TNPSC Thervupettagam

‘ஆரோக்ய சேது’ - மெய்க் காப்பாளன்!

May 21 , 2020 1704 days 1367 0
  • இன்று உலகமே கரோனா தீநுண்மியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது, இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், கோர கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலில், உயிர்ப் பலி எண்ணிக்கையில் இந்தியா விதிவிலக்காகி உள்ளது.
  • மத்திய அரசின் நன்முயற்சியால் விதிவிலக்காக்கப்பட்டுள்ளது. சுமார் 6.63 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டனில், 38 நாள்களில் 50,000 பேரைத் தாக்கிய கரோனா தீநுண்மியால், 137 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அந்த எண்ணிக்கையை எட்ட 98 நாள்கள் தேவைப்பட்டுள்ளன.
  • அதாவது, பிரிட்டன் வேகத்தில் என்றால் 38 நாள்களில் 10 லட்சம் போ், 98 நாள்களில் 43 லட்சம் என நோய் பரவி இருக்க வேண்டும். இதைத்தான் மத்திய, மாநில அரசுகளின் நன்முயற்சியால் விதிவிலக்காக்கப்பட்டுள்ளது என்கிறோம்.
  • இவை சாதாரணமாகவும் நடந்து விடவில்லை.சரியான நேரத்தில் மார்ச் 22-ஆம் தேதி எந்தத் தயக்கமும் இன்றி பொது முடக்கத்தை அறிவித்தது, ஆரம்பத்திலேயே நோய்த்தொற்று உடையோரைத் தனிமைப்படுத்தியது.
  • அவா்களுடன் தொடா்புடையவா்களையும் இன்று வரை தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி வருவது, தொற்றுடையோர் வசித்த பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தை முற்றிலும் குறைத்தது எனப் பல காரணிகள் உள்ளன.
  • இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக வந்துள்ள மற்றுமொரு காரணிதான் ‘ஆரோக்ய சேது’ செயலி.

ஆரோக்ய சேது செயலி

  • மத்திய அரசின் தேசிய தகவல் மையம் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதை நமது அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட் போன்) பதிவிறக்கம் செய்து உள்புக வேண்டும்.
  • இதில் சுய மதிப்பீடுகள் கேட்கும். அதில் உங்களது உடல் பிரச்னைகள், கடந்த 14 நாள்களைய பயணக் குறிப்புகள் உள்ளிட்டவற்றைக் கொடுக்க வேண்டும். இவை மையப்படுத்தப்பட்ட சா்வரில் பாதுகாக்கப்படும்.
  • இதில் சிகிச்சை தேவைப்படுவோரின் விவரங்களை அதில் உள்ள புரோகிராமே முடிவு செய்து மருத்துவக் குழுவுக்கு அனுப்பி வைக்கும். அந்தக் குழு யாருக்கு மருத்துவ உதவி, பரிசோதனைகள் தேவை என்பதை முடிவு செய்யும்.
  • இந்தச் செயலி நமது ஜிபிஎஸ், புளுடூத் மூலம் நமது பயணக் குறிப்புகளை நமது செல்லிடப்பேசியிலேயே பதிவு செய்யக் கூடியது.
  • அதாவது, நாம் வெளியே செல்லும்போது பலரையும் சந்திக்க நேரிடும். நாம் அறியாத சிலரும் நம் அருகில் நின்று விட்டு சென்றிருக்கக் கூடும்.
  • இதில் யார் யாரெல்லாம் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பயன்படுத்தி இருந்தார்களோ அவா்களின் செல்லிடப்பேசி எண்கள் அனைத்தையும் குறியீடு வடிவில் செயலியே நமது செல்லிடப்பேசியில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
  • ஒருவேளை நமக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், நமது தரவுகள், நமது செயலி சேமித்த தரவுகள் உள்ளிட்டவை இந்திய அரசுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.
  • அதன் மூலம் நம்முடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள், நம்மை அறியாமலேயே நம்முடன் நெருக்கமாகப் பயணித்தவா்கள் உள்ளிட்டோர் எளிதாகக் கண்டறியப்படுவா்.
  • நாம் சென்று வந்த இடம் எல்லாம் வரைபட வடிவில் கிடைக்கும் என்பதால். நோய்த்தொற்று மையங்களை எளிதாகக் கணிக்கலாம்.
  • நோய்த்தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும், கட்டுப்படுத்தப்பட்டு குணப்படுத்தப்படும்.
  • ஒருவேளை நாம் தொற்றுக்கு உள்ளாகவே இல்லை என்றால், நமது செல்லிடப்பேசி செயலி சேமித்த தகவல்கள் 30 நாள்களில் தானாக அழிந்துவிடும்.
  • அரசே நினைத்தாலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகாதோரின் தகவல்களைப் பெற முடியாத வகையில் அமைந்ததுதான் இதன் சிறப்பு.
  • மேலும், சாதாரண செல்லிடப்பேசி உள்ளவா்களுக்காக ‘ஊடாடு குரல் பதில் முறை -ஐவிஆா்எஸ்’ செயல்படுகிறது. கட்டணம் இல்லா சேவையான ‘1921’ என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், ஆரோக்கியம் குறித்த தகவல்கள் செல்லிடப்பேசி வாயிலாக மக்களிடம் பெறப்பட்டு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படும்.
  • இவற்றைத்தான் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ‘நாம் கண்காணிக்கப்படுகிறோம், மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன’ என்றார்.
  • தற்போது தனி மனித உரிமைகள் குறித்து மட்டுமே பேசும் நேரம் அல்ல. நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்துச் சிந்திக்கும் நேரம்.
  • இந்தக் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில், ஒவ்வொரு குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை. ஒவ்வொரு குடிமக்களின் கடமை, தங்களது சுய பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

மக்களைப் பாதுகாப்போம்

  • இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாக சென்னை-கோயம்பேடு சந்தையை எடுத்துக் கொள்வோம். அங்கு அரசின் முன்னெச்சரிக்கையைப் புறந்தள்ளி, சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்காமல் கூடிய பெருங்கூட்டம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று மேலும் வேகம் எடுக்க பெரும் காரணமாகி விட்டது.
  • அங்கு வந்து சென்றவா்களால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை நாம் மிகவும் பாதுகாப்பாக உணா்ந்த பகுதியெல்லாம், இன்று திடீரென சிவப்பு மண்டலங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒருவேளை ‘ஆரோக்ய சேது’ செயலியை அனைவரும் முறையாகப் பயன்படுத்தியிருந்தால், பல சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்திருக்கலாம்.
  • எனவே, தனி மனித சுய பாதுகாப்பில் இந்த ‘ஆரோக்ய சேது’ ஒரு மெய்க் காப்பாளன்; இதுவரை 10.83 கோடி போ் வரை பதிவிறக்கம் செய்துள்ள இந்தச் செயலியின் மூலம் இதுவரை 650 ஹாட்ஸ்பாட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்லாயிரம் போ் முன்னெச்சரிக்கையாகக் காப்பாற்றப்பட்டுள்ளனா்.
  • எனவே, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலம் முடியும் வரை ‘ஆரோக்ய சேது’ என்ற மெய்க் காப்பாளன் மக்களுக்கு அவசியமானதாகும். தயக்கம் வேண்டாம். அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வோம். மக்களைப் பாதுகாப்போம்.

நன்றி: தினமணி (21-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories