TNPSC Thervupettagam

வேளாண் பயிர்கள் கொள்முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்

February 9 , 2021 1437 days 721 0
  • இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 1.09 லட்சம் கோடி மதிப்புள்ள 575.36 லட்சம் டன் நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக 2020-21 கரீப் பருவகாலத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது 2019-20-ம் ஆண்டு பருவகாலத்தில் கொள்முதல் செய்த அளவை விட ஏறக்குறைய 24% அதிகம்.
  • இதேபோன்று, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 382 லட்சம் டன் கோதுமை விவசாயிகளிடமிருந்து 2020-21-ம் ஆண்டு ரஃபி பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில் நெல் மற்றும் கோதுமை பயிரிடும் விவசாயிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, எல்.கே.ஜா தலைமையில் 1964-ல் அமைக்கப்பட்ட உணவுப் பயிர்களுக்கான விலைக் குழுவின் பரிந்துரைப்படி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமும், வேளாண் பயிர்களைக் கொள்முதல் செய்து சேமித்து வைப்பதற்காக இந்திய உணவுக் கழகமும் தொடங்கப்பட்டன.
  • ஆரம்ப காலத்தில் சில மாநிலங்களில் மட்டும் செயல்பட்ட பயிர்க் கொள்முதல் திட்டம், படிப்படியாகப் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2020-21 புள்ளிவிவரப்படி, மொத்தமாக 39,122 நெல் கொள்முதல் நிலையங்களும், 21,869 கோதுமை கொள்முதல் நிலையங்களும் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றன.

புறக்கணிக்கப்படும் மானாவாரிப் பயிர்கள்

  • முதன்முதலாக 1965-66-ம் ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை கோதுமை, நெல் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு இத்திட்டம் மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • தற்போது 7 உணவு தானியங்கள், 5 பருப்புப் பயிர்கள், 7 எண்ணெய் வித்துக்கள் மற்றும் 4 வணிகப் பயிர்கள் (தேங்காய், கரும்பு, பருத்தி, சணல்) உட்பட மொத்தமாக 23 பயிர்களுக்கு ஆண்டுதோறும் சாகுபடிச் செலவைக் கணக்கில் கொண்டு, விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.
  • ஆதரவு விலைத் திட்டத்தின்படி, விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் இந்தக் குறிப்பிட்ட 23 பயிர்களை (சில தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி) ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், இது உண்மையில் செயல்படுத்தப்படுகிறதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
  • 1975-76-ம் ஆண்டில் வெறும் 51 லட்சம் டன்களாக இருந்த கோதுமைக் கொள்முதல், 2020-21-ம் ஆண்டில் 390 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், நெல் கொள்முதல் 35 லட்சம் டன்னிலிருந்து 380 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது.
  • ஆனால், இதுபோன்ற மெச்சத்தக்க கொள்முதல் மற்ற பயிர்களான கம்பு, கேழ்வரகு, சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், கடுகு போன்றவற்றைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
  • உதாரணமாக, விவசாயச் செலவு மற்றும் விலைக்குழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, மொத்த உற்பத்தியில் துவரை 15.3%, பச்சைப்பயறு 12.5%, உளுந்து 18.5% மட்டுமே 2018-19-ம் ஆண்டில் அரசுத் துறை அமைப்புகளால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • நீா்ப்பாசன வசதியில்லாமல், மானாவாரி நிலத்தில் பல்வேறு இன்னல்களுடன் இப்பயிர்களைச் சாகுபடி செய்யும் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள், தனியார் வியாபாரிகளிடமும் இடைத்தரகா்களின் தில்லுமுல்லு வேலைகளாலும், பயிர்களைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வேளாண் பயிர்களுக்குத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்ற போதிலும், குறைந்தபட்ச விலையுடன் கூடிய கொள்முதல் முறையானது இதுபோன்ற பயிர்களைச் சாகுபடிச் செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பது விசித்திரமாக உள்ளது.
  • மிக முக்கியமாக, இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5.26%. ஆனால், மொத்தக் கொள்முதலில் இதன் பங்கு வெறும் 2.91% மட்டுமே.
  • கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் நம் நாட்டில், மிகப் பெரிய தொகை செலவுசெய்து பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் திட்டத்தில் அனைத்து மாநில விவசாயிகளும், குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல சீா்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.

ஆறு பரிந்துரைகள்

  • முதலாவதாக, ஒவ்வொரு மாநிலத்திலும் வேளாண் பயிர்கள் உற்பத்தியுடன் தொடா்புடைய, கொள்முதல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தேசிய உற்பத்தியில் மாநிலங்களின் விகிதாச்சாரப்படியே ஒவ்வொரு மாநிலத்திலும் கொள்முதல் செய்ய வேண்டும்.
  • இரண்டாவதாக, கேழ்வரகு, சோளம், கம்பு, பருப்புப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் ஏழைகள் மட்டுமல்லாமல், பல்வேறு இன்னல்களை சந்தித்துப் பயிர்ச் சாகுபடி செய்கிறார்கள்.
  • இவா்களுக்கு நன்மை செய்யும் வகையில், இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பதற்காக சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட (2015) குழுவின் பரிந்துரைப்படி நெல், கோதுமை அல்லாத மற்ற பயிர்களையும் குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்ய சட்டபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • மூன்றாவதாக, தற்போதுள்ள கொள்முதல் திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இல்லை. இவா்கள் சாகுபடி செய்யும் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கட்டாயக் கொள்முதல் செய்வதற்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
  • நான்காவதாக, மாறிவரும் விவசாயச் சந்தையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஒதுக்கிவைக்க முடியாது என்ற எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டு முறையான உரிமத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்வதற்குத் தெரிந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.
  • ஐந்தாவதாக, வேளாண் பொருட்களின் கொள்முதலுக்கு ஒன்றிய அரசை மட்டும் சார்ந்திருக்காமல், தெலங்கானா, குஜராத், ஒடிஷா, கர்நாடகம், சத்தீஸ்கா் போன்ற மாநில அரசுகள் போல், மற்ற மாநில அரசுகளும் மாநில அளவிலான பயிர்க் கொள்முதல் திட்டங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.
  • ஆறாவதாக, வேளாண் பயிர்க் கொள்முதல் கொள்கைகள் விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், பயிர்ச் சாகுபடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உதவ வேண்டும். நெல்லுக்கும் கோதுமைக்கும் மட்டுமே கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் மற்ற பயிர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories