- விவசாயிகளை பொறுத்தவரையில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என 3 பிரிவுகள் உண்டு. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு அறிக்கைப்படி இரண்டரை ஹெக்டருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் இந்தியாவில் 86.2 சதவீதம் அளவுக்கு உள்ளனர். அதுவே அவர்களின் பயிர் சாகுபடி பரப்பளவு என்பது வெறும் 47.3 சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது.
- மேலும் அந்த அறிக்கையானது சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12.6 கோடி அளவுக்கு வளர்ந்து உள்ளதாகவும், அவர்களின் மொத்த நிலப் பரப்பளவு என்பது 7.44 கோடி ஹெக்டர் என்றும் கூறுகிறது. அதாவது சராசரியாக ஒரு சிறு குறு விவசாயி 0.6 ஹெக்டர் அளவிலான நிலத்தை கொண்டிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- மொத்தத்தில் இந்தியாவில் இருக்கும் விவசாயிகளின் சராசரி நிலப்பரப்பு என்பது 1.08 ஹெக்டர் என்று இருக்கும் அதே வேளையில், அதனால் போதிய அளவிலானவேளாண் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நிலவி வருவதாக அந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
- இதற்கிடையில் விவசாயிகளின் வருமானத்தை எடுத்துக்கொண்டால் சராசரியாக இந்தியாவில் மாதத்துக்கு விவசாயி ஒருவர் ரூ.10,218 வருவாய் ஈட்டுவதாக புள்ளிவிவர அறிக்கை ஒன்று கூறுகிறது. அதாவது 2012-13 -ம் ஆண்டில் மாதத்துக்கு ரூ. 6,426 ஆக இருந்த விவசாயிகளின் வருமானம் 2018-19-ம் ஆண்டில் ரூ.10,218 ஆக அதிகரித்துள்ளது. இதனை வேளாண் கூலியாட்களின் வருமானத்தோடு ஒப்பிடுகையில் குறைவுதான். அதனால்தான் பல இடங்களிலும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி கூலி வேலைக்கு செல்வதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- தற்போதைய நிலையில் உடனடியாக சிறு குறு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும், அவர்கள் காலப்போக்கில் பிரச்சினையில் இருந்து வெளிவர தீர்வுகளை தருவது என்பது அவசியமாகிறது. மேலும் அந்த தீர்வு என்பது நிலைத்த நீடித்த வளர்ச்சியை கொண்டிருக்க வேண்டும். அதில் குறிப்பாக தகுந்த மதிப்புடைய பயிர் சாகுபடி முதல் மதிப்புக் கூட்டு சங்கிலி வரை நீண்டு இரண்டாம் நிலை வேளாண்மையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இரட்டிப்பு வருமானம்:
- விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசு 2016-ம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. அக்குழு 2018-ம் ஆண்டுஅதன் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இரண்டாம் நிலை வேளாண்மை சார்ந்த வகைகளில் முக்கியமாக வேளாண் சுற்றுலாவை அந்த அறிக்கை பரிந்துரை செய்து இருந்தது.
- வேளாண் சுற்றுலாவானது சர்வதேசம் முதல் தேசியம் வரை எவ்வாறெல்லாம் பறந்து விரிந்துள்ளது என்றும், அதனை தொழிலாக மேற்கொள்ளும் முறை பற்றியும், வேளாண் சுற்றுலாவின் தனிக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் வேளாண் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் பற்றி மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் வேளாண் சுற்றுலா பண்ணையை வைத்து விளக்கப்பட்டு இருந்தது.
- இதற்கிடையில் இரட்டிப்பு வருமானத்தில் குடிகொண்டிருக்கும் வேளாண் சுற்றுலா பண்ணையை ஆரம்பிக்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டரை ஏக்கர் நிலமாவது வேண்டும். மேலும் அதற்கு தகுந்த முதலீடும் வேண்டும். ஆனால் நம் இந்தியாவை பொறுத்தவரையில் பெரும்பாலான விவசாயிகள் சிறு குறு விவசாயிகள்தான், அத்தோடு அவர்களின் மாத வருமானமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் எப்படி வேளாண் சுற்றுலா அவர்களுக்கு பொருந்தும் என்பதை கேள்விக்குறியுடன் பார்ப்பதற்கு பதிலாக, அதனை பொருத்தமாக நம் மண்ணுக்கும், வேளாண் பெருமக்களுக்கும் எப்படி எடுத்துச்செல்லலாம் என்பதை கண்டறிய வேண்டிய நேரமிது. மேலும் அந்தக் கண்டறிதல் என்பது வேளாண் சுற்றுலாவின் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் வகையில் இருக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 05 – 2024)