TNPSC Thervupettagam

ஹமாஸ் தொடங்கியது இஸ்ரேல் தொடர்கிறது

October 18 , 2023 450 days 284 0
  • பத்து நாள்களைக் கடந்துவிட்ட நிலையிலும், பதற்றம் குறையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காசா பிரச்சினை. யூதர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வுதினமாகக் கடைப்பிடிக்கும் சப்பாத்து தினமான சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காசாவை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
  • ஹமாஸ் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் 2,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர் கள் பலியாகியிருக்கிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு இடமில்லாமல் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. கொல்லப்பட்டவர்களின் சடலங்களை வைக்க இடமில்லாமல் சவக்கிடங்குகள் நிரம்பிவழிகின்றன.
  • மின்சாரம், எரிபொருள் வரத்து இஸ்ரேலால் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், மருத்துவமனைகள் மரணக் கிடங்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. 24 மணி நேரக் கெடு விதித்து காசா மக்களைத் தெற்குப் பகுதிக்கு விரட்டிய இஸ்ரேல், அங்கும் தாக்குதல் நடத்தியிருக்கிறது. காசா - எகிப்து இடையிலான ரஃபா பகுதியையும் மூடுமாறு இஸ்ரேல் அழுத்தம் கொடுத்ததால், வெளியேற வழியின்றி காசா மக்கள் தத்தளிக்கிறார்கள்.
  • மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தியர்கள் எடுக்கும் முயற்சிகளும் தடைபட்டிருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், விரைவில் காசா மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு இறப்புச் சான்றிதழைத் தயார் செய்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
  • மறுபுறம், ஹமாஸ் தாக்குதல்களில் உயிரிழந்த பலரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்திருப்பதாக இஸ்ரேலியர்கள் கதறுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.
  • இஸ்ரேல்-பாலஸ்தீன சர்ச்சை நீண்ட காலமாகத் தொடர்வதுதான் என்றாலும் இந்த முறை போரைத் தொடங்கியது ஹமாஸ் அமைப்பினர்தான். இசை நிகழ்ச்சியில் குழுமியிருந்த இஸ்ரேலியர்களைத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றது, நூற்றுக் கணக்கானோரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருப்பது, இவற்றை எல்லாம் பெருமையுடன் விளம்பரப்படுத்திக்கொள்வது என ஒரு தீவிரவாத அமைப்புக்கே உரிய அணுகுமுறைகளை ஹமாஸ் கையாண்டுள்ளது. இவையெல்லாம் பாலஸ்தீன மக்கள் மீது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட வேண்டிய நியாயமான அனுதாபத்தையும் ஆதரவையும் பலவீனப்படுத்துகின்றன.
  • போர்களில் அழிவைச் சந்திப்பது சாதாரண மக்கள்தான். அதிலும் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தப் போரிலும் அதுதான் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதாகக் கூறி காசா மீதான தாக்குதலைத் தொடர்கிறது இஸ்ரேல். இரு தரப்பு இழப்புகளையும் பார்க்கும்போது மனிதாபிமானம் மரணமடைந்திருப்பதையே பார்க்க முடிகிறது.
  • இஸ்ரேலோ, ஹமாஸோ இதுவரை சண்டை நிறுத்தம் குறித்துப் பேச முன்வரவில்லை. சண்டை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டுவந்த முயற்சியும் தோல்வியடைந்திருக்கிறது. இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், காசாவைக் கைப்பற்றுவது தவறு எனக் கண்டித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்குச் செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், காசாவை மீண்டும் கைப்பற்றுவதை இஸ்ரேலியர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. தற்காப்புத் தாக்குதல் என்பதைத் தாண்டி, மிகக் கொடூரத் தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நிகழ்த்துவதாகக் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 600 நாள்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், காசாவில் உயிர் வதை தொடர்வதை உலகம் அனுமதிக்கக் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories