- நடிகை சமந்தா, வைரஸ் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடை மாற்று மருந்தாக எடுத்துக்கொள்ளத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பரிந்துரைத்தது மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு ஆபத்தானது எனவும் மருத்துவம் தொடர்பான தகவல்களைப் பகிரும்போது பிரபலங்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
- இந்நிலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்த மருத்துவத் தகவல்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
ஏன் ஆபத்து?
- ஹைட்ரஜன் பெராக்சைடு தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படும் வேதிப்பொருள். இது காகிதம், பின்னலாடைத் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுகிறது.
- அத்தகைய வேதிப்பொருளை நாள்பட்ட நுரையீரல் - சுவாச நோய்களுக்குப் பயன்படுத்துவது உடல் நலத்திற்குத் தீங்கையே ஏற்படுத்தும். மேலும், ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாச நோய்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கான போதிய அறிவியல் சான்றுகளும் இல்லை.
- மேலும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்னென்ன பாதிப்புகள்?
- ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்பாடு சிலருக்குத் தலைவலி, மயக்கம், வாந்தி, தொண்டை எரிச்சல், தீவிர வயிற்று வலி, மூச்சுத்திணறல், குடல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தில் முடியலாம். சிலருக்கு அரிதாக ரத்த ஓட்டப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி, பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 07 – 2024)