TNPSC Thervupettagam

வையத்தலைமை கொள்ளும் பாரதம்

September 8 , 2023 438 days 277 0
  • இந்தியாவுக்கு முதல்முறையாக கிடைக்கப்பெற்ற ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு வாய்ப்பு, உலக நாடுகளுக்கு நம்முடைய கருத்தை, அக்கறையை எடுத்து வைப்பதற்கான நல்வாய்ப்பாக இந்த ஆண்டு முழுவதும் அமைந்திருக்கிறது.
  • வேதாந்தமான மகா உபநிஷத்தில் வரும் ‘வசுதைய்வ குடும்பகம்’ என்ற கருத்து ‘ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்று எளிமைப்படுத்தப்பட்டு இந்தியாவின் ஜி20 தலைமையில் கருப்பொருளானது. மனிதா், விலங்கு, தாவரம் தொடங்கி நுண்ணுயிர்கள் வரை அனைத்து உயிர்களின் முக்கியத்துவத்தையும், அவை ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதையும் இந்தக் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.
  • சென்ற ஆண்டு இறுதியில் இந்தோனேசியாவிடமிருந்து ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்ட பொழுது ‘இப்பொறுப்பு உலகளாவிய ஒருமை உணா்வை ஊக்குவிக்க பணியாற்றக் கிட்டிய வாய்ப்பாகும். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளை முன்வைக்கிறோம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
  • வளா்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 1999-ஆம் ஆண்டு ஜி20 கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அமெரிக்கா, ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
  • ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள 20 நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
  • இந்த மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா பணிக்குழுக் கூட்டங்கள் நடத்தியுள்ளது. இக்கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது சிறப்பு அழைப்பாளா்களாகவும் பல நாடுகள் அழைக்கப்பட்டன. அந்த நாடுகளும் தங்கள் தரப்பு வல்லுநா்களைக் கூட்டங்களில் பங்கேற்கச் செய்தன.
  • நாட்டின் மிக முக்கிய நகரங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது புராதனத்தைப் பறைசாற்றும் இடங்கள் தோ்வு செய்யப்பட்டு இந்தக் கூட்டங்கள் கடந்த ஜனவரி முதல் நடைபெற்று வந்திருக்கின்றன. நமது பாரம்பரிய இடங்கள் முதல் பாரம்பரிய உணவு வரையிலான சிறப்புகளை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வகையில் விருந்தோம்பலை இந்தியா சிறப்பாகச் செய்து வருகிறது.
  • ஜம்மு - காஷ்மீா் ஸ்ரீநகரில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. சுற்றுலா தொடா்பான இந்தக் கூட்டம் இந்தியாவின் மிக நுட்பமான தோ்வு என்று சொல்லலாம். உலக நாடுகளுக்கு இந்தியாவில் காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலை எடுத்துக் காட்ட ஒரு வாய்ப்பாக இந்தியா இதனைப் பயன்படுத்திக் கொண்டது.
  • தில்லியில், செப்டம்பா் 9, 10 தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. உச்சி மாநாட்டுக்கென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் இந்தியா வருகை தர உள்ளனா்.
  • சிறப்பு அழைப்பாளா்களாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, எகிப்து அதிபா் கலீல் எல்சிசி, மொரிஷியஸ் பிரதமா் பிரவிந்த் குமார் ஜக்நாத், நெதா்லாந்து பிரதமா் மார்க் ரூட்டே, நைஜீரிய அதிபா் ஓமன் தலைவா், சிங்கப்பூா் பிரதமா் லீ சியென் லூங், ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனா்.
  • 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்ட ஜி20 குழு எதனால் சிறப்புப் பெறுகிறது? அதன் தலைமைத்துவம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஜி20 நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, உலகளாவிய வா்த்தகத்தில் 75% உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85% ஆகும். எனவே தலைமைத்துவம் மட்டுமல்ல, உறுப்பு நாடாக இருப்பதே வளர நினைக்கும் தேசத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு உலகளாவிய தலைமைத்துவத்திற்கு ஒரு மைல்கல் எனலாம். இந்தியா தனது தலைமைத்துவத்தில் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள உலகின் முக்கிய பொருளாதார நாடுகளிடையே விவாதங்களையும் முன்னெடுப்புகளையும் கொண்டு வழி நடத்துகிறது. பொருளாதாரம் மட்டுமல்லாது தொழில்நுட்ப வலிமை, நிலையான வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு என தனித்துவமான சிந்தனைகளை நாடுகளிடையே எடுத்து வைக்கிறது.
  • அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, சமமான உலகளாவிய சுகாதார அணுகல், பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, எண்ம கண்டுபிடிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளில் இந்தியா அக்கறை காட்டுகிறது. இந்த அக்கறை, தனது வளா்ச்சி, நன்மை என்றில்லாமல் உலகளாவிய நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
  • சா்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றம் என்று அழைக்கப்படும் ஜி20 அமைப்பில் கடந்த ஜனவரி முதல் இரண்டு தடங்களாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. முதல் தடம் நிதித்தடம். இரண்டாவது, உலகம் எதிர்கொள்ளும் சூழலியல் முதலான பொதுவான பிரச்னைகளை விவாதித்து அவற்றிற்கான தீா்வுகளைக் கண்டறியும் தடம்.
  • நிதித்தடத்தில் நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களுக்கான கூட்டங்கள் இடம்பெற்றன. இரண்டாவது தடம் இந்தியா கொண்டுள்ள ஆறு கொள்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டது. இரண்டு தடங்களிலும் பணிக்குழுக்கள் தீா்வுகளை நோக்கி ஒருமித்த கருத்துடன் நகா்வதற்கான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • பசுமை மேம்பாடு, பருவநிலை, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, எண்ம பொருளாதாரம், பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், பெண்கள் முன்னேற்றத்திற்கான சீா்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்த ஆண்டு பணிக்குழுக்கள் தீவிர கவனம் செலுத்தின.
  • பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் கவனம், ‘லைஃப்’ இயக்கத்தை அறிமுகம் செய்ததில் தொடங்குகிறது. இது சுற்றுச்சூழல் உணா்வுள்ள நடைமுறைகளை ஊக்குவிப்பதோடு இந்தியாவின் பண்டைய சூழலியல் சார்ந்த வாழ்க்கை முறையை மீண்டும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய வா்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரித்தல், தொழிலாளா் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துதல், திறன்மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவு சாா்ந்த மதிப்புச் சங்கிலிகள் அதற்கான கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
  • கொவைட் 19 கொள்ளை நோயின் தாக்கத்தை எதிர்கொள்வதில் கவனம் குவித்து, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கான பரிந்துரை, நிலையான வளா்ச்சி இலக்குகளை துரிதப் படுத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், எண்ம உள்கட்டமைப்பு, நிதி, விவசாயம், கல்வி போன்ற துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடு அதற்கான தரவுகளைப் பகிர்ந்து கொள்வது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன
  • 21-ஆம் நூற்றாண்டில் உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வு காண்பதற்கான முயற்சிகள், அதற்கென அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப் பட்டது. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் உள்ளடக்கிய வளா்ச்சி, மேம்பாட்டிற்கு வழி ஏற்படும் என பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடா்பான கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
  • புதுதில்லியில் நடைபெற இருக்கும் உச்சிமாநாட்டில் இந்தியா தன்னுடைய கருத்துக்களைத் தீா்மானங்களாக முன்வைக்கும். ஜி20 கூட்டமைப்பில் 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைத்துக் கொள்வதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதோடு உச்சி மாநாட்டில் அதற்கான தீா்மானத்தையும் இயற்றும் என்று பிரதமா் அறிவித்துள்ளார்.
  • தெற்குலக நாடுகளில் நம்பிக்கையை விதைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதற்கான கொள்கைகளை வகுத்துக் கொண்டு நாம் செயல்படுகிறோம் என்பதே இந்த உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது.
  • ஆண்டு முழுவதும் நடைபெற்றுள்ள கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் இருந்துள்ளதை பிரதமா் குறிப்பிடும்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஏற்றுள்ள ஜி20 அமைப்பின் தலைமைத்துவம் என்பது மக்களின் தலைமைத்துவம் என்று குறிப்பிட்டார். மக்கள் உணா்வுபூா்வமாக தேசத்தின் செயல்பாடுகளில் ஒன்றி நிற்கின்றனா். அதுவே ஜனநாயகத்தின் வெற்றியாக அமைகிறது.
  • வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரம் என்பதைத் தாண்டி நம்பிக்கைக்குரிய நாடாகவும் இந்தியா உலக அரங்கில் தன்னை கண்ணியத்துடன் நிறுத்திக் கொள்வதும் தன்னிடமுள்ள தொழில்நுட்ப மருத்துவ வசதிகளை நலிந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதும் தொடா்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு முழுவதும் உலகின் பெரிய நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அனைத்து நாடுகளையும் அரவணைத்துக் கொண்டும் ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தியும் நிர்வாகத் திறனை தலைமைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளது.
  • வையத்தலைமை கொள்வதை நோக்கிய பயணத்தில் மிகச் சிறந்த காலமாகவும் செயல்பாடாகவும் இந்த ஜி20 தலைமைத்துவம் பாரதத்திற்கு அமைந்துள்ளது.

நன்றி: தினமணி (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories