- "யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்று கூறுவார்கள். யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியோசையை வைத்தே யானை வருகிறது என்று அறிந்து கொள்வார்கள். மக்கள் தெரிந்து கொள்வதற்காகவே கோயில் யானையின் கழுத்தில் மணி கட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தனர்.
- அதுபோல மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன. அக்காலம் போல அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் வழக்கம் இப்போது இல்லாமல் போய் விட்டது. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எந்தவொரு கட்சிக்கும் இப்போது இல்லை. யாரோடு சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்பதே ஒரே குறிக்கோள்.
- ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, விதிமுறைகள் எல்லாம் இருப்பது உண்மைதான். இப்போது அதையெல்லாம் பார்த்தால் ஒருசில இடங்களும் கிடைக்காமல் போய்விடும். கொள்கை கோட்பாடுகளையே பேசும் இடதுசாரிகளே இப்போது அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அவர்களும் சூழ்நிலை கருதி அடக்கி வாசிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.
- வரும் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரஸூக்கும்தான் நேரடிப் போட்டியாகும். காங்கிரஸ் கட்சி அகில இந்திய நிலையில் கூட்டணி அமைப்பதே இன்னும் முழுமையடையவில்லை. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து விட்டார். மேற்குவங்க முதல்வர் மம்தாவும், தில்லி முதல்வர் கேஜரிவாலும் தனித்து நிற்பதாக அறிவித்து விட்டனர். இப்போதே இப்படியென்றால், தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்களோ?
- ஆளும் கட்சியான பாஜகவைப் பொறுத்தவரை அயோத்தியில் இராமர் கோயிலைத் திறந்து வைத்துவிட்டு, தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டது. "இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கியே தீருவேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். அதற்காகவே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். ஆனால் மக்களின் மனநிலை என்ன?
- 2022-ஆம் ஆண்டின் இறுதியில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சில இளைஞர்கள் நுழைந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களுடைய முழக்கங்கள் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை முன்வைத்தன. ஆனால், அவர்கள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டது.
- கல்வி, பொருளாதாரம், விண்வெளி, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை இருந்துவருகிறது. விலைவாசி உயர்வும், வேலையில்லாமையும் இளைஞர்களின் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கின்றன.
- விடுதலைக்குப் பிறகு, நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய துறையாக வேளாண் துறையும், சேவைத் துறையும் இருந்தன. அடுத்து உலகமயமாக்கல் காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியது.
- இவ்வாறு பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவானாலும் இன்னும் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். வேலையில்லா பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. தனிநபர் ஒருவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை பெற முடியாத சூழல் வேலைவாய்ப்பின்மை என்று வரையறுக்கப்படுகிறது.
- இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை என்பது பல்வேறு வகையான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கிறது. 2017-18-இல் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6 விழுக்காடாக இருந்தது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து 2022-2023-ஆம் ஆண்டில் 32 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் கணக்கெடுப்பின் அண்மைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
- இதில் 2022-23 காலகட்டத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை குறைந்திருந்தாலும், வேலை வாய்ப்பைப் பெறுவதில் நாடு முழுவதும் சமனற்ற நிலையே நீடிக்கிறது. மேலைநாடுகளில் பட்டதாரி ஒருவர் வேலைவாய்ப்பைப் பெற, அவர் முன்னுள்ள வாய்ப்புகள் ஏராளம். இந்திய இளைஞர்களுக்கு அத்தகைய சூழ்நிலை அமையவில்லை. அதாவது, உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் இங்கு மிகக் குறைவாகவே உள்ளன.
- 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் பல மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. அந்தமான்-நிக்கோபர், லடாக், ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பின்மை கூடுதலாக உள்ளது. பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், ஒடிஸாவின் நிலைமை இன்னும் மோசம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2023 ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலங்கள் மிகக் குறைவான வேலைவாய்ப்பின்மை விகிதத்தையே பதிவு செய்துள்ளன.
- மக்கள்தொகையில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்து சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள்தொகைப் பெருக்கம் உறுதுணையாக இருக்கக் கூடிய காரணி என்றாலும், வேலைவாய்ப்பின்மை நிலவும் சூழ்நிலையில் அதுவே சுமையாகவும் மாறிவிடும். அந்த வகையில் அதிகரித்து வரும் இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
- அடுத்து, மாணவர்களிடம் நிலவும் திறமைக் குறைபாடு ஒரு பிரச்னையாகும். கல்லூரியிலிருந்து வெளிவரும் இளைஞர்கள் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளுவதற்குத் தேவையான திறமையைக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் உருவானாலும் அவற்றை மாணவர்களால் தங்களுடையதாக்கிக் கொள்ள முடியவில்லை.
- இதனால் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் சேர்கிறார்கள். ஒருசிலர் போலியான மோசடி வேலைகளில் சிக்கி ஏமாற்றம் அடைகிறார்கள்.
- அதிகரிக்கும் பணவீக்கமும்கூட, வேலைவாய்ப்பின்மை ஏற்படக் காரணமாகிறது. அதிகரிக்கும் விலைவாசியால் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைகிறது. இதனால் நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இன்னும் அதிகரிக்கிறது.
- உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தக்க வைத்துக் கொள்ள வளர்ந்து வரும் பொருளாதாரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6 விழுக்காடு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று உலக வங்கி குறிப்பிடுகிறது. அதன்படி, வேலைவாய்ப்பு என்பது தனிமனிதர்களுக்கு மட்டும் நன்மை தரக்கூடியது அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் நன்மை சேர்க்கக் கூடியதாகும்.
- வேலைவாய்ப்பின்மையைத் தொடர்ந்து விலைவாசியும் உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டாகவே பன்னாட்டுச் சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் உற்பத்தி குறைவும், தேவை அதிகரிப்பும் ஆகும். எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. அத்துடன் கடும் வறட்சியால் அரிசி உற்பத்தி குறைந்தது.
- அரிசி அதிகம் உற்பத்தியாகும் இந்தோனேசியா தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகிறது. வெளிநாட்டிலிருந்து அரிசி வாங்க முயற்சி செய்து வருகிறது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் உணவு தானிய விலை உயர்வுக்குக் காரணம் தேவையின் அதிகரிப்பும், உற்பத்தியின் குறைவுமே யாகும்.
- உலக அளவில் அரிசி ஏற்பத்தியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் அரிசியின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை உயர்வைத் தவிர்க்க பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு கடந்த ஆண்டு முன் கூட்டியே தடை விதித்தது. அதே சமயம் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான வரியை 20 விழுக்காடாக உயர்த்தியது. இதுவும் பன்னாட்டுச் சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படக் காரணமானது.
- அரிசியைத் தொடர்ந்து, கோதுமை, பருப்பு, வெங்காயம், பூண்டு, மஞ்சள், சில வாசனைப் பொருள்களின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. அதிலும் துவரம் பருப்பின் சில்லறை விலை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. இதனால் அதன் தேவையை நுகர்வோர் குறைத்துக் கொண்டதாக உணவுத் தொழில் நிறுவனத்தின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- இப்போதைய நிலையில் பொதுச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் இந்திய உணவுக் கழகத்தின் அரிசியை மின் ஏலத்தில் விற்பனை செய்வதன் மூலம் உள்நாட்டு இருப்பை அதிகரித்து, சில்லறை அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கருதிய உணவு அமைச்சகத்தின் முயற்சி பயன் அளிக்கவில்லை.
- இந்நிலையில் "பாரத அரிசி' என்ற பெயரில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பொதுச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசியின் இருப்பு விலையாக ரூ. 29-க்கு இந்திய உணவுக் கழகம் விற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கெனவே விற்பனை நிலையங்கள் மூலம் "பாரத்' என்ற பெயரில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50க்கும், ஒரு கிலோ கடலைப் பருப்பு ரூ.60க்கும் விற்று வருகிறது.
- கடந்த ஆண்டு மட்டும் பொதுச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 3.04 லட்சம் டன் அரிசி மற்றும் 82.89 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்துள்ளது. "மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியம் அடித்தட்டு மக்களிடம் எந்த அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது' என்று இந்திய மதிப்பீட்டின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கூறியுள்ளார்.
- எது எப்படியிருப்பினும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் உணவு தானியங்களின் விலைவாசி உயர்வும், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையும் மத்திய அரசுக்குப் பெரும் சவாலாகும். இந்தச் சவாலை மத்திய - மாநில அரசுகள் சமாளித்தால்தான் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
நன்றி: தினமணி (07 – 02 – 2024)