- மனிதர்களாகிய நாம் வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடுகிறோம். ஒருபக்கம் ஏலியன்கள் பூமிக்கு வந்த கதைகள் நிறைய இருந்தாலும் மறுபக்கம் விஞ்ஞானிகளின் தேடலுக்கு உறுதியான பதில்கள் கிடைப்பதில்லை. உண்மையில் வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா?
- இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களைத் தேடும் முயற்சியில் இரண்டு வகையான அணுகுமுறைகள் இருக்கின்றன. ஒன்று உயிர்க்குறியீடுகளுக்கான (Bio Signatures) தேடல். இன்னொன்று தொழில்நுட்பக் குறியீடுகளுக்கான (Techno Signatures) தேடல்.
- வேற்றுக் கோளில் உள்ள உயிர்கள் மனிதர்களைப் போலவே தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்து இருக்கலாம் என்று ஒரு பார்வை இருக்கிறது. அதனால், விண்வெளியில் கிடைக்கும் ரேடியோ அலைகள், தொழில்நுட்பக் குறியீடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, அவை வேற்றுக் கோள் நாகரிகங்களால் உருவாக்கப்பட்டவையா என அறிய முற்படுகின்றனர். இதற்காக Search for Extraterrestrial Intelligence போன்ற அமைப்புகள் இயங்குகின்றன.
- ஒருவேளை வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருந்தால், அவை நம்மைப் போன்று தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் புத்திஜீவியாகப் பரிணாமம் அடையாமலும் இருக்கலாம் அல்லவா? இதற்காக ஏதேனும் உயிரினங்கள் இருக்கின்றனவா என அறிய உயிர்க்குறியீடுகளை ஆராய்கின்றனர்.
- உயிர்க்குறியீடுகள் என்றால் உயிரினத்தால் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருள்கள். எந்த ஓர் உயிரினமாக இருந்தாலும் கழிவுகளை உற்பத்தி செய்யும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது விளையும் பொருள். அவற்றைச் சில நுண்ணுயிரிகளும் தாவரங்களும் உருவாக்குகின்றன. இவை ஒரு கோளில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால், அங்கே உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதையும் கண்டடைந்துவிடலாம் அல்லவா? சரி, இதை விஞ்ஞானிகள் எப்படிச் செய்கின்றனர்?
- தொலைதூரத்தில் உள்ள கோளில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு விண்வெளி உயிரியலாளர்கள் அந்தக் கோளின் வளிமண்டலத்தின் வழி ஊடுருவி வரும் நட்சத்திர ஒளியை ஆராய்கிறார்கள். ஒருவேளை கோளின் வளிமண்டலத்திலோ தரைப் பரப்பிலோ உயிரினங்கள் இருந்தால், அவற்றின் வழியாக ஊடுருவி வரும் ஒளி அதற்கான தடயங்களைக் கொண்டிருக்கும்.
- நம் பூமியையே எடுத்துக்கொள்வோம். சூரியனிலிருந்து வெளிவரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தில் ஊடுருவிச் செல்லும்போது, அதன் குறிப்பிட்ட சில அலைநீளங்கள் பூமியின் வளிமண்டலத்தில் நிரம்பியுள்ள வாயுக்களாலும் பருப்பொருள்களாலும் உள்கொள்ளப்படும்.
- பூமியின் பரப்பில் உள்ள தாவரங்களில் இருக்கும் பச்சையம், ஒளியில் உள்ள சிவப்பு, நீலம் உள்ளிட்ட அலைநீளங்களை உள்வாங்கிவிட்டு, பச்சை நிறத்தை மட்டும் வெளியிடுகிறது. இவ்வாறு புறக்கோளின் ஒவ்வொரு பொருளிலும் ஊடுருவி வெளிவரும் ஒளியை வானியல் ஆய்வாளர்கள் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியின் உதவியுடன் ஆராயும்போது, அதன் வளிமண்டலம் எவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அறிய முடியும்.
- இதை வைத்து அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பதும் தெரியவரும். இதுதான் உயிர்க்குறியீடுகளை வைத்து அறியும் முறை.
- இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில சூழல்களில் உயிரினங்கள் இல்லாமலே உயிர்க்குறியீடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணத்திற்கு, தாவரங்கள் மட்டும் ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆக்சிஜனை உண்டு பண்ணுவதில்லை, சூரியக் கதிர்கள் நீரில் விழும்போது அது நீரின் மூலக்கூறுகளைச் சிதைத்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியாகப் பிரிக்கிறது.
- இதன் காரணமாகவே ஏராளமான புறக்கோள்கள் ஆக்சிஜனைக் கொண்டுள்ளன. அதனால் வேற்று உலக உயிரினங்களை ஆராயும் வானியலாளர்கள் தவறான குறியீடுகளைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் உயிர்க்குறியீடுகள்தான் இப்போதைக்கு உயிரினங்களைத் தேடும் பணியில் நமக்கு ஆதாரமாக இருக்கின்றன.
- இதை வைத்துப் பார்க்கும்போது உயிரினங்கள் உருவாவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள், நியூக்ளியோபேஸ்களைக் கட்டமைக்கத் தேவைப்படும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட தனிமங்கள் பிரபஞ்சத்தில் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி விஞ்ஞானிகள் தேடும் முக்கியமான இன்னொரு விஷயம் திரவ நீர்.
- மேலே கூறிய தனிமங்கள் ஒரு கோளில் இருந்தாலும் அவை வேதியியல் வினைபுரிவதற்குத் திரவ நீர் தேவைப்படுகிறது. இந்த நீரைத் தேடுவதுதான் விஞ்ஞானிகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் கோள்களில் நீர் இருந்தால் அவை ஆவியாகிவிடும்.
- தூரத்தில் உள்ள கோள்களில் நீர் இருந்தால், அவை உறைந்த நிலையில்தான் கிடைக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தைத் தேடுவதுதான் சவால். இதனை விஞ்ஞானிகள் உயிர் மண்டலம் (Goldilock Zone) என்று அழைக்கின்றனர். பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு கோள்கள் இந்த உயிர் மண்டலத்திற்குள் இருக்கின்றன.
- நம் சூரியக் குடும்பத்திலேயே பூமியைத் தவிர இரண்டு கோள்கள் உயிரினங்களைக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒன்று வெள்ளி, மற்றொன்று செவ்வாய். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த வளிமண்டலச் சூழலில் வெள்ளியில் ஒருசெல் உயிர்கள் இருந்திருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- இன்னமும்கூட வெள்ளியின் வளிமண்டலத்திற்கு மேல், அதாவது வெப்பமும் அழுத்தமும் பூமியை ஒத்த அளவில் உள்ள இடங்களில் உயிர்க் குறியீடுகள் கிடைப்பதாகச் சொல்கின்றனர்.
- அதே போல செவ்வாயின் நிலப்பரப்பை ஆராய்ந்ததில் அங்கே நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. நீரின் போக்கினால் உருவான பள்ளத்தாக்குகள் செவ்வாய் எங்கும் காணக் கிடைக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, அங்கேயும் ஒற்றை செல் உயிரினங்கள் இருந்திருக்கக்கூடும் என்கிற கணிப்பு உருவாகுகிறது. அவை இன்னமும் செவ்வாயின் நிலப்பரப்பிற்கு அடியில் வாழ்வதற்கான சாத்தியமும் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
- இதைத் தவிர வியாழனின் நிலவான கனிமேட், ஐரோப்பா, சனிக் கோளின் நிலவான டைட்டன், என்செலாடஸ் ஆகிய துணைக்கோள்களில் நீர், உயிரினங்களை உருவாக்குவதற்குத் தேவையான மூலக்கூறுகள் இருப்பது உறுதியாகிறது. இதனால், அங்கேயும் எதிர்காலத்தில் உயிரினங்கள் கண்டறியப்படலாம் என நம்பப்படுகிறது.
- இருப்பினும் விண்வெளியில் பல்வேறு இடங்களுக்கு நேரே சென்று ஆராய்வதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பதால் நமது தேடலும் விடை அறியாமலேயே தொடர்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 04 – 2024)