- வேளாண்மையின் பலம் என்பது பெரும்பாலும் வணிகத்தில் தான் அடங்கியிருக்கிறது. வணிக வழி தான் லாபத்தை நிர்ணயம் செய்கிறது. மேலும் அந்த வணிகம் என்பது அசலூர் தொடங்கி அயல்நாடு வரை நீண்டிருக்கிறது. அந்த வகையில் இங்கு வேளாண் சுற்றுலாவை வணிகமாக வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
- பொதுவாகவே சந்தையின் படிநிலைகளில் பொருள், விலை, இடம் மற்றும் கூட்டணி என சில காரணிகள் உண்டு. இவ்விடத்தில் பொருள் என்பது வேளாண் சுற்றுலாவில் சுற்றுலாவாசிகள் கண்டுணரும், ருசித்து உணரும் பொருட்களை குறிக்கும். அதுவே விலை என்பது வேளாண் சுற்றுலாவில் சுற்றுலா வாசிகளுக்கு நிர்ணயம் செய்யும் தொகையை குறிக்கும்.
- மேலும் தொகை என்பது பருவத்துக்கு, இடத்துக்கு தகுந்தவாறு வேறுபடும். இடம் என்பது அமைந்திருக்கும் சூழல் மற்றும் போக்குவரத்து வசதிகளை குறிக்கும். இறுதியாக கூட்டணி என்பது வணிகத்துடன் மிகவும் ஒன்றிப்போன ஒன்றாகும். அதுவே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும்.
- இன்னமும் சொல்லப்போனால் அரசியல்வாதிகள் சொல்வது போல் வெற்றிக் கூட்டணியாக அவ்வப்போது அமையும். இங்கு அப்படி வெற்றிக் கூட்டணியாக வலம் வரும் அமெரிக்காவின் வேளாண் சுற்றுலா பண்ணையாளர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனமான ஏர் பீஎன்பீ (Airbnb) பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.
- அமெரிக்காவை பொறுத்தவரை 97 சதவீத வேளாண் பண்ணைகள் என்பது அந்தந்த பண்ணையின் குடும்பத்தாரால் நடத்தப்படுகின்றன. அதில் 88 சதவீதம் சிறு பண்ணைகள் ஆகும். மேலும் பல வேளாண் பண்ணைகள் வேளாண் சுற்றுலாவை ஏர் பீஎன்பீ நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகின்றன.
- ஏர் பீஎன்பீ சுற்றுலா நிறுவனம் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வரும் சூழலில் அமெரிக்காவில் சிறு பண்ணையாளர்களுக்கு வேளாண் சுற்றுலா மூலம் கைகொடுத்து வருகிறது. வேளாண் சுற்றுலா வைத்திருக்கும் பண்ணையாளர் அவரின் பண்ணையை முறையாக ஏர் பீஎன்பீ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- அதன்பின் ஏர் பீஎன்பீ தளத்தில் சுற்றுலாவாசிகள் அவர்களுக்கு விருப்பப்பட்ட பண்ணையை தேர்வு செய்து கொள்ளலாம். சுற்றுலாவாசி ஏர் பீஎன்பீ மூலம் பண்ணையை தேர்வு செய்யும்போது மொத்த விலையில் மூன்று சதவீதத்தை அந்நிறுவனம் எடுத்துக் கொள்ளும். சராசரியாக ஆண்டுக்கு இந்த வெற்றிக்கூட்டணி மூலம் $12,000 முதல் $15,000 வரை பண்ணையாளர்கள் ஈட்டுகின்றனர். அதில் மேலும் பல புதுமைகளையும் ஏர் பீஎன்பீ நிறுவனம் புகுத்தி வருகிறது.
- அதனால் சுற்றுலாவாசிகள் பலரும் நகரத்தில் இருக்கும் ஓட்டல்களைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் இருக்கும் பண்ணையை தேர்வு செய்வதாகவும், 2019 மற்றும் 2021-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 110 சதவீதம் அளவுக்கு வளர்ந்து இருப்பதாக ஏர் பீஎன்பீ ஆய்வறிக்கை கூறுகிறது.
- அதன்மூலம் அந்த இடைபட்ட ஆண்டுக்குள் மட்டும் கிட்டத்தட்ட $3.5 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவின் ஊரகப் பகுதிகளில் இருக்கும் வேளாண் பண்ணைகள் வருமானம் ஈட்டி உள்ளன. மொத்தத்தில் அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பண்ணைகள் ஏர் பீஎன்பீயுடன் வைத்திருக்கும் கூட்டணி மூலம் வேளாண் சுற்றுலாவில் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன.
- நம் இந்தியாவுக்கு இதுபோன்ற கூட்டணி உகந்ததா என்று கேட்டால் உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏர் பீஎன்பீ நிறுவனம் இந்தியாவிலும் இயங்கி வருகிறது. அத்தோடு சுற்றுலா தலங்களை சுற்றுலாவாசிகளுக்கு தெரியப்படுத்தும் இன்னபிற நிறுவனங்களும் இதில் இணையலாம்.
- மேலும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் அரசின் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளான ‘Incredible India’, Enchanting Tamil Nadu போன்றவற்றுடன் இணைத்து வேளாண் சுற்றுலாவை ஊக்கப்படுத்தலாம். அவைகளோடு கிராம பஞ்சாயத்துகள் அந்தந்த கிராமங்களில் வேளாண் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் கூட்டணி பலம் மென்மேலும் கூடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 05 – 2024)