TNPSC Thervupettagam

ஹரியாணா: காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்

October 11 , 2024 96 days 84 0

ஹரியாணா: காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்

  • நடந்து முடிந்த ஹரியாணா, ஜம்மு-​காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்​களில் காங்கிரஸுக்குக் கிடைத்​திருக்கும் பாடங்கள் தேசிய அரசியலில் பேசுபொருளாகி​யிருக்​கின்றன. ஹரியாணாவில் போட்டி​யிட்ட 89 தொகுதி​களில் 37இலும், காஷ்மீரில் - போட்டி​யிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்​கிறது.
  • ஜம்மு - காஷ்மீரில் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருப்பதில் நிம்ம​தி​யடைந்​திருக்கும் காங்கிரஸ், ஹரியாணா தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தேர்தல் ஆணையத்​துடன் யுத்தம் நடத்திக்​கொண்​டிருக்​கிறது. இந்தச் சூழலில், இண்டியா கூட்ட​ணிக்​குள்​ளிருந்து காங்கிரஸுக்கு எதிரான விமர்​சனங்கள் எழத் தொடங்கி​யிருக்​கின்றன. அடுத்து மகாராஷ்டிரம், ஜார்க்​கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற​விருக்கும் நிலையில் இந்த விமர்​சனங்கள் முக்கி​யத்துவம் பெறுகின்றன.
  • தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே, உத்தரப் பிரதேச சட்டமன்​றத்தின் 10 தொகுதி​களுக்கான இடைத்​தேர்​தலில் ஆறு வேட்பாளர்​களைத் தன்னிச்​சை​யாகவே அறிவித்து​விட்டது சமாஜ்வாதி கட்சி. காங்கிரஸ் ஐந்து இடங்கள் வேண்டுமென ஏற்கெனவே தெரிவித்​திருந்தது; பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில தொகுதி​களில் போட்டி​யிடும் எண்ணத்​திலும் இருந்தது. சர்ச்சை எழுந்​ததைத் தொடர்ந்து, கூட்டணி அப்படியே தொடர்வதாக அகிலேஷ் யாதவ் விளக்​கமளித்து​விட்​டார். எனினும், இந்தக் குழப்​பத்தால் பாஜக குதூகலமடைந்​திருக்​கிறது. ஹரியாணா தோல்வி உத்தரப்​ பிரதேசத்​திலும் தொடரும் எனப் பேசத் தொடங்கி​யிருக்​கிறது.
  • அதேபோல், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனித்​துதான் போட்டி என்று அழுத்தம் திருத்​த​மாகச் சொல்லி​விட்டது ஆம் ஆத்மி கட்சி. அதீத நம்பிக்கையால் காங்கிரஸ் தோல்வியடைந்​திருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் மறைமுக​மாகச் சாடியிருக்​கிறார். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் முதன்மைக் கூட்டணிக் கட்சியான (உத்தவ் தாக்கரே தலைமையிலான) சிவசேனாவும் காங்கிரஸைக் கடுமையாக விமர்​சித்திருக்​கிறது.
  • காங்கிரஸ் தன்னைச் சுயவிமர்சனம் செய்து​கொள்ள வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இடதுசா​ரி​களும் அறிவுறுத்​தி​யிருக்​கின்​றனர். ஹரியாணா தோல்வி குறித்து காங்கிரஸ் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என ஒமர் அப்துல்லா கூறியிருப்​பதும் கவனிக்​கத்​தக்கது. மத்தி​யப் ​பிரதேசம், ராஜஸ்​தான், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்​களில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய வாய்ப்​பளிக்​காததால் தோல்வியடைந்த காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் துணையுடன்தான் பாஜக பெரும்​பான்மை பெறுவதைத் தடுத்து நிறுத்​தியது.
  • இதைச் சரியாகச் சுட்டிக்​காட்​டி​யிருக்கும் திரிணமூல் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளால்தான் பாஜகவை எதிர்​கொள்ள முடியும் என்றும் குறிப்​பிட்​டிருக்​கிறது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பாஜகவின் வெற்றியை மம்தா பானர்ஜி தடுத்து​வருவதை திரிணமூல் காங்கிரஸ் கட்சி​யினர் நேரடி​யாகவே சுட்டிக்​காட்டு​கின்​றனர். வாக்கு எண்ணிக்கை தொடர்​பாகக் காங்கிரஸ் எழுப்​பி​யிருக்கும் சந்தேகம் குறித்து கூட்டணிக் கட்சிகள் பெரிதாகக் கவனம் செலுத்​தவில்லை என்பதும் கவனிக்​கத்தக்க விஷயம்.

தோல்வி தரும் பாடங்கள்:

  • ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குக் பல காரணங்கள் முன்வைக்​கப்​படு​கின்றன. காங்கிரஸ்தான் வெல்லும் எனப் பெரும்​பாலான கருத்​துக்​கணிப்புகள் சொல்லிவந்​தா​லும், தனது அரசு கொண்டுவந்த நலத்திட்​டங்கள் நிச்சயம் பாஜகவுக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என நம்பியதாக முதல்வர் நயப் சிங் சைனி குறிப்​பிட்​டிருக்கிறார்.
  • ஹரியாணாவில் உள்ள 17 தனித் தொகுதி​களில் எட்டு தொகுதி​களைக் கைப்பற்றி​யிருக்​கிறது பாஜக. இது தலித் மக்களின் நலனுக்காக பாஜக அரசு கொண்டுவந்த திட்டங்​களுக்குக் கிடைத்த வெற்றி என அக்கட்​சி​யினர் குறிப்​பிடு​கின்​றனர். ஜம்முவில் உள்ள ஏழு தனித்​தொகு​தி​களிலும் பாஜக வென்றிருப்​பதும் முக்கி​யத்துவம் வாய்ந்தது.
  • பூபேந்தர் சிங் ஹூடா ஆட்சிக்​ காலத்​தில், தலித்து​களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்​றதும், தலித் தலைவரான குமாரி செல்ஜா ஓரங்கட்​டப்​பட்​டதும் ஹரியாணாவில் காங்கிரஸுக்கான தலித்து​களின் ஆதரவைக் கணிசமாகக் குறைத்​திருக்​கின்றன. காங்கிரஸ் வேட்பாளர்​களில் 70 சதவீதத்​துக்கும் அதிகமானோர் ஹூடாவின் ஆதரவாளர்கள். இதனால், தேர்தல் பிரச்​சா​ரத்தில் செல்ஜா முனைப்பே காட்ட​வில்லை. இறுதிக்​கட்​டத்​தில்தான் ராகுலின் முயற்​சியால் ஹூடாவும் செல்ஜாவும் ஒரே மேடையில் தோன்றினர். எனினும் காலம் கடந்து​விட்டிருந்தது.
  • எல்லா​வற்​றையும் தாண்டி, ஏறத்தாழ பாஜகவின் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்​தும்கூட காங்கிரஸ் தோற்றது, கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாத​தால்தான் எனப் பேசப்​படு​கிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி​யுடன் கூட்டணி அமைத்​துக்​கொள்​ளாதது வாக்குகள் பிரிய வழிவகுத்து​விட்​ட​தாகப் பேசப்​படு​கிறது. அதேவேளை​யில், ஆம் ஆத்மி கட்சி​யுடன் கூட்ட​ணி அமைத்​திருந்​தாலும் அதிகபட்சம் மூன்று தொகுதி​களைக் காங்கிரஸ் கூடுதலாக வென்றிருக்கக்​கூடும்.
  • ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் இண்டியா கூட்டணி தொடர்​கிறது என்கிற வியூகம் வகுக்​கப்​பட்​டிருந்தால் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு நிச்சயம் அதிகரித்​திருக்​கும். கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் போட்டி​யிட்​டதால் 2024 மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் காங்கிரஸுக்கு 47% வாக்கு​களும் ஐந்து இடங்களும் கிடைத்தன என்பதை ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறார்.
  • மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை டெல்லியில் கடந்த 10 ஆண்டு​களாகத் தொடர்ந்து தோல்வியடைந்​து​வரும் காங்கிரஸுக்கு 2024 தேர்தலில் மொத்தம் உள்ள ஏழு தொகுதி​களில் மூன்றை ஆம் ஆத்மி கட்சி ஒதுக்​கியது. அந்தப் பெருந்​தன்மையை ஹரியாணாவில் காங்கிரஸ் காட்ட​வில்லை என்று ஆம் ஆத்மி கட்சி​யினர் அங்கலாய்க்​கின்​றனர்.
  • பல தருணங்​களில், கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கி​யத்துவம் கொடுக்க காங்கிரஸ் தேசியத் தலைமை விரும்​பினாலும், கட்சியின் மாநிலத் தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்​காதது ஒரு பிரச்​சினை​யாகச் சுட்டிக்​காட்​டப்​படு​கிறது. ஆம் ஆத்மி கட்சி ஹரியாணாவில் எந்த இடமும் இல்லை என பூபேந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபேந்தர் சிங் ஹூடா அலட்சி​ய​மாகப் பேசியது ஓர் உதாரணம். டெல்லி​யில், ஆம் ஆத்மி அரசை காங்கிரஸ் தலைவர்கள் சந்தீப் தீட்சித், அஜய் மாக்கன் போன்றோர் கடுமையாக விமர்​சித்து​வரு​வதும் இந்தக் கசப்பு​களுக்கு ஒரு காரணம்.
  • மத்தி​யப்​ பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது அகிலேஷ் யாதவ் குறித்து கமல்நாத் அலட்சி​ய​மாகப் பேசியதை இப்போதுவரை சமாஜ்வாதி கட்சி​யினரால் மறக்க முடிய​வில்லை. இந்தி பேசும் மாநிலங்​களில் பாஜகவைத் தனியாக எதிர்​கொள்ளும் வலிமை இல்லாத காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்வதன் அவசியத்தை இப்போது உணர்ந்​திருக்கும் என நம்பலாம்!

பாஜகவின் ராஜபாட்டை:

  • மோடிக்கு மிகவும் நெருக்​க​மானவரான மனோகர் லால் கட்டாரின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்த நிலையில், முதல்வர் பதவியிலிருந்து அவரை அகற்ற பாஜக தயங்க​வில்லை. ஒருகாலத்தில் கட்டாரின் ஸ்டெனோவாகவும் ஓட்டுநராகவும் இருந்த நயப் சிங் சைனியை முதல்​வ​ராக்​கியதுடன், இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தியது பாஜக.
  • நயப் சிங் சைனியே இந்தத் தேர்தலை முன்னெடுத்துச் செல்வார் என அமித் ஷா பகிரங்​க​மாகவே அறிவித்​தார். காங்கிரஸ் ஆதரவுத் தளமான ஜாட் சமூகத்​தினர் அல்லாத பிற்படுத்​தப்பட்ட சாதிகளின் அணிதிரட்​டலில் பாஜக ஈடுபட்டது. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் நயப் சிங் சைனி அதன் முகமாக முன்வைக்​கப்​பட்​டார். அதற்கான பலனும் கிடைத்து​விட்டது.
  • உண்மை​யில், இந்தத் தேர்தலில் மொத்தம் நான்கே பிரச்​சாரக் கூட்டங்​களில்தான் மோடி கலந்து​கொண்​டார். எனினும், ஹரியாணா ‘ஹாட்​ரிக்’ வெற்றியை அம்மாநில பாஜகவினர் பிரதமர் மோடிக்குச் சமர்ப்​பித்​திருப்பதன் மூலம் தேசிய அரசியலில் மோடியின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்​திருப்​ப​தாகக் காட்ட முயல்​கின்​றனர். கூடவே, எந்தக் காலத்​திலும் தேர்தல் முனைப்​பிலேயே இருக்கும் பாஜக – வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்​களுக்கான பணிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி​விட்டது.
  • மகாராஷ்டிரம், ஜார்க்​கண்டில் பல்வேறு திட்டங்​களைப் பிரதமர் மோடி அறிவித்​திருக்​கிறார். ஒருபுறம் ஹரியாணா பாஜகவுக்குக் கிடைத்த வெற்றிக்கான காரணி​யாகத் தன்னை முன்னிறுத்​திக்​கொள்​வதில் மோடி ஆர்வம் காட்டும் நிலையில், ஹரியாணா தோல்விக்குப் பொறுப்​பேற்க ராகுல் தயங்கு​வதும் விமர்​சனங்​களுக்கு வழிவகுத்​திருக்​கிறது.
  • ஒரு மாநிலத் தேர்தலின் முடிவு, மற்றொரு மாநிலத் தேர்தலின் முடிவை முழுமை​யாகத் தீர்மானித்து​விடும் எனச் சொல்ல முடியாது. அந்தந்த மாநிலப் பிரச்​சினை​களும், ஆட்சி​யாளர்​களின் செயல்​பாடு​களும் பிற காரணி​களும்தான் அதைத் தீர்மானிக்​கும். எனினும், அரசியல்​ரீ​தி​யாகக் காங்கிரஸைப் பலவீனப்​படுத்த பாஜகவுக்கு மட்டுமல்ல, உளவியல்ரீதியாக அக்கட்​சிக்கு நெருக்கடி கொடுக்க இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கும் ஹரியாணா தேர்தல் தோல்வி ஒரு கருவி​யாகி​யிருக்​கிறது.
  • ஜார்க்​கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் அவரது மனைவியையும் ராகுல் சந்தித்​திருப்பதன் மூலம் காங்கிரஸ் சற்றே சுதாரித்​துக்​கொண்​டிருப்பது தெரிகிறது. எனினும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கி​யத்துவம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்​திட்​டங்​களை​யும், மாநிலத் தலைவர்​களின் பதவி ஆசையைச் சரிகட்டும் உத்தி​களையும் கைக்கொள்​ளா​விட்டால் காங்கிரஸுக்கு சோதனைக் காலம் தொடர்​வதைத் தடுக்க முடியாது!

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories