TNPSC Thervupettagam

‘கிக்’ தொழிலாளர் நிலை: குறைகள் தீருமா?

July 21 , 2024 175 days 421 0
  • கர்நாடகத்தில் பணிபுரியும் ‘கிக்’ (Gig) தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு, மாநில காங்கிரஸ் அரசு ஜூன் மாதம் ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. ‘கர்நாடக கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு, நல்வாழ்வு) மசோதா, 2024’ என்று அது அழைக்கப்படுகிறது.
  • ‘கிக்’ தொழிலாளர்களின் வினோதமான பணி நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பளிக்க இது கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னோடியாக ராஜஸ்தானில், ‘ராஜஸ்தான் மாநில கிக் தொழிலாளர்கள் (பதிவு, நல்வாழ்வு) சட்டம், 2023’ இயற்றப்பட்டது. அதுவும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.
  • கர்நாடக மசோதா, ராஜஸ்தானில் இயற்றப்பட்ட சட்டத்தை அடியொற்றியே பெரிதும் இருக்கிறது. ஆனால் இவ்விரு மசோதாக்களுமே அத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க மட்டுமே கொண்டுவரப்பட்டிருப்பதால், ‘வேலைகொடுப்பவர்’ – ‘வேலை செய்பவர்’ இடையிலான உறவை வரையறுத்தோ, விளக்கியோ எதையும் குறிப்பிடவில்லை.
  • முறையான கட்டுதிட்டம் இல்லாத துறையில், சுய விருப்பத்தின்பேரில் இந்த வேலையை, தொழிலாளர்கள் செய்வதான பாவனையில்தான் மசோதா இருக்கிறது. ஆனால், இந்தத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் முழுநேரமாக வேலை செய்கிறவர்களும் இருக்கின்றனர், கூடுதல் வருமானத்துக்காக பகுதி நேரமாக வேலை செய்கிறவர்களும் இருக்கின்றனர்.

தொழிலாளர் அதிகரிப்பும், பணிநிலைமைப் பிரச்சினைகளும்

  • பகுதி நேரமாக கருதப்பட்டாலும் இந்தத் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு சில துறைகளில் மட்டும் இருந்த இந்தப் பணி முறை கலாச்சாரம், இப்போது மேலும் பல துறைகளுக்கும் பரவிவருகிறது. வாடகைக் கார் ஓட்டும் துறையில்தான் முதலில் இது தொடங்கியது. பிறகு வீடுகள் – அலுவலகங்களுக்கு உணவு வழங்கும் வேலைக்கு மாறியது.
  • நுகர்பொருள்கள், மளிகைச் சாமான்கள், புடவை – துணி மணிகள், மரச்சாமான்கள், இரும்புச் சாமான்கள், கட்டில் – பீரோக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று பலவும் இப்போது வீடுகளுக்கே கொண்டுவந்து தரும் நிறுவனங்கள் எண்ணிக்கை பெருகிவிட்டன. எனவே, ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் இத்துறையில் அதிகரித்துவருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இதுதான் நிலைமை.
  • தாங்கள் செய்யும் வேலைக்காக நுகர்வோர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் அதில் சிறு பகுதியைத்தான் தங்களுக்கு ஊதியமாகத் தருவதாகவும், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கும் மேல் தாங்கள் வேலை செய்ய நேர்வதாகவும் வேலைக்காக காத்திருக்கும் இடங்களில் தங்களுக்கு குடிநீர், பாதுகாப்பு, இருக்கை போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடையாது என்றும் அவர்கள் அரசிடம் முறையிட்டனர். பணி வழங்குவது, பணியைத் தொடர அனுமதிப்பது, பணி ஒப்பந்தத்தை முறிப்பது ஆகியவற்றிலும் தங்களுக்கென்று எந்த உரிமையும் சட்டப் பாதுகாப்பும் கிடையாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
  • தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலும் ‘முதலாளி – தொழிலாளி’ உறவுநிலை அடிப்படையில் இயற்றப்பட்டவை. எனவே, தொழிலாளர்களுக்கு பாதிப்பு என்றால் முதலாளி தரப்பு அல்லது நிறுவனத் தரப்பில் அவர்கள் சட்டப்பூர்வ கடமைகளை செய்யத் தவறினால், அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ‘கிக்’ துறையில் எழுத்துப்பூர்வமான உடன்பாடோ, பணி ஒப்பந்தமோ பெரும்பாலும் இருப்பதில்லை என்பதாலும், அப்படியே இருந்தாலும் அது நிர்வாகத்துக்குச் சார்பானதாகவே இருப்பதாலும் அரசு தலையிட முடியாது. இந்த வேலையே நிரந்தரமற்றது, தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் – தனி விருப்ப அடிப்படையில் - வேலை செய்வதாலும் தீர்வு காண்பது சிக்கலாக இருக்கிறது. எனவேதான், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
  • ‘கிக்’ தொழில் முறையில் ‘நிர்வாகம் – தொழிலாளர்கள்’ உறவு பூடகமானது, சிக்கலானது. நிர்வாகத்தினர் தங்களை, ‘பணிகளை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக நிறைவேற்றுகிறவர்கள்’ (அக்ரகேடர்) என்றும், அதைச் செய்துதரும் தொழிலாளர்கள் ‘சுதந்திரமான ஒப்பந்ததாரர்கள் அல்லது பணியாளர்கள்’ என்றும் வகைப்படுத்துகின்றனர். ஒரு பொருளை அல்லது சேவையை தேவைப்படும் நுகர்வோருக்கு அளிக்க, பொதுச் சந்திப்பு மேடையைத் தாங்கள் அமைத்திருப்பதாகவும் அதைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொண்டுசெல்லும் வழிமுறையைத் தாங்கள் உருவாக்கி நிர்வகிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வேலையை எப்படி, எங்கே செய்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, தொழிலாளர்களிடம் தரப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • நிர்வாகம் என்ன சொன்னாலும் தங்களுக்கு வேலை தருவதுடன் அதை எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது நிர்வாகம்தான் என்பதால் தங்களைப் பொருத்தவரை வேலை, ஊதியம், கட்டளைகள் மூன்றையும் வழங்கும் அவர்கள்தான் ‘முதலாளிகள்’ என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • வாடகைக்கு கார் ஓட்டும் காரோட்டி யாரை, எங்கிருந்து – எங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை அவரை அமர்த்திக்கொள்ளும் நிறுவனம்தான் கூறுகிறது, அத்துடன் வாடகை எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்றும் அதுதான் தீர்மானிக்கிறது. எனவே, தொழிலாளர்கள் தங்களுக்குரிய வேலை நேரம், ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள், சமூகப் பாதுகாப்பு, நிர்வாகம் தங்களுக்கு அநீதி இழைக்கும்பட்சத்தில் அரசுத் தரப்பிலிருந்து சட்டப்பூர்வ எதிர் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.

