‘எக்ஸ்-ரே’ எடுப்பதில் ஏன் இவ்வளவு தடைகள்?
- நான் ஒரு ஓய்வுபெற்ற மருத்துவர். எளிய மக்களின் உடல்நலம் காக்கும் செயல்பாடுகள் சார்ந்து ஓர் அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறேன். தமிழகத்தின் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களும், என் மருத்துவ நண்பர்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள்.
- ‘எக்ஸ்-ரே’ என்பது மிக அடிப்படையான ஒரு பரிசோதனை முறை; பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய இது உதவுகிறது. நிமோனியா, காசநோய், நுரையீரல் வீக்க நோய், புற்றுநோய், கோவிட் போன்ற எண்ணற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. நியாயமாகப் பார்த்தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை! தமிழகத்தில் ஏறத்தாழ 2,200 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
- இவற்றில் 320 நிலையங்களில்தான் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளது. எனினும், இந்த நிலையங்களிலும் அந்த வசதி முழுமையாகப் பயன்பாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான பிரச்சினை. நிறைய இடங்களில் ‘எக்ஸ்-ரே’ இயந்திரம் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பழுதடைந்து உள்ளது.
- இயந்திரம் நல்ல நிலையில் இருக்கும் இடங்களில் ‘எக்ஸ்-ரே’ பிலிம் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு மாதத்தில் ஒரு நிலையத்தில் அதிகபட்சம் ஐந்து ‘எக்ஸ்-ரே’தான் எடுக்க முடிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல், தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் பிலிம் பற்றாக்குறை நிலவிவருகிறது. ‘எக்ஸ்-ரே’ எடுக்க, நோயாளிகளிடம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்திலேயே பிலிம் வாங்கிவிடலாம்.
- இப்படியான பிரச்சினைகள் காரணமாக, சாதாரண ‘எக்ஸ்-ரே’ எடுக்க நோயாளி பல கி.மீ. அலைய வேண்டியுள்ளது. தற்போது 100 நாள் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் இந்தியா முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமில் ஒரு திட்டமாக அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.
- தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை வைத்து அனைவருக்கும் ‘எக்ஸ்-ரே’ எடுக்க முடியாது. தனியாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கத் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது. இப்படியான சூழலில், அரசு உடனடியாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘எக்ஸ்-ரே’ பிலிம் குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)