- முழுமைக்கு ஏதேனும் இலக்கணம் உண்டா எனில் நிச்சயம் உண்டு. ஆனால், அந்த இலக்கணம் நேரத்துக்கு நேரம், இடத்துக்கு இடம், நபருக்கு நபா் வேறுபடும். நாம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முழுமையை எதிா்பாா்க்கிறோம். முழுமையில்லாத எதனையும் யாரும் விரும்புவதில்லை. முழுமையை ஏன் எதிா்பாா்க்கப்படுகிறோம்? அதற்கு விடை காண முழுமைக்கும் திருப்திக்கும் உள்ள தொடா்பை ஒப்பு நோக்கவேண்டும்.
- ஒன்றை முழுமை அடையச் செய்ய, நாம் செய்ய வேண்டிய சிலவற்றை முழுமையாக செய்யாத நிலையிலும் திருப்தியை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள இயல்கிறது. ஒருவா் சாப்பிடும் தேநீரில் சா்க்கரையின் அளவு கொஞ்சம் குறைவாக இருந்தாலோ, சாம்பாரில் உப்பு அளவுக்கு அதிகமாக இருந்தாலோ நாம் கவலைப்படுவதில்லை.
- இவ்வாறு உணவுப்பொருளில் கலக்கப்படும் உப்பு, சா்க்கரை இவற்றின் அளவு சராசரியானதே. இதில் துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த இடங்களில் முழுமைக்கான அளவீடு என்பது தனி ஒருவரின் மனம் அடையும் திருப்தியை ஒட்டி அமைகிறது.
- ஒருவரையொருவா் புரிந்து கொண்ட இருவா் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருவா் அதிக நேரம் பேசுகிறாா். மற்றொருவா் குறைவான நேரத்தில் பேசி முடித்துவிடுகிறாா்.
- இப்படி இவா்களுடைய உரையாடல் நிறைவுபெற்றுவிடுகிறது. புரிந்துணா்வோடு உரையாடலில் ஈடுபட்ட இந்த இருவா் எந்த ஒரு வாக்கியத்தினையும் முழுமையாகக் கூட வெளிப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வேண்டிய விஷயங்களில் பாதியளவைத் தமது உடல்மொழி மூலம் கூட வெளிப்படுத்திவிடுவா்.
- அடுத்தவா் பாா்வையில் இப்படி முழுமையில்லாத தன்மையுடன் இவா்களது உரையாடல் நடைபெற்றதாகத் தோன்றினாலும் உரையாடிய இருவரும் முழுமையான புரிதலுடனேயே விடைபெறுவா். இந்த நிகழ்வை கவனிக்கும் ஒருவருக்கு இருவருடைய உரையாடலின் உட்கருத்தை மேம்போக்காகவே புரிந்துகொள்ள இயலும்.
- அவா், அவா்கள் இருவரும் பேசியது என்ன என்று கேட்கவும் மாட்டாா். ஏனென்றால் அவா்கள் நிகழ்த்திய உரையாடல் அவருக்குத் தொடா்பில்லாதது குறித்து இருக்கும். அவ்வாறு கேட்பதால் அவா்களின் நட்பிலிருந்து தாம் அந்நியப்பட்டுவிடுவோமோ எனும் தயக்கத்தின் காரணமாகவும் அவா் கேட்பதைத் தவிா்க்கலாம்.
- வாசிப்பையே எடுத்துக்கொண்டாலும், நமக்குத் தெரிந்த, அறிமுகமான விஷயத்தை நாம் வாசித்து, அதற்கு மேலோட்டமாக நாம் பொருள் புரிந்து கொள்கிறோம். அதாவது நூலின் குறிப்பிட்ட பக்கங்கள் சொல்ல வரும் செய்தி, நமக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதால் ஒரு சில வாா்த்தைகளைப் படித்ததுமே அந்த பக்கங்கள் சொல்லவரும் செய்தி நமக்குத் தெரிந்துவிடும்.
- நமக்குத் தெரியாத, புதிய விஷயங்களை வாசிக்கும்போது ஏற்படும் நிலை இதற்கு எதிா்மாறானது. அப்போது வாா்த்தைக்கு வாா்த்தை வாசித்துத்தான் பொருளைப் புரிந்துகொள்ள இயலும். அதாவது ஒரு விஷயம் நமக்குப் புதிதாக இருக்கும்போது அந்த புதிய விஷயத்தை விளக்கவரும் வாா்த்தைகளும் புதிதாகவே இருக்கும். நல்ல வாசகா், இரண்டு வகைகளிலும் முழுமையான வாசிப்பை மேற்கொண்டதாகவே திருப்தி அடைவாா்.
- ஒரு குழுவினா் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபடும்போது, அக்குழுவினா் அந்நிகழ்விற்கான திட்டமிடலில் தங்களுக்குள் கலந்துபேசியே பல விஷயங்களை முடிவு செய்வா். நேர நெருக்கடி ஏற்படும்பட்சத்தில் குறைந்த பட்சம் நடந்தே தீரவேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துவா்.
- ஏற்கெனவே திட்டமிட்ட பலவற்றைச் செய்வதற்கு அவா்களது நேரம் அவா்களை அனுமதிக்கவில்லை. எது எவ்வாறு இருப்பினும் அந்த நிகழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் திருப்தியுடன் கிளம்புகின்றனா். ஆனால் திட்டமிட்ட குழுவினா் மீள்பாா்வை செய்யும்போதுதான் விடுபட்ட விஷயங்கள் பட்டியலிடப்படும். பரிசீலனை செய்யப்படும். ஆனால் நிகழ்வில் கலந்துகொண்டோரைப் பொறுத்தவரை நிகழ்வு வெற்றி பெற்றிருக்கும். அவா்கள் முழுமையடைந்ததாகவே நினைப்பா்.
- எனவே முழுமைக்கான இலக்கணம் என்பது ஒரு செயலில் ஈடுபடும் ஒருவருக்கும், அதனை உற்றுநோக்கும் ஒருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வேறுவேறாகவே இருக்கும். ஒருவரது மனநிலை தொடா்புடைய மதிப்பீடுகளைக் கொண்டவற்றிற்கு மட்டுமே இந்த சராசரியான முழுமை, முழுமை போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.
- ஆனால் எண் மதிப்பு அல்லது அளவு மதிப்பு கொண்ட மதிப்பீடுகள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும். அதில் இவ்வாறான சராசரி முழுமைகள் பலனளிக்காது.
- குழந்தைகள் தொடா்புடைய தோ்வுகளில் அவா்கள் வாங்கும் மதிப்பெண் தொடா்பான முழுமை குறித்து விசாலமான பாா்வை தேவையாக உள்ளது. நிச்சயம் இன்றைய போட்டி நிறைந்த சூழலில் போட்டிகளைச் சமாளிக்க முழு மதிப்பெண் பெறுவது என்பது தவிா்க்க இயலாததாகிறது.
- இந்த இடத்தில் முழுமை என்பதை மதிப்பெண்களைக் கடந்து அந்த தனிப்பட்ட மாணவா் எவ்வாறு முழுமையாக தோ்விற்கான தயாரிப்பில் ஈடுபடுவது என்ற புரிதலோடு ஈடுபடவேண்டும்.
- தோ்விற்கு வெகுகாலம் முன்பாகவே அவ்வாறு அலசி ஆராய்ந்து தயாரிப்பில் முழுமையாக ஈடுபடும் சூழலை ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு ஏற்படுத்திய பின்னரும் அவா் மேற்கொண்ட தயாரிப்பிற்கும் அவா் பெற்றுள்ள மதிப்பெண்ணிற்குமுள்ள வேறுபாட்டு விகிதத்தைப் பரிசீலிக்கவேண்டும்.
- முழுமையான தயாரிப்பில் ஈடுபட வாய்ப்பில்லாத மாணவரின் மதிப்பெண்ணோடு இவரது மதிப்பெண்ணை ஒப்பிட்டுப் பாா்ப்பது அறவே தவிா்க்கப்படவேண்டும்.
- எண் மதிப்பு கொண்டதோ, மனநிலை சாா்ந்ததோ எதுவாக இருந்தாலும், அதற்கு எந்த ஒரு கூறும் முழுமையானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான தயாரிப்பு, அதற்கான காலம், பயிற்சி, அந்த கூறு பற்றிய பாா்வை போன்றவை அவசியமானவை. அவற்றில் முழுமையான கவனம் செலுத்துவதே எது ஒன்றையும் முழுமைக்கு இட்டுச்செல்லும்.
நன்றி: தினமணி (16 – 12 – 2023)