பிரிட்டனின் ஊபர் உதாரணம்

  • பிரிட்டனில் ஊபர் நிறுவனம் வாடகை கார் சேவையை அளிக்கிறது. அது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, “ஊபர் நிறுவனம்தான் இங்கு முதலாளியாகச் செயல்படுகிறது என்பதால் பிரிட்டிஷ் தொழிலாளர் சட்டம் பொருந்தும்” என்று அது தீர்ப்பளித்தது.
  • இந்தியாவில் தொழிலாளர் நலம் தொடர்பாக அரசு நான்கு தொகுப்பு சட்டங்களை 2020இல் கொண்டுவந்தது. ‘சமூகப் பாதுகாப்பு’ சட்டத் தொகுப்பில், ‘கிக்’ தொழில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதைச் சுய வேலைவாய்ப்பாகவே அதில் கருதியுள்ளனர். இதர மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்பில் ‘கிக்’ தொழில் இடம்பெறவில்லை. இதர மூன்று ஊதியம், உடல் நலன் (சுகாதாரம்), பணிநிலைமை பற்றியவை. எனவே ராஜஸ்தானில் இயற்றப்பட்ட சட்டமும் கர்நாடகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவும் இந்தத் தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக அணுகுவதற்கான சமீபத்திய சேர்க்கைகள்.
  • ராஜஸ்தான் அரசு இயற்றிய சட்டத்தைப் போலவே கர்நாடக மசோதாவும் தொழிலாளர் – நிர்வாக உறவை விவரிக்காமல் தவிர்த்துவிட்டது. ‘வேலைதரும் நிறுவனம்’ என்று கூறாமல், அவர்களே கூறிக்கொள்வதைப் போல ‘அக்ரகேடர்’ (ஒருங்கிணைத்து வழங்குபவர்) என்று கூறுகிறது. தொழிலாளர் – நிர்வாக உறவை அங்கீகரிக்காமல், தொழிலாளர் நல சட்டங்களை அமல்செய்ய முடியாது. குறைந்தபட்ச ஊதியம், பணியிடத்தில் பாதுகாப்பு, உடல் நலம் பாதிக்கப்பட்டால் நிவாரணம், வேலை நேர நிர்ணயம், விடுப்பு எடுத்துக்கொள்ளும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகியவற்றை செயல்படுத்த முடியாது. ‘கிக்’ வேலைவாய்ப்புத் துறையில் இவையெல்லாம் தீர்க்கப்படாத முக்கியமான அம்சங்கள்.
  • சில துறைகளில் ஒரு தொழிலாளர், வேலை தருவார்கள் என்று நாள் முழுக்கக் காத்திருந்தாலும், குறைந்தபட்ச செலவுக்குக்கூட அன்றைக்கு ஊதியம் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. ஒருவர் எவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதும் நிச்சயமில்லை. வாடகைக் கார் ஓட்டுகிறவர்களில் சிலர் அதிக நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்டியதால், பின்னிரவு நேரத்திலோ அதிகாலையிலோ கண் அயர்ந்து விபத்தில் சிக்கிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இவை கார் ஓட்டுநருக்கு மட்டுமல்ல, காரை வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறவருக்குமே உயிராபத்தில் கொண்டுபோய்விடுகிறது.

வேலை தருகிறவர் – வேலைக்காரர்

  • ‘கிக்’ துறையில் வேலை தருகிறவர் அல்லது வேலை தரும் நிறுவனம் - வேலை செய்யும் தொழிலாளர் அல்லது ஒப்பந்ததாரர் என்ற உறவு நிச்சயமாக இருக்கிறது இதை நிர்வாகம் ஒப்புக்கொண்டாக வேண்டும். ‘அக்ரகேடர்கள்தான்’ இங்கு நிர்வாகம் அல்லது முதலாளிகள் தரப்பினர். அவர்கள்தான் வேலையை எப்படி, யாருக்காக, எங்கே செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு ஊதியம் அல்லது கூலி என்று தீர்மானிக்கின்றனர்.
  • தங்களுடைய நிறுவனம் நுகர்வோரையும் - வேலை அல்லது சேவை அளிப்பவரையும் இணைக்கும் ஒரு மேடை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், அந்த மேடையையும் எந்தச் சேவையை எப்படி அளிக்க வேண்டும் என்பதையும் இறுதிசெய்கிறவர்கள் அவர்களாகத்தான் இருக்கின்றனர். அந்தப் பொது மேடை அல்லது இணைப்பு மேடை என்பது அவர்கள் இத்தொழிலில் பயன்படுத்தும் ஒரு கருவி. எனவே, அந்த வேலையைச் செய்து தருவோர் அவர்களுடைய ஊழியர்கள்தான்.

முக்கியப் பிரச்சினைகள்

  • ராஜஸ்தானிலும் கர்நாடகத்திலும் கொண்டுவரப்படும் சட்டங்கள் இத்துறை தொழிலாளர்களுக்குச் சில நல்வாழ்வுத் திட்டங்களை அளிக்கின்றன. ஆனால், அமைப்புரீதியாக திரட்டப்பட்ட துறைகளில் பணிபுரியும் நிறுவனத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, மகப்பேறுகால விடுப்புடன் ஊதியம் ஆகியவை கிடையாது.
  • அமைப்புரீதியாக திரட்டப்படாத தொழிலாளர்களுக்காக பல்வேறு வாரியங்களும் அமைப்புகளும் இருந்தாலும் அவை அனைத்தும் வலிமையாகவும் முழுமையாகவும் செயல்படுவதில்லை. கட்டுமானத் தொழிலாளர்கள் நல்வாழ்வுச் சட்டம் 1996, அமைப்புரீதியாக திரட்டப்படாத தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றால் அந்தந்தப் பிரிவுத் தொழிலாளர்களின் வெவ்வேறு நலனுக்காக அதிக அளவு நிதி கையிருப்பில் இருந்தாலும், உரிய வகையில் உரிய காலத்தில் அவை தேவைப்படுவோருக்குப் பகிரப்படுவதில்லை.
  • கர்நாடக மசோதா, குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்றும் நிர்ணயிக்கவில்லை, எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் வரையறுக்கவில்லை.
  • அந்தச் சட்டம் தொடர்பான பிரிவு 16, ஊதிய பாதுகாப்பு பற்றிப் பேசினாலும் குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உரிமைகள், வருவாய் பகிர்வு குறித்தெல்லாம் பேசுவதில்லை. பிரிவு 16(2), ‘வாராவாரம் ஊதியம் தரப்பட வேண்டும்’ என்று மட்டும் கூறுகிறது.
  • கர்நாடக அரசு கொண்டுவந்துள்ள ‘கிக்’ தொழிலாளர்கள் மசோதாவும், சமூகப் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு 2020இல் கொண்டுவந்துள்ள சட்டத் தொகுப்பு, ராஜஸ்தான் அரசின் 2023 சட்டம் ஆகியவற்றைப் போலவே தொழில் தருவோர் – தொழில் செய்வோர் இடையிலான உறவை அறுதியாகக் கூறத் தவறிவிட்டது. இதனால் தொழில் உறவில் குழப்பம் நீடிக்கிறது. எனவே, எது நடந்தாலும் நிர்வாகத் தரப்பு அதற்குச் சட்டப்படி பொறுப்பில்லை என்றாகிவிடுகிறது. இதனால் தொழிலாளர்களின் நலனைக் காப்பது அரசுக்கும் வெகு எளிதாக இல்லை.

நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories