- காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் மரணம் பற்றி நாடெங்கிலும் உள்ள அனைத்து ஊடகங்களும் முக்கியச் செய்தியாக மூன்று, நான்கு நாட்களுக்குப் பேசின. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கூட நாடாளுமன்றத்தில் இம்மரணம் குறித்துக் குறிப்பிட்டார்.
- நெருக்கடியின் காரணமாக ஒரு தொழிலதிபரே தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்ற வகையில் இந்த மரணம் முக்கியத்துவம் பெற்றது இயல்பானதே. ஆனால், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் போட்டு வைத்த சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல்போனதன் காரணமாக உயிரிழந்த 10 பேரின் மரணம் பற்றி யார் பேசப்போகிறார்கள்?
- 51 வயது சஞ்சய் குலாதி. ஜெட் ஏர்வேஸ் ஊழியர். அந்நிறுவனம் மூடப்பட்டதால் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அவர் வேலை பறிபோனது. அவரும் அவரது குடும்பத்தினரும் பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் வைப்புத்தொகை வைத்திருந்தனர். ஆனால், ரிசர்வ் வங்கியினுடைய செப்டம்பர் 23-ம் தேதி அறிவிப்பின்படி, ஒருவர் கணக்கிலிருந்து ஆறு மாதம் வரை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
- அவருடைய ‘விசேஷ’ குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கக்கூடக் கையில் பணம் இல்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, அக்டோபர் 14 காலை அவரும், அவருடைய தந்தையும் அவ்வங்கி முன்பாக நூற்றுக்கணக்கானவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர். வீடு திரும்பிய சஞ்சய் குலாதி மாரடைப்பு ஏற்பட்டு அன்று மதியமே உயிரிழந்துவிட்டார்.
- 74 வயது ஆண்ட்ரூ லோபோவும், 64 வயது குல்தீப் கவுர் விக் என்ற பெண்மணியும் பிஎம்சி வங்கியில் வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாததன் காரணமாக மாரடைப்பால் இறந்துவிட்டனர். 39 வயது நிவேதிதா பிஜ்லானி என்ற மருத்துவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். முரளிதர் தர்ரா என்ற 83 வயது முதியவருக்கு அவசர இருதய அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், பிஎம்சி வங்கியிலுள்ள வைப்புத்தொகை ரூ.80 லட்சத்தை எடுக்க முடியாததன் காரணமாக சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட முடியவில்லை. “வேறு எந்த வழியிலும் பணம் திரட்ட முடியாததால் இன்று என்னுடைய தந்தையை இழந்துவிட்டேன்” என்று அவரின் மகன் பிரேம் தர்ரா நெஞ்சு பதறக் கூறினார். இப்படி மரணங்கள் தொடர்கின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைப்புதாரர்களுக்குப் பேரிடி
- 1984-ல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, இந்தியாவில் உள்ள 10 பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்று. இவ்வங்கியின் 137 கிளைகள் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், கோவா, குஜராத், ஆந்திரம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ளன. இவ்வங்கிக்கு 2004-ம் ஆண்டு பன்-மாநில கூட்டுறவு வங்கி என்ற அந்தஸ்து மத்தியப் பதிவாளரால் வழங்கப்பட்டு, தேசிய அளவில் செயல்படும் வங்கியாக மாறியது.
- 2011-ம் வருடம் இவ்வங்கி அந்நியச் செலாவணி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. வருடம் 5 நாட்கள் தவிர, 360 நாட்கள் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட்டுவந்தது. ஊழியர்களில் 70% பேர் பெண்கள். 2019 மார்ச் நிலவரப்படி ரூ.11,617 கோடி வைப்புத்தொகை மற்றும் ரூ.8,383 கோடி கடன் உள்ளிட்டு இவ்வங்கியின் வியாபாரம் ரூ.20,000 கோடி, மொத்த லாபம் ரூ.244 கோடி என்ற அளவில் இருந்தது. இதன் காரணமாக, மக்களுக்கு இவ்வங்கி மீது அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டது. பலர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்புகளையும் இவ்வங்கியில் வைப்புத்தொகையாகச் செலுத்தினர்.
- 2019 செப்டம்பர் 23-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, பிஎம்சி வங்கி வைப்புதாரர்களுக்குப் பேரிடியாக விழுந்தது. அதன்படி, அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு பிஎம்சி வங்கியின் ஒவ்வொரு வைப்புதாரரும் அதிகபட்சமாகத் தங்கள் கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் (1949) 35-ஏ பிரிவின்படி வெளியிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
- ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 35-ஏ ‘வைப்புதாரர்களின் நலனைக் காப்பதற்காகவும் சரியான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும்’ ரிசர்வ் வங்கி தலையிட்டு வழிகாட்டலாம் என்று கூறுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, வைப்புதாரர்களின் நலனைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்தது.
- நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, கணக்கிலிருந்து பணம் எடுக்கும் தொகை ரூ.1,000-லிருந்து படிப்படியாக ரூ.10,000, ரூ.25,000, ரூ.40,000 தற்போது ரூ.50,000 என்ற வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. வைப்புதாரர்கள் தங்களின் பணத்தை எடுப்பதற்கு மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ எப்படி மறுக்க முடியும்? தங்கள் பணத்தை எப்போது வேண்டுமானாலும் வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதுதானே வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள அடிப்படை ஒப்பந்தம்?
ஏன் இந்த நிலைமை?
- பிஎம்சி வங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் ஊழல்தான் இந்நிலைக்கு அடிப்படையான காரணம். இவ்வங்கியின் தலைவர் வார்யம் சிங் இயக்குநராக இருக்கும் எச்டிஐஎல் என்ற ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.6,300 கோடி வரை கடன் (மொத்தக் கடன் ரூ.8,383 கோடி) வழங்கப்பட்டுள்ளது.
- வங்கியின் மொத்தக் கடனில் 74% அளவுக்கு ஒரே ஒரு நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதும், வங்கியின் தலைவரே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறிய செயலாகும். இங்குதான் ஊழல் ஆரம்பித்தது. இந்தக் கடன் வாராக்கடனாகிவிட்டது. இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்குமான காரணம்.
- கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் மத்திய பதிவாளரும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் இந்த ஊழலை எப்படிக் கண்டுபிடிக்காமல் விட்டனர்? இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் செப்டம்பர் 21-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் 5 பக்க ஒப்புதல் வாக்குமூலக் கடிதத்தை அளித்துள்ளார். இக்கடிதம் யாரைக் காப்பாற்றப் பெறப்பட்டது?
ஊழல் எப்படி வெளியானது?
- ஊழலை வெளி உலகுக்குக் கொண்டுவந்த பெருமை இவ்வங்கியில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களையே சாரும். அவர்கள்தான் தைரியமாக இந்த ஊழலை ஆதாரபூர்வமாக வெளியிட்டனர். ‘எச்டிஐஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.6,300 கோடி கடன் தொகையை மறைக்க 21,000 பொய்யான கடன் கணக்குகள் உருவாக்கப்பட்டு அவற்றினிடையே பிரித்துக் காட்டப்பட்டது’ என்று மும்பை நகரின் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறை தெரிவிக்கிறது.
- ‘பொய்யான கணக்குகள் தொடங்கி, எச்டிஐஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனை மறைத்து, நாங்கள் தெரிந்தே ரிசர்வ் வங்கியையும் மத்திய பதிவாளரையும் ஏமாற்றினோம்’ என்று அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் தனது கடிதத்தில் கூறுகிறார்.
- எந்தவிதமான புகைப்பட அடையாள அட்டையோ, முகவரி அடையாள அட்டையோ (கேஒய்சி விதிகள்) இல்லாமல் எப்படி 21,000 கணக்குகளைத் தொடங்க முடியும்? அவற்றுக்கு எதிராகக் கடன் வழங்கப்பட்டதென்றால், அத்தனை பொய்யான ரசீதுகளும் வங்கியில் உள்ளனவா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய பதிவாளர் அலுவலர்கள், பட்டயக் கணக்காளர்கள் தங்களுடைய தணிக்கையின்போது இவற்றையெல்லாம் எப்படி கவனிக்காமல் இருந்திருக்க முடியும்?
மத்திய அரசு ரிசர்வ் வங்கியே பொறுப்பு
- வைப்புதாரர்களின் மரணங்கள் தொடர்கின்றன. வங்கியின் மீது மக்களுக்கான நம்பிக்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிஎம்சி வங்கியின் வைப்புதாரர்களின் சுமார் ரூ.10,000 கோடி பணத்தை எடுக்கவிடாமல் செய்யும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல் மிகவும் கொடூரமானது.
- ஊழல் பேர்வழிகளின் சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்து நட்டத்தை ஈடுகட்டி, பொதுமக்களின் பணத்தைக் காக்கும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் துரித கதியில் ஈடுபட வேண்டும். இவ்வங்கியை மற்றொரு பலமான கூட்டுறவு வங்கி அல்லது பொதுத் துறை வங்கியுடன் இணைத்து, சேமிப்புதாரர்களையும் ஊழியர்களின் பணியையும் பாதுகாக்க வேண்டும்.
- ஊழலில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். கடமை தவறிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் மத்தியப் பதிவாளர் அலுவலர்கள், பட்டயக் கணக்காளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15-11-2019)