TNPSC Thervupettagam

வைரஸ்களுக்கு உயிர் உண்டா

February 28 , 2024 146 days 200 0
  • நாம் அஞ்சும் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களில் ஒன்று வைரஸ். வைரஸ்கள் ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன. அவற்றால் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள் ஏன் மற்றொரு நோய் பரப்பும் நுண்ணுயிராகக் கருதப்படும் பாக்டீரியாக்களுக்குக்கூட பாதிப்புதான்.
  • வைரஸ்களைக் கொல்வதற்கு நாம் ஏராளமான மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அவைஎல்லாவற்றிலும் தப்பித்து, வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வைரஸ்களை நாம் நுண்ணுயிராகக் கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவை உயிரினமே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். அவை உயிரினம் இல்லையென்றால், வேறு என்ன?
  • உயிர்கள் என்றால் என்ன என்பதற்கு விஞ்ஞானிகள் சில வரையறைகளைக் கொடுத்துள்ளனர். உயிர்கள் ஒன்று அல்லது பல செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அவை வளர்சிதை மாற்றம் என்கிற ஒழுங்கமைக்கப்பட்ட வேதிவினைகளை உடலுக்குள் நடத்துவதன் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அதேபோல் உயிர்கள் தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய தன்மையையும் பெற்றுள்ளன.
  • பெரும்பாலான வைரஸ்கள் மேற்கூறிய எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. உடலுக்குள் வளர்சிதை மாற்றம் செய்வதற்கான அமைப்புகளோ செல்களோ அவற்றுக்குக் கிடையாது. அதேபோல அவற்றால் தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. இப்படி உயிரினங்களுக்கு இருக்கவேண்டிய பல பண்புகள் இல்லாத தாலேயே வைரஸை விஞ்ஞானிகள் உயிரினமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
  • ஆனால், வைரஸ் ஓர் உயிரினம் இல்லை என்றால் அது மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது? எப்படி இனப்பெருக்கம் செய்கிறது?
  • வைரஸ் என்பது உயிரினங்களின் செல்லைவிட மிகச் சிறிய ஒன்று. பெரும்பாலும் வைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்களால் மட்டுமே பார்க்க முடியும்.
  • வைரஸ்களின் உடலில் மற்ற உயிரினங்களில் உள்ளதுபோல டி.என்.ஏ, ஆர்.என்.ஏ என்கிற மரபுப் பொருள்கள் (Genetic Material) இருக்கும். இந்த மரபுப் பொருள்கள் காப்சிட் எனப்படும் புரத உறையால் மூடப்பட்டிருக்கும். உள்ளே உள்ள மரபுப் பொருள்களுக்கு இந்த உறை பாதுகாப்பை வழங்குகிறது. இதுதான் வைரஸின் அமைப்பு.
  • வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வேண்டிய அம்சங்களைஉயிரினங்களின் செல்களிடம்இருந்துதான் பயன்படுத்திக் கொள்கின்றன.
  • வைரஸ்கள் ஓர் உயிரினத்தைத் தேர்ந்தெடுத்து அதன் உடலில் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு அந்த உயிரினத்தின் செல்லுக்குள் தமது மரபுப் பொருளான டி.என்.ஏவை (அல்லது ஆர்.என்.ஏவை) செலுத்துகின்றன. இதுதான் அந்த உயிரினத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • பொதுவாக எல்லா உயிரினங்களின் செல்களுக்குள்ளும் டி.என்.ஏ இருக்கும். டி.என்.ஏ என்பது தகவல் பெட்டகம். ஓர் உயிரினத்தின் உடலுக்குள் புரதங்கள் எப்படி உற்பத்தியாகி, இயங்க வேண்டும் என்கிற தகவலை டி.என்.ஏதான் கொண்டிருக்கும். இந்தத் தகவலின்படிதான் வேதி வினைகள் நடைபெற்று நம் உடல் இயங்குகிறது. நமது செல்லில் உள்ள ரைபசோம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த டி.என்.ஏ தகவலைப் படித்துப் பார்த்துப் புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
  • இப்போது நம் உடலுக்குள் நுழையும் வைரஸ் அதன் டி.என்.ஏவை செல்லுக்குள் செலுத்தும்போது, அங்கே உள்ள அமைப்புகள் நம் டி.என்.ஏவில் உள்ள தகவலுக்குப் பதிலாக வைரஸின் டி.என்.ஏவில் உள்ள தகவலைப் படித்துப் பார்த்து அதன்படி வேலை செய்யத் தொடங்கும். அப்போது நம் உடலுக்கு வேண்டாத புரதங்கள் உற்பத்தியாகும்போதோ, வேறு செயல்பாடுகள் நடைபெறும் போதோதான் நாம் பாதிப்படைகிறோம்.
  • அதேபோல நம் உடலுக்குள் நுழையும் வைரஸின் டி.என்.ஏ, செல்களின் அமைப்புகளைப் பயன்படுத்தி,தன்னையே பிரதி எடுக்கும் வேலையையும் செய்கிறது. இதனால் செல்களுக்குள் அதிக அளவில் வைரஸ்கள் உற்பத்தியாகும்போது அது செல்லின் சவ்வைச் (Cell Membrane) சிதைத்துவிடுகிறது. இப்படித்தான் வைரஸ்கள் நம் செல்களைப் பாதிக்கின்றன.
  • சில வைரஸ்கள் தமது மரபுப் பொருள் களைச் செல்லுக்குள் செலுத்தும் போது, அவை உடனே வெளிப்படாமல் சில காலத்துக்கு மறைந்தே இருந்து அந்த உயிரினத்தின் மரபுப் பொருளின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகின்றன. இப்போது அந்த உயிரினங்களில் செல் உற்பத்தி நடைபெறும் போது, அந்த வைரஸ்களும் தானாகவே பெருகத் தொடங்கி விடுகின்றன.
  • இப்படித்தான் வைரஸ்கள் நம் உடலைப் பாதிக்கின்றன.
  • பெரும்பாலும் வைரஸ்கள் உடலில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய உடனே நமது ரத்த வெள்ளை அணுக்கள் அவற்றைக் கண்டறிந்து அழித்துவிடும். ஆனால், ஹெச்.ஐ.வி போன்ற கொடிய வைரஸ்கள் நேரடியாக நோய் எதிர்ப்பு மண்டலத்தையே தாக்குவதால் மற்ற நோய்கள் நம் உடலை எளிதாகப் பாதித்துவிடுகின்றன.
  • இந்தப் பூமியில் ஏராளமான வைரஸ்கள் இருக்கின்றன. அவை பல வழிகளில் பலதரப்பட்ட செல்களைப் பாதிக்கின்றன. ஆனால், அவை பாக்டீரியாக்களைப் போன்று உயிரைக் கொல்லும் மற்றோர் உயிர் கிடையாது. அவை வெறும் டி.என்.ஏவைக் கொண்டிருக்கும் துகள் என்றுதான் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
  • உயிரற்ற பொருள்களிலோ இடத்திலோ இருந்தால் அவற்றால் எதுவும் செய்ய முடியாது. அவை தாமாகவே சிறிது சிறிதாகச் சிதைந்துவிடும். ஆனால், அதுவே உயிரினங்களுக்குள் நுழைந்துவிட்டால் அவற்றின் ஆட்டம் தொடங்கி எவ்வளவு பெரிய உயிரையும் வீழ்த்திவிடும்.
  • சரி, வைரஸ் உயிரினமாகக் கருதப்படாவிட்டால் நாம் தயாரித்துள்ள மருந்துகள் எப்படி வைரஸ் தாக்குதலைத் தடுக்கின்றன? வைரஸ் தடுப்பு மருந்துகளின் நோக்கமே அவற்றைச் செல்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதுதான். அவற்றால் உயிரினத்தின் உடலில் நுழைய முடியவில்லை என்றால், பாதிப்பை ஏற்படுத்த முடியாது அல்லவா? நாம் சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட வைரஸ் நம் உடலில் ஒட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடாமல் தடுப்பதற்காகத்தான்.
  • அதேபோல அவை பிரதி எடுப்பதையும் மருந்துகள் தடுக்கின்றன. வைரஸைப் பிரதி எடுக்காமல் தடுத்துவிட்டால், புதிய செல்களை உருவாக்க முடியாமல் அவை உடலிலிருந்து அழிந்து விடுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories