TNPSC Thervupettagam

ஷமியால் ஆனது இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்

November 19 , 2023 373 days 269 0
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (நவம்பர் 19) நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணியைக் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றிய பந்துவீச்சாளர் முகமது ஷமி, இறுதிப்போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
  • கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிகளில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் இருந்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு இணையான முக்கியத்துவம் பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுக்கு கிடைப்பதில்லை.
  • அதிலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் முகமது ஷமி செய்த சாதனைகள் குறித்து பெரியளவில் கவனம் அளிக்கப்படாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவரின் அபார ஆட்டம் அவரைப் பற்றி தற்போது ஊடகங்களை சிறிதளவு பேச வைத்துள்ளது.
  • உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனிலேயே முதலில் இடம்பெறாத முகமது ஷமி, பின்னர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி விக்கெட்டுகளைக் குவித்து, எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
  • அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிக் கோட்டை நியூசிலாந்து அணி நிதானமாக நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த அணியின் ஏழு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களின் உலகக்கோப்பை கனவைச் சுக்குநூறாக உடைத்தார் முகமது ஷமி.
  • லீக் ஆட்டங்கள் அனைத்திலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை எளிதாக  வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் கடுமையாகப் போராடியது.
  • இதுவரை நடைபெற்ற ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்தை இந்தியா வென்றதே இல்லை என்பதால், போட்டி தொடங்கும் முன்பே இந்திய ரசிகர்கள் சிறிது சந்தேகத்தில்தான் இருந்தனர்.
  • அதற்கேற்ற வகையில் நியூசிலாந்து வீரர்களும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 398 ரன்கள் என்ற இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர். வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி ரன்களை குவித்தனர். ஒருகட்டத்தில் நியூசிலாந்து அணிதான் வெற்றிபெறப் போகிறது என்ற எண்ணத்திற்கு இரு அணியின் ரசிகர்களும் வந்துவிட்டனர்.
  • அப்போது அதிரடியாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி. அதனையடுத்து டாம் லதாமின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்.
  • ஏற்கனவே நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரவீந்திரா ஆகியோரை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தியிருந்த ஷமி இவர்களின் விக்கெட்டையும் கைப்பற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
  • அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமி நியூசிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையாக களத்தில் இருந்த மிட்செல்லின் விக்கெட்டையும் வீழ்த்தி நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
  • கடைசியில் மொத்தமாக 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
  • 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததற்காக இந்திய ரசிகர்களால் கடும் அவதூறுகளுக்கு ஆளான அதே முகமது ஷமி, தற்போது இந்தியாவை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
  • அதற்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் என்று நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்குத் தூணாக விளங்கி வந்துள்ளார் முகமது ஷமி.
  • 2023 உலகக்கோப்பை தொடரில் அவரின் சிறப்பான ஆட்டம் அவரை இந்தத் தொடரின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது.
  • 2023 உலகக்கோப்பைத் தொடரில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடிய முகமது ஷமி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் முகமது ஷமி  படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

  • ஒருநாள் போட்டிகளில் அதிகமான ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி ஆவார். இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் ஷமி தற்போது ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் நான்கே போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராகவும், உலக அளவில் 3வது இடத்திலும் உள்ளார்.
  • ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் குறைந்த போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது ஷமி.
  • உலகக் கோப்பை போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் ஆவார். அதேபோல ஒரே உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராகவும் திகழ்கிறார்.
  • ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் மொத்தமாக 17 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 54 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • மேலும், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் முகமது ஷமி விக்கெட் எடுக்கும்பட்சத்தில், ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய உலகளவிலான முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பார்.
  • மிகக் குறைவான ஆட்டங்களில் விளையாடி, குறைந்த ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, அந்தப் பட்டியலில் இடம்பிடித்த வீரராகவும் ஷமி இருப்பார்.
  • மேலும், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ள ஷமி, முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க் மற்றும் மெக்கராத்தின் சாதனைகளை முறியடித்து முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
  • நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை முகமது ஷமி தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் இறுதிப்போட்டியில் முகமது ஷமியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று தருவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி: தினமணி (19 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories