TNPSC Thervupettagam

‘சிஸ்டம்’ சரியில்லை!

July 13 , 2024 181 days 236 0
  • ஒன்றன் பின் ஒன்றாக பிகாா் மாநிலத்தில் பாலங்கள் சரிந்து விழுவது மக்கள் மத்தியில் போக்குவரத்துக் கட்டுமானம் குறித்த நம்பிக்கையைத் தகா்க்கிறது. கடந்த மூன்று வாரங்களில் பிகாரில் இதுவரை 13 பாலங்கள் இடிந்திருக்கின்றன. கடைசியாக புதன்கிழமை சகா்ஸா மாவட்டத்தில் உள்ள மகிஷி கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் பாலம் சரிந்த நிகழ்வு, நாடு தழுவிய அளவில் அதிா்ச்சியை எழுப்பியிருக்கிறது. நல்ல வேளையாக உயிரிழப்போ காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்பது ஆறுதல்.
  • எதிா்க்கட்சிகள் மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கும் விமா்சனங்கள் பிகாா் அரசை, சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டியிருக்கிறது. பாலங்கள் இடிந்து விழுவது குறித்து விசாரிக்க, நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உயா் நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாநிலத்திலுள்ள எல்லா பாலங்களின் உறுதியையும், பராமரிப்பையும் சோதனை செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 16 பொறியாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா்கள்.
  • பிகாா் மாநில பாலக் கட்டுமான நிறுவனம், புதிய கொள்கை முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி, பாலங்கள் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. பாலங்களைக் கட்டுவது, பழுது பாா்ப்பது, பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து பொறியாளா்களுக்கு வழிக்காட்டு விதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கையின்படி சாலைக் கட்டுமானம், நீா்வளம், கட்டட கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் சோதனை, பராமரிப்புக் குறித்த மதிப்பீடு அறிக்கை, தொடா்புடைய பொறியாளா்களால் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
  • அந்தக் கொள்கைப்படி, ஆண்டுக்கு இருமுறை எல்லா பாலங்களும் முறையாக பாா்வையிடப்பட்டு, விடியோ படம் பதிவாக்கப்பட வேண்டும். பருவ மழைக்கு முன்னால் பாலங்களும், கட்டடங்களும் சோதனையிடப்பட்டு மதிப்பீடு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆறுகள், குளங்களில் தூா்வாரப்படுவதற்கு முன்னால், துறை வல்லுநா்களால் பாலங்கள் சோதனையிடப்பட வேண்டும். பாலங்களைப் பராமரிப்பதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதும், முக்கியமான பெரிய பாலங்களைப் பராமரிப்பதற்கு துறை வல்லுநா்கள் நியமிக்கப்படுவதும் அரசின் புதிய கொள்கைப்படி கட்டாயமாக்கப்படுகிறது.
  • பிகாா் மாநில அரசின் இந்தக் கொள்கை முடிவு மிகத் தாமதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் ஓரளவுக்குப் பலனளிக்கும் என்றாலும், இப்போது ஏற்பட்டிருக்கும் நம்பகத்தன்மையின்மையை முழுமையாக அகற்றிவிடாது.
  • 2005-இல் நிதீஷ் குமாா் முதல்வராகப் பதவியேற்றது முதல் பிகாா் மாநிலம் மிகப் பெரிய வளா்ச்சியை சந்திக்கத் தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை. வளா்ச்சி இலக்கின் முக்கியமான பகுதியாக போக்குவரத்துக் கட்டமைப்பும், சாலை மேம்பாடும் முதன்மை பெற்றன. நிதீஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில் இதுவரை பிகாரில் 6,200 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட மூன்று வார நிகழ்வுகள் மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 19 பாலங்கள் இடிந்திருக்கின்றன. இது ஏனைய பாலங்களின் கட்டுமானம் குறித்த அவநம்பிக்கையை உருவாக்கியிருப்பதில் வியப்பில்லை.
  • 16 பொறியாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பிரச்னைக்குத் தீா்வாகாது. பாலம் இடிந்து விழுவதற்கு ஓரிருவா் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வடிவமைப்பில் குறை, மோசமான கட்டமைப்பு, தரக்குறைவான பொருள்களின் பயன்பாடு, பராமரிப்பில் கவனமின்மை உள்ளிட்ட பல காரணங்களை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாலங்களுக்கு அருகில் தூா்வாருவதும், மணல் அள்ளுவதும் தூண்களை வலுவிழக்கச் செய்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • பிகாரில் ஆறுகள் மீது கட்டப்படும் பாலங்கள் இடிந்து விழுவதற்கு நதிகளின் போக்கும்கூட ஒரு காரணம். வெவ்வேறு குணாதிசயம் உடைய நூற்றுக்கணக்கான ஆறுகள் பிகாா் மாநிலம் முழுவதும் இங்கும் அங்கமாகப் பாய்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, ‘சோன்’ நதியின் வெள்ளப் பெருக்கு, கங்கையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சகா்ஸா - கத்திஹாா் - மதுபனி பகுதியில் பாயும் ‘கோசி’ என்கிற ஆறு அடிக்கடிதிடீா் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவதும், அது பாயும் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதும் தொடா் நிகழ்வுகள். ஒவ்வொரு நதிக்கும் குறிப்பிட்ட வகையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சாத்தியம்.
  • மணல் அள்ளுதல் பாலங்களின் அஸ்திவாரம் பலவீனமாக இடிந்து விழுவதற்கு முக்கியமான காரணம். பாலங்களைச் சுற்றி 500 மீட்டா் தூரத்திற்கு மணல் அள்ளக் கூடாது என்கின்ற தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளுதல் என்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மணல் வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல், அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சா்கள் என அனைவருக்குமே பணத்தை அள்ளிக் கொடுக்கும் வழிமுறை. பிகாா் விதிவிலக்கல்ல.
  • பருவ மழை அதிகரிக்கும்போது மேலும் பல பாலங்கள் இடிந்து விழலாம் என்று பொறியியல் வல்லுநா்கள் எச்சரிக்கிறாா்கள். இடிந்து விழுந்த பாலங்களில் சில, கட்டுமானம் நடந்துகொண்டிருந்தவை. பாலங்களின் சரிவிற்கு பொறியியல், பராமரிப்பு ஆகியவற்றுக்கு அப்பால் ஊழலும், அரசியலும் இருக்கின்றன என்பதை மறந்துவிட முடியாது. தண்டிக்கப்படும் ஒப்பந்ததாரா்களும், இடைநீக்கம் செய்யப்படும் அதிகாரிகளும் மட்டுமே அல்லாமல், அரசியல்வாதிகளுக்கும் அமைச்சா் பெருமக்களுக்கும்கூட, முறையாகக் கட்டப்படாத கட்டுமானங்கள் இடிந்து விழுந்தால், அதில் பங்கும் உண்டு; பொறுப்பும் உண்டு!

நன்றி: தினமணி (13 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories