- கடந்த ஜூன் 2ஆம் தேதி, ஒடிஷாவின் பாலாசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில், 275 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் மிக மோசமானதாகக் கருதப்படும் இந்த விபத்து, இந்திய ரயில்வே துறை செயல்படுத்திவரும் ‘கவச்’ (கவசம்) பாதுகாப்பு அமைப்பு குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது.
- விபத்துகளைத் தவிர்க்கும் ‘கவச்’: ‘கவச்’ என்பது இந்திய ரயில்வே துறையின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு, தர நிர்ணய நிறுவனத்தில் (Research Design and Standards Organisation) தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு. இது ரயில் இன்ஜின், இருப்புப் பாதை, சிக்னல் என மூன்றிலும் பொருத்தப்படும் மின்னணுச் சாதனங்கள், ரேடியோ அலைவரிசைச் சாதனங்களின் தொகுப்பு ஆகும். ரயில் விபத்துகளை முற்றிலும் தவிர்த்து, விபத்து மரணங்கள் அற்ற நிலையை அடைவதே இந்த அமைப்பின் இறுதி இலக்கு.
- ரயில் ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்த வேண்டிய சிக்னல்களில் ரயிலை நிறுத்தத் தவறுவதே, ரயில் மோதல் விபத்துகள் நிகழ்வதற்கான முதன்மைக் காரணமாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் ஓட்டுநர் ஒருவர் சிக்னலைக் கவனிக்காமல் ரயிலை ஓட்டிச் சென்றுவிட்டால், அந்த ரயில் இன்னொரு ரயிலுடன் மோதிவிடாமல் தடுப்பதற்கான ஏற்பாடாக (Anti Train Collision System), ‘கவச்’ செயல்படும். ரயில் ஓட்டுநர் சிக்னலில் நிற்காமல் செல்லும்போது எச்சரிக்கை எழுப்பும். அதே பாதையில் குறிப்பிட்ட தொலைவுக்குள் இன்னொரு ரயில் வந்துகொண்டிருந்தால், உடனடியாக ரயிலின் பிரேக்குகள் ‘கவச்’ அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுவிடும்.
- அதேபோல், ரயில் ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாடு தொடர்பான விதிகளைப் பின்பற்றத் தவறினால், ரயிலில் இருக்கும் பிரேக் அமைப்பு தன்னிச்சையாகச் செயல்பட்டு, ரயிலின் வேகத்தை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளன. ரயில்வே லெவல் கிராஸிங் கேட்டுகளுக்கு அருகே ரயில் வரும்போது வேகத்தை மட்டுப் படுத்த வேண்டும் என்று ஓட்டுநரை எச்சரிப்பதற்காக உரக்க விசில் எழுப்பப்படும். இவை தவிர, மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இதில் உள்ளன.
- செலவு எவ்வளவு? ‘கவச்’ அமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரைரூ.16.88 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில் பாதைகளில் ‘கவச்’அமைப்பைப் பொருத்துவதற்கு ஒவ்வொருகி.மீ.க்கும் தலா ரூ.50 லட்சம் செலவாகும்என்று மதிப்பிடப் பட்டுள்ளது. உலகின்வளர்ந்த நாடுகள் பலவற்றில் இதுபோன்றதொழில்நுட்பத்துக்கு ரூ.2 கோடிவரை செலவழிக்கப்படும் நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கவச்’, குறைந்தசெலவில் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில் பாதை சுமார் 68,000 கி.மீ. ஆகும். இதை வைத்துக் கணக்கிட்டால், இந்தியா முழுவதும் உள்ள ரயில் தடங்களிலும், ரயில்களிலும் இந்த அமைப்பைப் பொருத்துவதற்கு ரூ.50,000 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- அமலாக்கத்தின் நிலை: இப்போதைக்கு 34,000 கி.மீ. தொலைவுள்ள ரயில் பாதையில், ‘கவச்’ அமைப்பு பொருத்தப்படுவதற்கு ரயில்வேவாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மத்திய ரயில் மண்டலத்துக்கு உள்பட்ட 1,455 கி.மீ. ரயில் பாதையில்‘கவச்’ பொருத்தப் பட்டுள்ளது.
- 2022 மார்ச் 4 அன்று தெலங்கானாவின் குல்குட்டா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில், ‘கவச்’ இன் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டுப் பயனளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2024மார்ச் மாதத்துக்குள் இந்தியாவின் மிக அதிகரயில் போக்குவரத்தைக் கொண்ட டெல்லி-ஹெளரா, டெல்லி-மும்பை ரயில் பாதைகளில் ‘கவச்’ அமைப்பை முழுமையாகப்பொருத்திவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மேலும் 4,000-5,000 கி.மீ-க்கும் இதை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- ‘கவச்’ இல்லாததுதான் ஒடிஷா ரயில் விபத்துக்குக் காரணமா? - ஒடிஷா மாநிலத்தை உள்ளடக்கிய தென்கிழக்கு ரயில் மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் பாதைகளில் ‘கவச்’ அமைப்பு பொருத்தப்படவில்லை. இதற்காக பட்ஜெட்டில் ரூ.468.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை செலவழிக்கப்படவே இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
- இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்துவரும் நிலையில், ‘கவச்’ அமைப்பு இல்லாததற்கும் இந்த விபத்துக்கும் தொடர்பில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ‘மின்னணு இன்டர்லாக்கிங் சிக்னல்’ அமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே வாரியமும் கூறியுள்ளது. மேலும், இந்த மாற்றம் மனிதத் தலையீட்டினால் நிகழ்ந்திருக்கக்கூடிய சதியாகவும் இருக்கலாம் என்று ரயில்வே வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
நன்றி: தி இந்து (14 – 06 – 2023)