TNPSC Thervupettagam

வேளாண்மை வீழ்ந்திடாமல் தடுக்க கொள்முதலுக்கும் சந்தைக்கும் அரசு பொறுப்பேற்கட்டும்

April 21 , 2020 1733 days 774 0
  • விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் நாடு முழுவதும் அறுவடைப் பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. அறுவடைசெய்தாலும் அதைச் சந்தைக்குக் கொண்டுசெல்ல வாகனங்கள் கிடைக்கவில்லை.
  • அப்படியே கொண்டுசென்றாலும் உரிய விலை கிடைக்கவில்லை. வேளாண்மை என்பது ஏறக்குறைய இந்திய மக்கள்தொகையில் சரிபாதியினருடைய நேரடி வாழ்வாதாரப் பிரச்சினை.
  • விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதில் உள்ள இடர்களைக் களைந்து உரிய விலை கிடைக்கச்செய்தால் மட்டுமே ஊரகப் பொருளாதாரம் உயிர்த்தெழ வாய்ப்பிருக்கிறது.
  • பஞ்சாபிலிருந்து தொடங்குவோம். இது ராபி பருவ கோதுமை அறுவடைக் காலம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தென்கிழக்கு பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • அம்மாநிலத்தின் பெரும்பாலான கரோனா நோயாளிகள் கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது மேலும் ஒரு பிரச்சினை. வட இந்திய தேயிலைத் தோட்டங்களின் இதுவரையிலான இழப்பு ரூ.14,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.

பாதிப்பில் முதலிடம்

  • கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது மஹாராஷ்டிரம். அங்குள்ள விவசாயிகள்தான் இந்திய அளவில் மிகவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
  • குறிப்பாக, எளிதில் அழுகிவிடக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்பவர்கள். மஹாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் பருவம் தப்பிய மழையால் ஏற்கெனவே விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • பெரும்பாலும் இந்த இரண்டு மாநிலங்களிலும் திராட்சையும் மாதுளையும் அதிக அளவில் பயிரிடப்பட்டிருந்தன. அதில் முதற்கட்டமாக ஏறக்குறைய 40% அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • மஹாராஷ்டிரத்தில் பழ ஏற்றுமதியில் நாசிக் பகுதியின் பங்களிப்பு மட்டும் 80%. நெதர்லாந்து, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் ஒரு கிலோ திராட்சையை ஒன்றரை அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.110-க்கு விற்பார்கள். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கால் ரூ.50-க்கும் கீழ் அதன் விலை சென்றிருக்கிறது. அப்படியும் வாங்க ஆள் இல்லை.
  • மஹாராஷ்டிரத்தின் தேவ்காட், ரத்னகிரிப் பகுதிகள் மாம்பழங்களுக்குப் பெயர்பெற்றவை. மஹாராஷ்டிரத்தின் வருடாந்திர மாம்பழ விற்பனை மட்டுமே ரூ.3,500 கோடியைத் தாண்டும். ஏப்ரல் இறுதி வாரங்களில் தேவ்காட் தாலுக்காவுக்கு மட்டுமே மாம்பழ ஏற்றுமதியால் ரூ.300 கோடி கிடைக்கும்.
  • ஊரடங்கு தொடர்வதால் இந்தப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்படப்போகிறது. மாம்பழங்களுக்கான முக்கிய ஏற்றுமதி மையங்கள் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான். கரோனா பாதிப்பால் ஏற்றுமதி வாய்ப்பும் இல்லாமலாகிவிட்டது.

ஆசியாவின் பெரும் சந்தைகள்

  • மஹாராஷ்டிரத்திலுள்ள லசல்காவுன் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காயச் சந்தை. அங்கிருந்துதான் நாடு முழுவதற்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது.
  • மலேசியாவுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கும்கூட இந்தச் சந்தையிலிருந்து கப்பல்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தச் சந்தையில் தினக்கூலிக்கு வேலைபார்த்துவருகிறார்கள்.
  • ஊரடங்கையொட்டி தொழிலாளர்கள் சந்தைக்கு வரவில்லை என்பதால் கொள்முதல், இருப்பு வைப்பது, ஏற்றுமதி என்று எல்லா நிலைகளிலும் வெங்காய விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • மஹாராஷ்டிரத்தின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் வாழைத் தோட்டமே விற்பனைக்கு வாய்ப்பு இல்லாமல் வீணாகி அழிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று சரத் பவார் உறுதியளித்திருப்பது, விவசாயிகளிடையே சற்றே ஆறுதல் அளித்திருக்கிறது.
  • மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக அதிக நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கறிச் சந்தையான சென்னை கோயம்பேட்டில் வழக்கமான விற்பனையில் பாதி குறைந்திருக்கிறது.
  • அத்தியாவசியப் பணிகளின் பட்டியலில் விவசாயம் இடம்பெற்றிருந்தாலும், வேளாண் சந்தைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் சந்தைப்படுத்துவதில் கடும் சிரமங்கள் நிலவுவதே காரணம். உணவகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை மூடித்தான் கிடக்கின்றன.
  • அதைக் காரணம் காட்டி, மொத்த வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டனர்.

வீணாகும் வேளாண் உற்பத்தி

  • லாரிகள் காய்கறிகளைக் கொண்டுசெல்லவும், மாநில எல்லைகளைக் கடக்கவும் அனுமதிக்கப்படுகின்றன என்பது என்னவோ உண்மைதான். ஆனால் பேருந்து, ரயில்கள் மூலமாக விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டுசெல்வதை வழக்கமாக வைத்திருந்த சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • மஹாராஷ்டிரத்தைப் போல தமிழக விவசாயிகள் பெருவிவசாயிகள் அல்ல; தோட்டங்களில் விளைவிக்கும் காய்கறிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாங்களே நேரடியாகச் சந்தையில் கொண்டுபோய் விற்பவர்கள்தான் பெரும்பான்மையினர்.
  • உள்ளூர் காய்கறிச் சந்தைகள் பெரும்பாலும் இந்தச் சிறுவிவசாயிகளால்தான் இயக்கப்படுகின்றன.
  • சந்தைக்குக் கொண்டுசென்றாலும் அதற்கு உரிய விலை கிடைக்குமா என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதனால்தான், அறுவடைசெய்ய முடியாத விளைச்சல் நிலங்களைக் கால்நடைகளை விட்டு மேயவிடுகிறார்கள். விலை பேசாமலேயே வியாபாரிகளிடம் பறித்துப்போகச் சொல்கிறார்கள்.
  • வாழைத்தார்கள் குலையிலேயே அழுகுவதும், மாம்பழங்கள் பறிக்கப்படாமலே வீணாவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
  • காய்கறிக் கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்தால் மட்டும் போதாது; காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கும் அரசு கைகொடுக்க வேண்டும். மக்களின் வருமானம் குறைந்திருக்கும்பட்சத்தில் அவர்களது தேவையும் குறையத்தான் செய்யும்.
  • தேவை குறைந்தால் விலையும் குறையத்தான் செய்யும். இவையெல்லாம் பொருளியலின் அரிச்சுவடிப் பாடங்கள். உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் இருப்பதற்குக் காரணம் அரசின் நடவடிக்கைகள் அல்ல; வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலையில்லை என்பதுதான்.
  • நோய்த்தொற்றின் விளைவாக ஒட்டுமொத்த பொருளாதாரமுமே நிலைகுலைந்திருக்கிறது. உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலை களை மீண்டும் தொடங்கி நடத்தினால், உற்பத்தியின் தேக்கத்தைச் சரிசெய்துவிட முடியும்.
  • ஆனால், விவசாயம் அப்படியானதில்லை. இழப்பை ஈடுசெய்ய முடியாது. அரசாங்கம்தான் கொள்முதலுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (21-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories