TNPSC Thervupettagam

வைரஸ்களுடன் ஒரு போர்!

August 12 , 2020 1624 days 1225 0
  • உலகமே வைரஸ்களைப் பற்றித்தான் தற்போது சிந்தித்துக்கொண்டிருக்கிறது. 400 மை.மீ. அளவே உள்ள கரோனா வைரஸின் பரவல் இன்று உலகையே முடக்கிவிட்டது.
  • இது கடந்த 30 ஆண்டுகளில், வௌவால்களில் தோன்றிப் பரவிய 6 வகை வைரஸ் தொற்றுக்களான ஹெண்ட்ரா’, ‘நிபா’, ‘மார்ப்ர்க்’, ‘சார்ஸ் கோவ்’, ‘மெர்ஸ் கோவ்’, ‘எபோலாஆகியவற்றின் தொடர்ச்சி. சார்ஸ்-கோவ்-2என்னும் இந்த கரோனா வைரஸும் இறுதியான ஒன்றல்ல. இன்னும் பல கொடிய வைரஸ்கள் தோன்றக்கூடும்.
  • கரோனா வைரஸ் எத்தகையது என்பது குறித்த தெளிவு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மனிதர்களில் நுரையீரலில் உள்ள ஏஇசி 2நொதி ஏற்பியின் வழியாக கரோனா வைரஸ் மனிதர்களிடம் எளிதில் தொற்றுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அதைக் குணப்படுத்துவதற்கான மருந்தையும், தடுப்பதற்கான தடுப்பூசியையும் கண்டறிவதில் அறிவியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • அதில் எதிர்பார்த்ததைவிட விரைவான வெற்றியும் கண்டுவருகிறார்கள். எதிர்காலத்தில் இதைவிட வீரியமான வைரஸ்கள் தோன்றினாலும் அதையும் கட்டுப்படுத்துவதற்கும் குணப்படுத்துவதற்குமான மருந்தையும், வீரியமிக்க தடுப்பூசியையும் கண்டறிந்திடுவதை இலக்காக வைத்து உழைக்கின்றனர்.

வைரஸ் ஆய்வுகள்

  • பெரும் நோய்த் தொற்று ஏற்படுகிறபோது மட்டும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்குப் பதிலாக வருமுன் காக்கக் கூடிய வகையில் ஆய்வுகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும்.
  • 70%-க்கும் மேலான புதிய வைரஸ்கள் வனவிலங்குகளிலிருந்தே தோன்றுவதால் அதைக் கண்டறிவதிலும், அதற்கான ஆய்வுக் களன்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்களுக்குப் போதிய ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் உலக நாடுகள் அளித்திட வேண்டும்.
  • பாலூட்டிகளிலிருந்து தோன்றும் கரோனா வைரஸ்கள் குறித்த ஆய்வுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாட்டு அறிவியலாளர்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் தோன்றிய, மனிதர்களுக்குப் பெரும் தொற்றை ஏற்படுத்திய 500-க்கும் மேற்பட்ட தொற்று நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
  • மக்கள்தொகைப் பெருக்கமும் நெருக்கமும் அதிகரித்துவரும் சூழலில், சாலைகளும் சுரங்கங்களும் நிலப்பரப்பில் அமைக்கப்படும்போதும், விவசாயத்தை விரிவுபடுத்தக் காடுகள் அழிக்கப்படும்போதும் புதிய புதிய நோய்க் கிருமிகள் தோன்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.
  • இதன் விளைவு அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளை மட்டுமல்லாது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளான இந்தியா, நைஜீரியா, பிரேசில் போன்றவற்றையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ளது.

அனைவருக்கும் ஆரோக்கியம்

  • நோயை உண்டாக்கக் கூடிய வைரஸ்கள் எவை எவை எனக் கண்டறிந்துவிட்டோமேயானால், பரிசோதனையாளர்களும் சுகாதார ஊழியர்களும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளவர்களைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் எளிதாகிவிடும்.
  • கால்நடைகளிலிருந்து ரத்தம் மற்றும் ஸ்வாப் மாதிரிகளையும், பண்ணை மற்றும் வர்த்தகத்துக்கு உட்படுத்தப்படும் வனவிலங்குகள், வௌவால்களின் வசிப்பிடத்துக்கு அருகில் வசித்துவரும் மனிதர்கள், விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள், கிராமப்புறத்தினர், மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடியும் பயன்படுத்தியும் வருபவர்கள் ஆகியோரையும் பரிசோதித்து வைரஸ் தொற்றுகளைக் கண்டறிந்திட வேண்டும். கால்நடைகள், வனவிலங்குகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து அனைவருக்கும் ஆரோக்கியம்என்கிற அணுகுமுறையோடு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.
  • அதன் மூலம் நோய்த் தொற்று பெரிய அளவில் மக்களிடம் பரவுவது தடுக்கப்படும். இந்தத் திட்டம் பெருந்தொற்று ஏற்படுத்தும் இழப்புகளிலிருந்து, நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் விரயத்தைத் தடுப்பதோடு, வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற உதவும்.
  • வௌவால் மனுஷிஎன்றழைக்கப்படும் வைரஸ் நிபுணர் ஷீ ஷெங்லி போன்ற ஆய்வாளர்கள் ஆசியா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸின் அடுத்தகட்டப் பரிணாமத்தைக் கண்டறிந்து, மனித குலத்தைக் காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • தற்போது தோன்றியுள்ள வைரஸ் மட்டுமல்லாது, எதிர்காலத்தில் இதைவிடக் கொடிய வைரஸ்கள் தோன்றினால், அதைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்ளத்தக்க வழிமுறைகளைக் கண்டறிவதற்கும் முன்னுரிமை அளித்து ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.

காடும் நாமும்

  • வைரஸ்களைப் பற்றிய இந்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டுள்ளன. நோயை உருவாக்கும் வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான கட்டமைப்பும் ஆய்வு வசதிகளும் வளரும் நாடுகளில் வளர்ச்சி பெற்றிராத நிலையில் அத்தகைய ஆய்வுகளில் தொடர இயலாமல் போனது ஒரு சோகம்.
  • ஆனால், வளர்ந்த நாடுகள் இந்த ஆய்வை இடைவிடாது செய்துவந்ததன் விளைவாகத்தான் இன்று உடனடியாகப் புதிதாகத் தோன்றியுள்ள வைரஸையும் அதன் மரபணு வரிசையையும் எளிதில் கண்டறிய முடிந்திருக்கிறது.
  • இதுவரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களில் சார்ஸ்-கோவ்-2வைரஸின் மரபணு வரிசையோடு ஒத்திருக்கக் கூடிய வைரஸ்களே இருந்ததில்லை என்பதை அனைத்து நாடுகளின் அறிவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • எனவே, இந்த வைரஸ் இதற்கு முன்பு தோன்றிய வைரஸ்களிலிருந்து சடுதி மாற்றம் அல்லது மரபணுக் கலப்பு மூலம் வௌவால்களிடமிருந்து உதித்த ஒன்றாகவே இருக்கும்.
  • முக்கியமான வைரஸ் ஆய்வாளர் டெனிஸ் கேரல் கூற்றுப்படி மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்குமான தொடர்புகள் அதிகரித்துக்கொண்டே வருவது மேலும் பல வைரஸ் தொற்றுக்களுக்குக் காரணமாக அமைந்துவிடும். 16.70 லட்சம் வைரஸ் வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட பாதியளவு வைரஸ் வகைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
  • ஆகவே, கரோனாவைத் தொடர்ந்து நாம் பல வைரஸ்களின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படுவது அதிகரிக்கிறது. இதனால் புதுப் புது வைரஸ்கள் மனிதர்களுக்குத் தொற்றிவிடுகின்றன.
  • பல்வேறு நாடுகளின் குகைகளில் வாழக்கூடிய வௌவால்களில் 5,000-க்கும் மேற்பட்ட வைரஸ் வகைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிவது அறிவியலாளர்கள் முன்னுள்ள முழுமுதற் கடமையாக உள்ளது.
  • அந்த வௌவால்களிலிருந்து தோன்றும் புதிய வைரஸ்கள் கரோனா வைரஸைப் போல நம்மைத் தொற்றி மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, அவற்றை நாம் கண்டறிந்து, கட்டுப்படுத்தி, மனித குலத்தைப் பேராபத்துக்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
  • காடுகளைக் காப்பது, நமது ஆரோக்கியத்தைப் போலவே நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் உத்தரவாதப்படுத்துவது, ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை நெறியாகக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு நியாயம் செய்திடுவோம்.

நன்றி: தி இந்து (12-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories