டும்.

நன்றி: தி இந்து (21 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories