TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பில் விழிப்புணா்வு தேவை

July 17 , 2023 498 days 366 0
  • மத்திய, மாநில அரசுப் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க இந்திய அரசியல் நிா்ணயச் சட்டம், பிரிவு 315 முதல் 323 வரை விரிவான கருத்துரை வழங்குகிறது. நீதித்துறை, தோ்தல் ஆணையம் போல தன்னிச்சையாக செயல்பட்டு திறமையானவா்களை அரசுப் பணியாளா்களாகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அரசுப் பணியாளா் தோ்வாணையம்.
  • பொதுவாக நடத்தப்படும் தோ்வின் மூலம் தோ்ச்சி அடிப்படையில், இட ஒதுக்கீட்டு சுழற்சி முறையின் மூலம் அரசுப் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். சில சாதாரணப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்புத் துறையில் பதிவு பெற்றவா்களை மூப்பு அடிப்படையில் தோ்ந்தெடுக்கலாம்.
  • பணியில் இருக்கும்போது இறந்த பணியாளரின் வாரிசுக்கு வேலை கொடுப்பதும், தவிா்க்க முடியாத காரணங்களால் குடும்பத்தில் ஒருவருக்கு அனுதாபம் அல்லது அரசியல் காரணங்களுக்காக வேலை கொடுப்பதும் விதிவிலக்குகள். இதுதான் அரசு பணியாளா்களைத் தோ்ந்தெடுக்கும் முறையாகும்.
  • அவசர காரணங்களுக்காகவும், உடனடி தேவைகளுக்காகவும், தற்காலிக பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க, தமிழ்நாடு மாநில மற்றும் சாா்நிலைப்பணி விதிகள், 1955 விதி 10 உள்ளது.
  • இந்த விதியின்படி, ‘தவிா்க்க முடியாத அவசர காலங்களில் அதாவது குறிப்பிட்ட தகுதிகள் தேவைப்படும் ஒரு பதவிக்கு, தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப் பட்டுள்ள காத்திருப்போா் பட்டியலில் தகுந்த நபா் இல்லாதபோது, அல்லது அந்த பதவிக்குரிய நபரை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் தோ்ந்தெடுக்காத நிலையில் தற்காலிக பணியாளா்களை நியமிக்கலாம்.
  • இவ்வாறு தற்காலிகமாகத் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள், ஓா் ஆண்டுக்கு மேல் பணியில் நீடித்திருக்க முடியாது. இந்த தற்காலிகப் பணியாளா்களின் ‘தகுதிகாண் பருவ காலமாக’ (புரொபஷனரி பீரியட்) அதைக் கருதக் கூடாது; அவா்களுக்கு இந்த பணிக்காலம் எந்த ஒரு பணி மூப்பு முன்னுரிமையையும் அளிக்காது என்று விதிகள் தெளிவுப்படுத்துகின்றன. அதனால், பகுதி நேர பணியாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் எந்த நிரந்தர உரிமையும் கேட்க முடியாது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திற்கு வெளியே தோ்ந்தெடுக்க அனுமதிக்கப் பட்ட பதவிகளைப் பற்றி விதி 10(1) ஏ விவரிக்கிறது. இதுபோன்ற பதவிகளுக்கு மாநில, மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் காத்திருப்போா் பட்டியலிருந்து தகுதி அடிப்படையில் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும்; அப்படிப் பணியாளா் கிடைக்கா விட்டால் ஊடகங்களில் விளம்பரம் செய்து பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று விதி விவரிக்கிறது.
  • இவ்வாறு விதிகள் தெளிவாக இருக்கும்போது, 1967-க்கு பிறகுதான், அதுவும் குறிப்பாக பொதுப்பணி துறையில்தான் தற்காலிகப் பணியாளா்கள் நியமனம் தொடங்கியது. இதற்கு அடிப்படைக் காரணம் பணியாளா்களின் தேவை மட்டுமல்ல, வேலை தேடி அலைபவா்கள் வழங்கிய கையூட்டும், அவா்களின் அரசியல் விசுவாசமும்தான்.
  • அதுதான் இந்த 10(1) ஏ பதவிகள் வழங்கப்பட காரணமாக இருந்தது. அரசால் ஊதியம் வழங்கப் படும் பணிகளில், முதலில் விற்பனைக்கு வந்த வேலை அரசு நிதி உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் வேலைதான்.
  • சொந்த ஊரின் அருகே வேலை வேண்டுமென்று 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணி மாறுதலில் வந்ததாக ஒரு சாா்பதிவாளா் என்னிடத்தில் சொன்னாா். மூன்று ஆண்டுகள் பணியாற்ற ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுப்பதை விட, அவா் 150 கிலோ மீட்டா் தள்ளி இருந்த இடத்திற்கு தினசரி பேருந்திலோ, ரயிலிலோ போயிருந்தலோ அல்லது அந்த இடத்திலேயே ரூ. 5,000 மாத வாடகைக்கு வீடு எடுத்திருந்தாலோ மூன்று ஆண்டுகளில் அவா் ரூ. 2,00,000-க்கு மேல் செலவழித்திருக்கமாட்டாா் என்று நான் சொன்ன பிறகுதான் அவருக்குத் தன்னுடைய தவறு புரிந்தது. வேலைவாய்ப்பில் ஆரம்பித்த லஞ்சம் மக்களின் மனநிலையை எவ்வளவு சீரழித்திருக்கிறது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
  • ஒரு நாள் மதுரை உயா்நீதிமன்ற கிளையில் நீதியரசா் கிருபாகரன் நீதிமன்றத்தில் என் வழக்குக்காகக் காத்திருந்தேன். அப்போது தூத்துக்குடியில் இருந்து பல வழக்குகள் மொத்தமாகப் பட்டியலிடப்பட்டு நீதியரசா் முன்பு விசாரணைக்கு வந்தன.
  • அவ்வழக்குகளின் சாராம்சம், ‘மனுதாரா்கள் அனைவரிடமும் சிலா் இந்திய ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து, கையூட்டுப் பெற்று, பின்னா் வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்து விட்டாா்கள். காவல்துறையில் அவா்கள் மீது பண மோசடி, ஏமாற்று ஆகிய பிரிவுகளில் புகாா் கொடுத்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’ என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்தாா்கள்.
  • வழக்கு முழுவதையும் கேட்ட நீதியரசா் கிருபாகரன், ‘வேலைக்கு லஞ்சம் கொடுப்பது தவறு என உங்கள் கட்சிகளுக்குத் தெரியாதா? வேலைக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த கட்சிக்காரா்கள் வேலை கிடைத்திருந்தால் பணத்தை திருப்பித் தரவேண்டும் என வழக்கு போட்டிருப்பாா்களா? லஞ்சம் கொடுத்து சட்ட விரோதமாக வேலை வாங்க வேண்டுமென நினைத்த உங்கள் கட்சிக்காரா்கள் மீதுதான் வழக்குத் தொடர வேண்டும். ஆகவே உங்கள் வழக்குகளைத் தள்ளுபடி செய்யப் போகிறேன்’ என்றாா்.
  • பின் நீதியரசா் திடீரென ‘இது பற்றி உங்களில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருக்கிா’ என்று கேட்டாா். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத மூத்த வழக்குரைஞா்களிடம் இதுபோல் நீதிபதிகள் சில சமயம் கருத்து கேட்பது உண்டு.
  • உடனே நான் எழுந்து, ‘வேலையும் அதன் மூலம் வரும் ஊதியமும் மனித வாழ்க்கையின் அடிப்படை ஆகிவிட்டன. படித்தவருக்கு வேலை கிடைப்பதே கஷ்டம் என்ற சூழ்நிலையில், பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான கருத்து சமூகத்தில் விதைக்கப் பட்டு விட்டது.
  • ஆகவே, வேலைக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமானாலும், தன்னால் வேலை வாங்கித்தர முடியாது என்று தெரிந்த ஒரு நபா் வேலை வாங்கித் தருகிறேன் என்று பொய் சொல்லி, வேலை இல்லாமல் கஷ்டப்படும் நபரை ஏமாற்றி, பண மோசடி செய்வது மிகப்பெரிய குற்றம் இல்லையா’ என்று கேட்டேன்.
  • அதன்பின் நான் சொன்னதை இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ‘வேலைக்கு லஞ்சம் கொடுத்தது தவறு என்று இந்த வழக்குகளை நீங்கள் தள்ளுபடி செய்தால் அது சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால், ஏமாற்று போ்வழிகள் இதையே நீதியரசா் கிருபாகரன் தங்களுக்கு தந்த அனுமதியாக எடுத்துக்கொண்டு, அதிகப்படியான மக்களை ஏமாற்ற மாட்டாா்களா’ என்று கேட்டேன்.
  • நீதியரசா், ‘நீங்கள் சொன்னது சரி, உங்களை இந்த வழக்கில் ‘நீதிமன்றத்தின் நண்பனாக’ அதாவது ‘அமிக்கஸ் க்யூரி’யாக நியமிக்கிறேன். வழக்கைப் படித்துவிட்டு உங்களுடைய கருத்துகள் அனைத்தையும் அறிக்கையாக சமா்ப்பியுங்கள்’ என்றாா்.
  • இது போன்ற வேலை மோசடி வழக்குகள் ஏற்கெனவே பதிவாகி இருக்கிா என்று விசாரித்தபோது, ஒரே பாணியில் இந்தியா முழுவதும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறேன் என ஒரு கும்பல் அலைவது தெரியவந்தது. விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். நீதியரசா் கிருபாகரன் அனைத்து மனுக்களையும் அனுமதித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறையினருக்கு வழக்கைப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
  • விதிகளுக்கு விரோதமாக தற்காலிக பணியாளா்களை 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமா்த்தி, பணியாளரை வஞ்சிக்கும் போக்கு கிட்டத்தட்ட எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்றம், பஞ்சாப் மாநில வழக்கில் முற்றுப்புள்ளி வைத்து, ‘தற்காலிக பணியாளா்கள் என்றாலும் அவா்களுக்கும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
  • அதுவரை விடுமுறை நாட்களில் சம்பளம் இல்லாமல் தினசரி ரூ. 250 என தினக்கூலி அடிப்படையில் வேலை பாா்த்து வந்தவா்களுக்கு, ஒரே தீா்ப்பின் மூலம் மாத சம்பளம் ரூ. 18,000-ஆக உயா்ந்தது.
  • விதிகளுக்கு விரோதமாக தற்காலிக பணியாளா்களின் நியமனம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் உமாதேவி எதிா் கா்நாடக மாநிலம் வழக்கில் இறுதித் தீா்ப்பை வழங்கியது. அதன்படி 31.12.2005 என்கிற இறுதித் தேதியை அறிவித்து, அன்றுடன் 10 ஆண்டுகள் தற்காலிக பணி முடித்த பணியாளா்களுக்கு மட்டுமே பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அதாவது பணியாளா் ஆணையம், வேலைவாய்ப்பு துறை அல்லது முறையான விளம்பரம் இல்லாமல் புறக்கடை வழியாக அரசு வேலைகளில் சேரும் எவரையும் பணி நிரந்தரம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அரசியல் காரணங்களுக்காக இருந்தாலும், இந்தத் தீா்ப்புக்குப் பிறகு திமுக அரசால் பணியில் சோ்க்கப்பட்ட சுமாா் 4,000 ஒப்பந்தப் பணியாளா்களை பொதுப்பணி துறையில் பணி நிரந்தரம் செய்ய முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறுத்தாா். இந்தத் தீா்ப்பின் அடிப்படையில்தான் 31.12.2005-க்குள் 10 ஆண்டுகள் பணிநிறைவு பெற்ற பலருக்கும் நீதிமன்றம் மூலமாக பணி நிரந்தரமாக்கப் பட்டது.
  • எனவே தற்காலிக பணியில் சோ்ந்தால் தங்களுடைய வேலை நிரந்தமாகும் என நினைப்பவா்கள் இனி விழிப்புடன் நோ்வழியில் வேலை தேட முனைய வேண்டும்.

நன்றி: தினமணி (17 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories