- கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் தற்போது பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆண், பெண் பேதமில்லாமல் படிக்கவைக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. அதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பெண்பிள்ளைகள் பல பன்னாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர்.
- குறிப்பாக ஸ்டார்ட்-அப் துறையில் பெண்கள் படிப்படியாக உயர் பொறுப்பில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். திறன் ஆலோசனை நிறுவனமான லாங்ஹவுஸ் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி பெரும்பாலான பெண்கள் மனிதவளதுறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
- எஸ்பிஐ கார்டு நிறுவனத்தில் பணியாற்றிய அபர்ணா குப்புசாமி, சமீபத்தில் பாரத் பே நிறுவனத்தில் தலைமை இடர்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதேபோன்று ரெக்கிட் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்மிருதி ஹண்டா அதே பாரத் பே நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரியாக உள்ளார்.
- ஊடக நிறுவனமான அங்கிமீடியா நிறுவனரான மைலீதா அகாவில்லியம்ஸ், அப்கிரேடு கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச செயல்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- ஸ்டார்ட்-அப் நிறுவனமான பாலிகான் டெக்னாலஜியில் தலைமை மனிதவள அதிகாரியாக பூமிகா ஸ்ரீவஸ்தவா பதவி வகிக்கிறார். இதுபோல, கிளிக்ஸ் கேப்பிட்டலில் சந்த்வானா பெரிவால், டீல்ஷேரில் சாந்தனா ராமகிருஷ்ணன், காலேஜ்தேக்கோவில் கவிதா ஆசாத், வீகூப் டாட் காமில் சமதா பல்லால், டீகாட்டில் ரிஷுகார்க் ஆகியோர் தலைமை மனிதவள அதிகாரி பொறுப்பை ஏற்று திறம்பட வழிநடத்தி வருகின்றனர். மம்தா சிங் என்ற பெண், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதன்மை குழு பொறியியல் மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். மதுமிதா வெங்கட்ராமன் நெட்பிளிக்ஸில் உள்ளடக்கத்தின் தலைவராகியுள்ளார்.
- இந்தியாவில் வேலைவாய்ப்பில் பங்கேற்பு, ஊதியம், உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள்-ஆண்கள் இடையிலான இடைவெளி படிப்படியாக குறைந்து வருகிறது.
- உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அடுத்த 5 ஆண்டுகளில் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கேற்ப திறமையான பெண்களை வரவேற்கும் வகையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை உருவாக்க வேண்டியது அவசியம் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- பாலின சமத்துவம், பன்முகத்தன்மை இலக்குகளை அடைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நீண்டகால திட்டங்களை தீட்டி அதற்கேற்ற வகையில்செயல்பட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. இது மாற வேண்டும்.
- வணிகம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை அடைவதில் பெண்களுக்கு இருந்தவரலாற்று தடைகள் உடைக்கப்பட்டு இன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளனர். ஆண்களுக்கு நிகரான திறமையை தங்களாலும் வெளிப்படுத்த முடியும் என்பதையும் பெண்கள் நிரூபித்துள்ளனர்.
- இருப்பினும், சம வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கான கொள்கைகளை வரையறுத்து செயல்படுத்துவதே தொழில் துறையினரின் முன்னிருக்கும் தற்போதைய தலையாய பணி.
நன்றி: தி இந்து (16 – 04 – 2023)