வேர்களைக் குணமாக்கும் மருத்துவர்!
- அரசு கால்நடை மருத்துவரும் ‘மக்கள் களப் பணி இயக்க’த்தின் ஆலோசகருமான ரவிசங்கர் வேலூர் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார். பொதுவாகச் சமூக சேவை செய்ய நினைப்பவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட துறையை அல்லது ஒரு பணியை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்வார்கள். ஆனால், ரவிசங்கரும் அவர் சார்ந்திருக்கும் மக்கள் களப்பணி இயக்கமும் மக்களின் தனிப்பட்ட தேவையையும் அவர்கள் எதிர்கொள்ளும் அவசரக்கால உதவிகளையும் சளைக்காமல் செய்து கொடுத்து வருகிறார்கள்.
- கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலணி, கிராமப்புறப் பள்ளிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்து கொடுப்பது, அரசு மருத்துவமனைகளின் வேண்டு கோளை ஏற்று ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்வது, குடிநோயிலிருந்து மீண்டு வர முன்வருபவர்களை அடுக்கம்பாறை அரசு மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது, மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பெண்களை, ‘சி.எஸ்.ஆர் காப்பி’ பெற்று அரசு மனநலக் காப்பகங்களில் சேர்ப்பது என விரிந்து செல்லும் இவர்களது சேவையில் ‘ரத்தசோகை ஒழிப்பு’ முகாம்கள் பெரும் விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
- யாரிடமும் நன்கொடை பெறாமல், சொந்த ஊதியத்தி லிருந்து இந்தச் சேவைகளை ரவிசங்கரும் அவருடைய நண்பர்களும் செய்து வருகி றார்கள். கரோனா ஊரடங்கு காலத்தில் ‘ஆக்ஸிஜன் செறி வூட்டிகள்’ சேவை, தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த 150 குடும்பங்களுக்கு 3 வேளை உணவு விநியோகம், தொற்றுக்கு ஆளானவர்களை மருத்துவமனை களில் சேர்த்தது, அதன் மூலம் இரண்டு முறை தொற்றுக்கு ஆளானது என 70 நாள்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக இவர்கள் செய்த சேவையை வேலூர் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது!
- சமீபத்தில் மக்கள் களப்பணி இயக்கத்தின் 17ஆவது ஆண்டு விழா வேலூரில் நடைபெற்றது. அதில் வேலூர், அதனை சுற்றியுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கு அதிநவீன செயற்கைக் கால்கள் இலவசமாகப் பொருத்தப்பட்டன. வேலூரில் 170 ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சீருடை வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் ரவிசங்கர் நம்முடன் உரையாடினார்:
விழிகள் திறந்தன:
- “இந்த அதிநவீன செயற்கைக் கால்களை நாங்கள் தரும் அளவு களுக்கு ஏற்ப இலவசமாக வழங்கும் கோவையின் ‘ரவுண்ட் டேபிள் 31’ அமைப்பை வணங்குகிறேன். இவர்களைப் போன்றவர்களால்தான் மக்கள் களப்பணி இயக்கம் சேவை செய்ய முடிகிறது. நான் பிறந்து, வளர்ந்தது வேலூரில்தான். 2007இல் கால்நடை மருத்துவம் படிக்கச் சென்னைக்குச் சென்றேன். தாம்பரத்திலிருந்து மின்சார ரயிலில் பல்கலைக்கழகத்துக்குச் செல்வேன். அதில் பல குழுக்களாகப் பார்வையற்றோர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்வார்கள்.
- அவர்கள் சுரங்கப்பாதையைக் கடக்க, ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டார்கள். அவர்களை அழைத்துச் செல்ல முன்பின் அறியாத யாரோ ஒரு கருணையாளருக்காகக் காத்திருந்ததைப் பார்த்தபோது, எனக்குக் குற்றவுணர்வாகிவிட்டது. காலை 8 மணிக்குப் பூங்கா நிலையம் வந்து அவர்கள் சுரங்கப் பாதை வழியாக சென்ட்ரல் நிலையம் அடைய உதவ ஆரம்பித்தேன். அடுத்த சில நாள்களிலேயே ‘சங்கர் வந்துட்டீங்களா?’ என்று கேட்டார்கள். அவர்களுடன் நட்பு உருவானதில் வார இறுதி நாள்களில் அவர்களின் வீடுகளுக்கும் அவர்களது சங்கத்துக்கும் நண்பர்களுடன் சென்று உதவினேன். பார்வை யற்றோரின் வழியாக என்னு டைய விழிகள் திறந்தன.
- அவர்கள் வழியாகச் சென்னையில் சில முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் பள்ளி, கில்ட் டிரஸ்ட் என்று ஒரு தன்னார்வலராக என்னால் முடிந்த உதவியையும் உடலுழைப்பையும் கொடுத்தேன். உதவி பெற்றவர்களின் நிம்மதியிலிருந்து சுரக்கும் கண்ணீர்த் துளிகள் என் கைகளை நனைத்திருக்கின்றன. அதுதான் ‘நிற்காதே.. உதவிக்காக எண்ணற்ற எளியவர்கள் காத்திருக்கிறார்கள்’ என்று என்னை வழிநடத்தியது.
- படிப்பு முடிந்து வேலூர் வந்ததும் அரசுப் பணி கிடைத்தது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேவை செய்வோம் என நண்பர்களை அழைத்தேன். அவர்களும் எனக்குத் துணை இருப்பதாகச் சொன்னார்கள். அப்படித்தான் 2008இல் ‘மக்கள் களப் பணி இயக்க’த்தைத் தொடங்கினேன்.
சேவைகள் பலவிதம்:
- “முதலாவதாக நாங்கள் கவனம் செலுத்தியது கிராமப்புறப் பெண்களை அதிகம் பாதிக்கும் ‘அனிமியா’ என்கிற ரத்தசோகை நோய் ஒழிப்பு முகாம்கள். அதைக் கண்டறிய ஒவ்வொரு கிராமமாகச் சென்று, பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து, அதன் அளவு 11க்கும் கீழே இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் தொடங்கினோம். அத்துடன் ரத்தம் அதிகரிக்கக் கிராமத்தில் கிடைக்கும் முருங்கைக் கீரை உள்பட சில உணவு வகைகளைக் கூடுதலாக எடுத்துக்கொள்ள ஆலோசனையும் வழங்கினோம்.
- 3 மாதங்களுக்குப் பிறகு ஹீமோகுளோபின் சோதனை செய்து பார்த்ததில் பெரும்பாலான பெண்கள் குணமடைந்திருந்தனர். பணி தொடர்கிறது. வேர்களைக் குணமாக்கினால் அடுத்த தலைமுறை விருட்சங்களாக எழும். எளிய மக்களுக் குச் சேவை என்று வந்து விட்டால், ஒரு குறிப்பிட்ட சேவைதான் செய்வோம் என்று இருக்க முடியாது என்பதால், அதற்காக 24 மணிநேர ஹெல்ப் லைன் சேவையை முதல் கட்டமாக வேலூரில் ஆரம்பித்திருக்கிறோம்.
- “மக்களின் குறைகளைக் கேட்க நண்பனைப்போல் ஒரு அமைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் தலைபோகிற பிரச்சினைகளை, அவசரகால உதவிகளைக் கேட்க முடியும். அரசுதான் முதல் ஆபத்பாந்தவன் என்றாலும் மக்கள் களப்பணி இயக்கம் போன்ற தன்னார்வலர் அமைப்பு, பதற்றத்தில் என்ன முடிவு எடுப்பது, எங்கு செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் நிற்பவர்களுக்கு வழிகாட்டும் சேவையை ஹெல்ப் லைன் வழியாக வழங்குவதே இதன் நோக்கம்” என்கிறார் ரவிசங்கர். பெருந்தொற்றுக் காலத்தில் 30 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க, வங்கியில் 18 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதை இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறார் இந்த ரவிசங்கர்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2024)