- வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. அது சுற்றுலாவுக்கும் பொருந்தும். பொதுவாகவே சுற்றுலாவாசிகள் சுற்றுலா செல்லும்போது சில எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியே செல்கின்றனர். அத்தகைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் பட்சத்தில் மீண்டும் சுற்றுலா செல்ல ஆயத்தமாகின்றனர்.
- இந்நிலையில், சுற்றுலா தொடர்பான தொழிலில் இருக்கும் சில முன்னணி நிறுவனங்கள் சுற்றுலாவாசிகளின் எண்ண ஓட்டத்தை கண்டுணர்ந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளன. அதில் தற்போது பெரும்பாலான இந்திய சுற்றுலாவாசிகள், குறிப்பாக இளைஞர்கள் கடைசி நிமிடத்தில்தான் சுற்றுலா செல்வது தொடர்பான முடிவை உறுதி செய்வதாக கூறப்பட்டுள்ளது.
- சில நாடுகளில் சுற்றுலாவுக்காக கட்டாய விசா இல்லாதது, சுற்றுலா முன்பதிவுக்கு போதிய வசதிகள் இருப்பது, இவை எல்லாவற்றையும்விட வருமானத்தில் செலவழிக்கக் கூடிய தன்மை மக்களிடையே பெருகி இருப்பது உள்ளிட்டவைதான் இதற்குக் காரணங்களாக உள்ளன.
- மேலும் உலகளவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் சுற்றுலா செல்வதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு செலவழிப்பதில் உலகளவில் 4-ம் இடத்தைப் பிடிப்பார்கள் என்றும், கிட்டத்தட்ட இந்தியர்களின் சுற்றுலா செல்வதற்கான மொத்த செலவினம் $410 பில்லியன் (ரூ.34 லட்சம் கோடி) அளவில் இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
- சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு அதிகம் செலவழிப்பதாகவும், 2022-ம் ஆண்டில் மட்டும் சராசரியாக சுற்றுலாவாசிகள் உள்நாட்டு சுற்றுலாவுக்கு ரூ.27,000 வரையிலும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ரூ.1,29,000 வரையிலும் செலவு செய்துள்ளதாக கூறுகிறது. மேலும் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் அதிகபட்சமாக உள்நாட்டு சுற்றுலாவுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலும் செலவு செய்ய தயாராக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
- பெரும்பாலான சுற்றுலாவாசிகள் நன்கு போக்குவரத்து வசதி உள்ள சுற்றுலாத்தலங்களையும், அதில் பாதுகாப்பையும் முதன்மை காரணிகளாக கருதுகின்றனர். மேலும் அவர்கள் சுற்றுலாத்தலங்கள் அமைந்திருக்கும் இடங்களில் நிறைந்திருக்கும் இயற்கையோடு ஒன்றிப்போன கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும், குடும்பத்துடன் சுற்றுலா செல்வோர் போதிய அளவிலான அமைதி மற்றும் கிராமம் ஒன்றிய சுற்றுலாத்தலங்களை விரும்புவதாகவும், தனியாக செல்வோர் நகரம் சார்ந்த சுற்றுலாத்தலங்களை தேர்வு செய்வதாகவும் அறிக்கை கூறுகிறது.
- இவ்வனைத்தையும் தாண்டி பெண்கள் அதிக அளவில் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும், குடும்பத்தில் சுற்றுலா செல்லும் இடங்களை தீர்மானம் செய்பவர்களாகவும் விளங்குவதாக அவ்வறிக்கை கூறுகிறது.வேளாண் சுற்றுலாவுக்கு வருகைதரும் சுற்றுலாவாசிகளின் தன்மை மற்றும் அவர்களின் எதிர்பார்ப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டதில் இருந்து கிடைத்த தகவல்கள் சிலவற்றை பார்ப்போம்.
- வேளாண் சுற்றுலாவுக்கு இளம் வயதுடையவர்களே அதிகம் வருகின்றனர்.
- வார இறுதி நாட்கள் வேளாண் சுற்றுலா செல்வதற்கு உகந்தது என்றும், அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை, திருவிழாக் காலங்களிலும் வருகை தர சுற்றுலாவாசிகள் விரும்புகின்றனர்.
- வேளாண்மையோடு அதிகம் தொடர்பு இல்லாதவர்களும் பெரும் அளவில் வேளாண் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர்.
- உள்ளூர் உணவு வகைகளை சாப்பிடவும், 2 முதல் 3 நாட்கள் வரை வேளாண் சுற்றுலா பண்ணையில் தங்கவும் அவர்கள் விரும்புகின்றனர்.
- இயற்கையோடு ஒன்றி, பாரம்பரிய வேளாண்மையை மேற்கொள்ளும் பண்ணைகளை அதிகம் விரும்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
- ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக அளவில் வேளாண் சுற்றுலா செல்ல முனைவதாகவும், அதில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
- பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகளவிலும், வருமானம் அதிகம் உடையவர்களும் வேளாண் சுற்றுலாவில் போதிய அளவில் செலவு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 06 – 2024)