- வேலாயுதம் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகளில், முஹம்மது அஸ்கர் எழுதிய பதிவு கவனம் ஈர்த்தது.
- மாணவப் பருவத்தில் தன்னுடைய பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த வேலாயுதம், தன்னுடைய பேச்சுத்திறனை அடையாளம் கண்டு பாராட்டியதாகவும் அது முதலாக எப்போது அவரை வீதியில் கண்டாலும், வாகனத்திலிருந்து இறங்கி நலம் விசாரித்துச் செல்வார் என்றும் அஸ்கர் குறிப்பிடுகிறார். தன்னுடைய தந்தையாருடனும் அவருக்கு ஆழமான நட்பு உருவாகியிருந்தது என்று சொல்லும் அஸ்கர் பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இப்படி முடிக்கிறார், “மனிதர்களை வேறுபடுத்தும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து அன்பைப் பொழிந்தவர் வேலாயுதம்!”
- ஏராளமான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களால் அஸ்கருடைய பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதில் ஆச்சரியமே இல்லை. மண்டைக்காடு கலவரம் நிகழ்ந்த கன்னியாகுமரி பிராந்தியத்திலிருந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் வளர்ந்து, தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற உறுப்பினராக 1996இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேலாயுதம். அவருடைய தொகுதியைச் சேர்ந்த திருவிதாங்காடு முஸ்லிம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர் அஸ்கர்.
- வெறுப்புப் பேச்சுகளால் இன்று சூழப்பட்டிருக்கும் அரசியல் களத்தில், தமிழகத்தின் நீண்ட நாகரிக அரசியல் மரபில் வலதுசாரி வழித்தோன்றல்களில் ஒருவர் வேலாயுதம். ராஜாஜி தொடங்கி இல.கணேசன் வரை அப்படி ஒரு தொடர்ச்சியும் இங்கே உண்டுதானே!
எளிய பின்னணியில் வந்தவர்
- வேலாயுதம் 1950இல் பிறந்தவர். குமரி மாவட்டத்தில் மட்டுமே குவிந்திருக்கும் ‘கிருஷ்ணன் வகை’ சமூகத்தைச் சேர்ந்தவர். பெரிய எண்ணிக்கையோ, செல்வாக்கோ இல்லாத மிகச் சிறிய சமூகம் இது. பள்ளி நாட்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.
- பத்மாநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில், 1989இல் அவரை வேட்பாளராக நிறுத்தியது பாஜக. சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவரான வேலாயுதம், தன்னுடைய நிலத்தை விற்றும், உண்டியல் குலுக்கி திரள் நிதி சேகரித்தும்தான் தேர்தல் செலவை எதிர்கொண்டார் என்று சொல்லப்படுவது உண்டு. தோல்வியைத் தழுவினார். அடுத்து 1991 தேர்தல். அதிலும் தோல்வியைத் தழுவினார். 1996 தேர்தலில் வேலாயுதம் வென்றார்.
முக்கியத்துவம் வாய்ந்த 1996-2001
- அரசியல்ரீதிதாக 1996-2001 காலகட்டத்திய தமிழகத்தின் 11வது சட்டமன்றம் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நல்லதொரு ஆட்சியைத் தந்த மன்றமும்கூட அது.
- மொத்தமுள்ள 234 இடங்களில் 221 திமுக கூட்டணியால் அப்போது வெல்லப்பட்டிருந்ததோடு, அதிமுக வெறும் 4 இடங்களுக்குள் சுருங்கியிருந்த சட்டமன்றம் அது. தவிர, 40 மக்களவைத் தொகுதிகளும் திமுக கூட்டணி வசம் இருந்தன. 1996 - 1998 கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் பிரதமர்களைத் தீர்மானிக்கும் இடத்தில், தேவ கௌடா, குஜ்ரால் அரசில் வலுவான இடத்தில் கருணாநிதி இருந்தார்.
- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பக்கத்தில் தனிப் பெரும் கட்சியாக பாஜக இருந்தது. தமிழகத்தில் பாஜக தனித்து நின்று எதிர்கொண்ட இந்தத் தேர்தலில், அதன் 143 வேட்பாளர்களில் வேலாயுதம் மட்டுமே அப்போது வென்றிருந்தார்.
- ஆச்சரியமூட்டும் வகையில், தமிழகச் சட்டமன்றத்தில் மிக இணக்கமான சூழல் நிலவியது. தனது தொகுதி நலன் சார்ந்து மட்டும் பேசுபவராகவும் தனக்காக எதுவும் கோராதவராகவும் இருந்த வேலாயுதம் எல்லோரையும் கவர்ந்திருந்தார். வேலாயுதத்துக்கு மிகுந்த மரியாதை தந்தார் முதல்வர் கருணாநிதி. சட்டமன்ற ஆய்வுக் குழுவில் அவருக்கு இடம் கொடுத்தார்.
நல்ல எதிர்க்கட்சிக்காரர்
- பொதுவாக இத்தகைய கூட்டங்கள் அறிவிக்கப்படும் நேரத்தைக் கடந்து ஆரம்பிக்கப்படுவதே அந்நாட்களில் வழக்கமாக இருந்திருக்கிறது. சொல்லப்பட்டபடி சரியாக 10 மணிக்கு கூட்டத்துக்கு வந்துவிட்ட வேலாயுதம், “மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி இருக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார். சகலரும் அதிர்ச்சியில் பார்க்க, “நானும் 10 மணிக்கே வந்துவிட்டேன். எல்லோரும் வந்து சேரட்டும் என்று என் அறையில் அமர்ந்தபடி கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று கூறிய கருணாநிதி அதற்குப் பின் இந்தக் கூட்டங்கள் கொஞ்சமும் தாமதமின்றி நடத்தப்படுவதை உறுதிசெய்திருக்கிறார்.
- குமரி மாவட்டத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் அழைக்கப்பட்டிருக்கிறார். வேலாயுதமும் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறார். குமரியைத் தமிழகத்தோடு இணைக்கும் எல்லைப் போராட்ட தியாகிகள் 172 பேருக்கு ஓய்வூதியம் அளிப்பது, மாம்பழத்துறையாறு அணை இவையெல்லாம் வேலாயுதம் முன்வைத்து அரசால் அப்போது நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்.
- சட்டமன்றத்தில் ஒருமுறை இந்துத்துவத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் உயர்த்திப் பேசத் தலைப்பட்டிருக்கிறார் வேலாயுதம். பலரும் குறுக்கிட்டிருக்கின்றனர். சட்டென்று எழுந்த கருணாநிதி, “நாம் பேசும்போது அவர் கேட்டார் இல்லையா; இப்போது அவர் பேச நாம் கேட்போம்” என்று சொல்லி நீண்ட நேரம் வேலாயுதம் பேச வழிவகுத்ததைப் பின்னாளில், "நல்ல ஜனநாயகர் கருணாநிதி" என்று நினைவுகூர்ந்திருக்கிறார் வேலாயுதம்.
- ஐக்கிய முன்னணி ஆட்சி கலைந்து 1998 மக்களவைத் தேர்தல் நடந்தபோது, அதிமுகவுடன் கூட்டணியுறவு கொண்டது பாஜக. அதிமுக 18 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக அரசுக்கு அதிமுக அப்போது விதித்த ஒரே நிர்ப்பந்தம், “மாநிலத்தில் உள்ள திமுக அரசை பதவி நீக்க வேண்டும்!” பாஜக இதற்கு செவி சாய்க்காத சூழலில் ஆதரவைத் திரும்ப பெற்றார் ஜெயலலிதா.
- வாஜ்பாய் அரசு கவிழ்ந்து, நாடு இன்னொரு தேர்தலை எதிர்கொண்டது. இடைப்பட்ட காலத்தில் நடந்த மாற்றங்கள் எதுவும் வேலாயுதத்திடம் பெரிய மாற்றங்களை உண்டாக்கவில்லை.
- எப்போதும்போல ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி உறுப்பினராக வேலாயுதம் பணியாற்றினார். “அரசை எந்தெந்த விஷயத்தில் எதிர்க்க வேண்டுமோ, எதிர்க்கிறேன்; எங்கெல்லாம் மக்களுக்காக அரசுடன் உரையாட வேண்டுமோ, அப்போதெல்லாம் உரையாடுகிறேன். நான் என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் கடமைப்பட்டவன்” என்றார். அரசியல் கொதிநிலையில் இருந்த 1998இல் இதய நோயால் பாதிக்கப்பட்ட வேலாயுதம் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது அவரை நேரில் சென்று கருணாநிதி சந்தித்தது தேசிய அளவில் செய்தி ஆனது.
நீ நீயாக இரு!
- இதற்குப் பின் 1999இல் திமுக - பாஜக கூட்டணி அமைந்து, தேர்தலில் வென்று கூட்டணி அரசும் அமைந்தது. “பாஜக தலைவர்கள் பலர் அப்போது திமுகவோடு நெருக்கமாகினர்; தனிப்பட்ட வகையிலும் காரியங்களைச் சாதித்துக்கொண்டனர்; அப்போதும் வேலாயுதம் முன்புபோலதான் தனித்துவத்தோடு இருந்தார்” என்கிறார்கள்.
- அடுத்து வந்த 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் வேலாயுதம் தோல்வியைத் தழுவினார். “எனக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டது” என்றவர் சமூகப் பணிகளுக்கு களம் மாறிக்கொண்டார். ஆர்எஸ்எஸ் சார்ந்த சேவா பாரதி அமைப்பானது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் நடத்த இடம் தேடியபோது, புதிய கட்டிடம் கட்டப்படும் வரை தன்னுடைய வீட்டை அவர்களுக்குத் தந்துவிட்டு, சேவா பாரதி அலுவலகத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தார் என்று சொல்கிறார்கள்.
- உள்ளூர் பாஜகவினரில் ஒரு பிரிவினருக்கு வேலாயுதம் மீது வருத்தம் இருந்தது. “கட்சியினர் பிரச்சினை என்று அவர் உதவியை நாடினால், அவர்கள் மீது தவறில்லை என்றால் துணை வருவார்; இல்லாதபட்சத்தில் உதறிவிடுவார்” என்ற பேச்சு குமரி வட்டாரத்தில் உண்டு. அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, எல்லோரிடமும் அவர் இணக்கமாக இருந்ததையும்கூட குறையாகப் பேசியோர் உண்டு.
- வேலாயுதத்தின் இந்த நாகரிக அரசியலுக்காகவே இன்று அவரை மக்கள் நினைவுகூர்கின்றனர்!
நன்றி: அருஞ்சொல் (13 – 05 – 2024)