- ஹமாஸ் மட்டுமல்ல. பாலஸ்தீனத்து மண்ணில் உதித்த அத்தனை இயக்கங்களும் ஆயுதம் ஒன்றே விடுதலைக்கு வழி என்று நம்பி வந்தவை. தேர்தலில் நிற்கலாம் என்கிற முடிவை எடுப்பதற்கு முன்னால், பத்தாண்டு கால போர் நிறுத்தத்தை ஹமாஸ் அறிவித்திருந்ததை முன்னர் பார்த்தோம். அதற்குப் பிறகுதான் அவர்கள் தேர்தலில் நின்றார்கள். பாலஸ்தீனத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தார்கள். அப்படி மக்கள் அங்கீகரித்த ஓர் அரசாங்கத்தைத்தான் பாலஸ்தீன அத்தாரிடியின் அதிபர் மம்மூத் அப்பாஸ் கலைத்துப் போட்டார்.
- சந்தேகமின்றி அது ஒரு திருதராஷ்டிர மனநிலை. தனது கட்சி தன் கண்ணெதிரே தோற்று நின்றதைத் தாங்க முடியாத ஆதங்கம். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள இயலாது. இஸ்ரேல் போர் தொடுக்கும், அமெரிக்கா நிதி உதவி செய்யாது, ஐ.நா. புறக்கணிக்கும் என்று காரணங்களை அவர் பட்டியலிட்டார்.
- இது ஹமாஸுக்கு மட்டுமல்ல. அவர்களுக்கு வாக்களித்த பாலஸ்தீன மக்கள் அத்தனை பேருக்குமே சகிக்க முடியாத கசப்புணர்வை அளித்தது. இனி எக்காலத்திலும் ஃபத்தாவுடன் ஒத்துப் போவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு ஹமாஸைத் தள்ளியது. அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள்.
- காஸாவில் இருந்த அத்தனை ஃபத்தா மற்றும் ஃபத்தா ஆதரவு அரசு அதிகாரிகளையும் கூண்டோடு அகற்றி அனுப்பி வைத்தார்கள். சண்டை வந்தது. கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றார்கள். நீங்கள் மேற்குக் கரையில் எப்படியோ இருந்துகொள்ளுங்கள், என்ன விதமான அரசியலை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். காஸா பக்கம் மட்டும் கால் வைத்து விடாதீர்கள். மீறி வைத்தால் திரும்பிப் போக மாட்டீர்கள்.
- சொல்லவில்லை. ஆனால், அதைத்தான் செய்தார்கள். கடந்த 2007 - 2008 காலக் கட்டத்தில் பாலஸ்தீனத்தில் நடந்த யுத்தம் என்பது இஸ்ரேல் -பாலஸ்தீன யுத்தமல்ல. ஹமாஸ் - ஃபத்தா யுத்தம்தான்.
- இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் உண்டு. மம்மூத் அப்பாஸ். ஃபத்தாவின் தலைவரும் பாலஸ்தீன அத்தாரிடியின் ஜனாதிபதியுமான அவர் ஒன்றும் இஸ்ரேலிய ஆதரவாளர் அல்லர். யாசிர் அர்ஃபாத் உயிருடன் இருந்த போதும் சரி; அவருக்குப் பிறகு அப்பாஸ் பொறுப்பேற்ற பிறகும் சரி. பாலஸ்தீனர்களின் நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் அவர் பின்வாங்கியதே இல்லை.
- ஆனால், மிதவாதி. பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படக் கூடியவர். சர்வதேச அரசியல் சூழலை மனதில் இருத்தி, பாலஸ்தீனத்தின் உரிமைகளுக்காகப் பேசக் கூடியவர்.
- மம்மூத் அப்பாஸ் பாணியில் பேசினாலும் சரி, ஹமாஸ் பாணியில் பேசினாலும் சரி. இஸ்ரேல் தான் செய்ய நினைப்பதை மட்டுமே செய்யும் என்றாலும், அவர்கள் மம்மூத் அப்பாஸ் பரவாயில்லை என்று நினைத்தார்கள். அதாவது, அவர்கள் எதிர்பார்த்தது, தங்கள் மறுப்புகளுக்குக் கண்டன அறிக்கைகளுடன் அடங்கிப் போகிற ஒரு தலைவர்தான் பாலஸ்தீன அத்தாரிடியின் பொறுப்பாளராக இருக்க வேண்டும். மாறாக, திரும்பிய வேகத்தில் நூறு ராக்கெட்டுகளை ஏவிக் கலவரம் செய்பவர்கள் அல்லர்.
- இஸ்ரேல் மட்டுமல்ல. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலை நாடுகள் அனைத்துமே மம்மூத் அப்பாஸையும் அவரது ஃபத்தாவையும் ஆதரித்தன. அராஜகமாக அவர்கள் ஹமாஸிடம் இருந்து ஆட்சியைப் பறித்தாலும் அது சரியே என்று நினைத்தார்கள். ஜூன் 15, 2007 அன்று ஸலாம் ஃபயாத் என்பவரை மம்மூத் அப்பாஸ் பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும்படிப் பணித்தார். அவரும் அப்பாஸ் ‘விரும்பிய வண்ணம்’ ஓர் அமைச்சரவையை உருவாக்கினார். காத்திருந்தாற்போல அமெரிக்கா உடனே அந்த ஆட்சி மாற்றத்தையும் புதிய அமைச்சரவையையும் அங்கீகரிப்பதாக அறிவித்தது.
- கவனியுங்கள். அங்கீகரிப்பதென்றால் வெறும் வாய்ச் சொல் அல்ல. பதினைந்து மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த பாலஸ்தீனத்துக்கான நிதி உதவிகள் இனி மீண்டும் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அமெரிக்கா அறிவித்த சூட்டிலேயே ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் பாலஸ்தீனத்துக்குச் செய்து வந்த பழைய உதவிகளைச் செய்யஆரம்பித்தார்கள். அப்போதைய இஸ்ரேலிய\ பிரதமர் இஹுத் ஓல்மெர்ட், நிறுத்தி வைத்திருந்த வரிப் பணத்தையெல்லாம் திருப்பித் தருவதாகச் சொன்னார்.
- இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? பிரச்சினை ஹமாஸ்தானே தவிர பாலஸ்தீனத்தின் மக்களல்ல. இஸ்ரேலுக்கோ இதர மேற்கு நாடுகளுக்கோ பாலஸ்தீனர்களின் நலன் மீது அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஹமாஸை ஒழித்துவிட்டால் பாலஸ்தீனர்களின் வாழ்வில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும்.
- இதுதானே?
- ஆனால், உண்மை அதுவல்ல. அது சிறிது பயங்கரமானது.
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 11 – 2023)