‘சீதா’ சில நினைவுகள்
- சீதாராம் யெச்சூரி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட முதுகலை பொருளியல் பாடத் துறையின் முதல் அணி மாணவர்களில் ஒருவர்; ‘பொருளாதார ஆய்வுகள்-திட்டமிடலுக்கான மையம்’ என்று அழைக்கப்பட்ட அந்தத் துறையில் நான் உள்பட ஆறு பேர்தான் ஆசிரியர்கள். எங்களில் மூவருக்கு வயது முப்பதுக்கும் குறைவு; எங்களுடைய மூத்த சகாக்கள் மூவரும் முப்பதுகளைச் சேர்ந்தவர்கள்.
- எங்களில் மூவருக்கு ஆசிரியர்களாக இருந்த அனுபவமில்லை. மாணவர்கள் அனைவரும் இருபது வயதினர் என்பதால் எங்களிடையே வயது வேறுபாடு அதிகமில்லை. கல்லூரியில் ஏதேனும் நிகழ்ச்சி நடக்கும்போது ஆசிரியர்களான நாங்களும் மாணவர்களுடன் கலந்து அமர்வதும், இடையில் சில ஆசிரியர்கள் மாணவர்களிடமே சிகரெட் வாங்கி புகைப்பதும் வழக்கம். இரு தரப்புக்கும் இடையில் ஆரோக்கியமான தோழமை உணர்வு நிலவியது. அதேசமயம் அவரவருக்கு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் ஆழ்ந்தும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொண்டோம்.
எங்கள் சீதா…
- சீதாராம் யெச்சூரியை நாங்கள் அனைவருமே ‘சீதா’ என்றுதான் சுருக்கமாக அழைப்போம். அதிபுத்திசாலி. மதிப்பெண்கள் அணிப்பதில் கறாரான பேராசிரியர்கள் தபஸ் மஜும்தார், கிருஷ்ண பரத்வாஜ், அமித் பாதுரி ஆகியோர்கூட ‘ஏ’ கிரேடு அளிக்கும் அளவுக்குத் திறமைசாலி. அவர் விரும்பியிருந்தால் ஆக்ஸ்போர்டிலோ அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திலோ முழு கல்வி உதவித் தொகையுடன், செலவில்லாமல் உயர்படிப்பை முடித்து ஆய்வுப் பட்டமும் பெற்றிருக்கலாம். அவரும் அவருடைய வகுப்பு மாணவர்கள் சிலரும் முதுகலை முடித்த பிறகு அதே மையத்தில் ஆய்வு மாணவர்களாகத் தொடர்ந்தது மையத்தின் பெரும் பேறு.
- இந்திய பல்கலைக்கழகங்கள் நல்ல இளங்கலை, முதுகலை பட்ட மாணவர்களைத் தயார்செய்யும், அவர்களோ மேல் படிப்புகளுக்காக அயல்நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இந்த முதல் அணி மாணவர்களின் முடிவால், எங்கள் மையம் அனைவராலும் பேசப்பட்டது. மிகச் சிறந்த மாணவரான ‘சீதா’ அரசியல் ஈடுபாடு காரணமாக, ஆய்வுப் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு கட்சி வேலைக்குப் போய்விட்டார்.
இவர் இரண்டாவது ரகம்!
- அனைவருடனும் கலந்து பழகும் தன்மை, எளிமை, அடக்கம், இரக்க சுபாவம், பீறிட்டு எழும் நகைச்சுவை உணர்வு, நேர்மை ஆகியவை குறித்துப் பலரும் எழுதிவிட்டனர். அதிகம் எழுதப்படாதது வாழ்க்கையை ரசனையுடன் அனுபவிப்பதில் அவருக்கிருந்த லயிப்பு. புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டவர்களை மார்க்சிஸ்ட் மெய்யியலாளர் ஜார்ஜ் லூக்காஸ் இரண்டு ரகங்களாகப் பிரித்தார்.
- முதலாவது பிரிவினர், துறவிகளைப் போல தங்களுடைய தேவைகளையும் ஆசைகளையும் குறைத்துக்கொண்டு வாழ்வார்கள், ஈஜன் லெவின் அதற்கு நல்ல உதாரணம். ‘பவாரியா சோவியத் குடியரசு 1918’ உடன் நினைவுகூரப்படுபவர். “கம்யூனிஸ்டுகளாகிய நாம் இறந்தவர்களாக – ஆனால் விடுப்பில் இருப்பவர்களாக - கருதப்பட வேண்டியவர்கள்” என்ற அவருடைய மேற்கோள் பிற்காலத்தில் பலராலும் கையாளப்பட்டது. அதாவது, கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனிஸத்தை அடைவது மட்டுமே இறுதி இலக்கு, அதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தாக வேண்டும்.
- இரண்டாவது ரகம், அகில உலக கம்யூனிஸ்ட் தலைவர் லெனினுடையது. ‘வாழ்க்கை முழுவதும் புரட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டதுதான் அதற்காக உலக இன்பங்களை அனுபவிக்காமல் துறக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா சுகங்களையும் போகங்களையும் அனுபவிக்க கம்யூனிஸ்டுகளுக்கு நிதி வசதியோ - நேரமோ இருக்காதுதான் என்றாலும் அவரவர் நிலைக்கேற்ப, கிடைக்கும் சிறு சந்தோஷங்களைத் தியாகம் செய்ய வேண்டியதில்லை; வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பது லெனினுடைய கண்ணோட்டம். சீதாராம் யெச்சூரி இந்த ரகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இசை, கிரிக்கெட் என்று பல துறைகளில் ஈடுபாடு அதிகம். இந்தித் திரையுலக இசையமைப்பாளர் மதன் மோகனின் பாடல்கள் மீது அவருக்கு அளவற்ற ரசனை. (இந்தி திரைப்பட இசையமைப்பாளர் மதன் மோகன் கோலி 1950கள், 1960கள், 1970களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர். ‘வோ கௌன் தி? அன் பாத’, ‘காஞ்சன்ஜங்கா’, ‘பர்வத் பே அப்னா டேரா’, ‘வீர்-ஸரா’, ‘தஸ்தக்’ ஆகியவை சிறந்த இசையமைப்புக்காக மிகவும் புகழ்பெற்றவை).
- பத்திரிகைகளில் அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ‘லெஃப்ட்-ஹேண்ட் டிரைவ்’ (Left-Hand Drive) என்று சிலேடையாக அதற்குத் தலைப்பிட்டிருந்தார்.
சீதாவும் இந்தியா கூட்டணியும்
- வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடனும் பேசி கூட்டணி ஏற்படுத்தி, புதிய பாசிஸ சக்திகளின் தாக்குதல்களிலிருந்து மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றைக் காப்பதில் அவருக்கிருந்த ஆர்வம் சமீபத்திய ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கத்தின் மூலம் அனைவரும் அறிந்ததே. இந்தத் திறமை சிலவகை கருத்தாக்கங்களின் கண்ணோட்டத்திலிருந்து பெறப்பட்டது. புரட்சிகளை உருவாக்க நினைக்கும் சிந்தனையாளர்கள், தாங்கள் வாழும் உலகத்திலிருந்து விலகி தனித்து வேறொரு உலகில் வாழ வேண்டும். அதே சமூகத்தில் புரட்சியாளர்களும் வாழ்வதை அடக்குமுறை ஆட்சியாளர்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பது முக்கியக் காரணம்.
- ரஷ்யப் புரட்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் ஜார் அரசால் கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே சிறைகளில் அடைக்கப்பட்டனர். பிப்ரவரியில் நடந்த புரட்சி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டு தனி ரயில்களில் ரஷ்யாவுக்கு ஏற்றிவரப்பட்டனர். சீனத்தில் சியாங்கே ஷேக்கின் அடக்குமுறைகளால் ஓடுக்கப்பட்ட புரட்சியாளர்கள், யூனான் மலைக் குகைகள் அருகில் தலைமறைவு வாழ்க்கை நடத்த நேர்ந்தது. புல்கேன்சியோ பாடிஸ்டாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த கியூப புரட்சியாளர்கள், சியாரா மேஸ்த்ரோ மலைத் தொடர்களில் தலைமறைவாக வாழ்ந்தனர். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆரம்பக்கால புரட்சியாளர்கள் அனைவருமே தாங்கள் மாற்ற விரும்பிய சமுதாயத்துக்கு வெளியேதான் வாழ வேண்டியிருந்தது.
- இந்தக் காலத்தில் சமூகத்தை மாற்ற விரும்பும் புரட்சிக்காரர்கள் அந்தச் சமூகங்களைவிட்டு வெளியிடம் போய் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமில்லை. உடல்ரீதியாக சமூகத்தோடு வாழும் அதேவேளையில் மனோரீதியாக தனியுலகில் வாழலாம். அதற்குச் சில உத்திகள்தான் தேவை. சமூகத்தில் பெரிய நெருக்கடி ஏற்படட்டும் என்று காத்திராமல், தங்களுடைய சிந்தனைகளுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முற்றிலும் வேறுபட்டவர்களுடன் அன்றாட அடிப்படையில் ஒத்திசைவாக வாழும் கலையை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்.
- இப்படிக் கருத்தியல்களிலும் வழிமுறைகளிலும் வேறுபட்ட வெவ்வேறு குழுக்களுடன் கூட்டணிகள் அல்லது ஐக்கிய முன்னணிகளை உருவாக்கும் தேவை இப்படித்தான் நேர்கிறது. நவபாசிஸ சக்திகள் வளரும்போது இத்தகைய கூட்டணிகளுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டிய தேவைகளுக்கும் அவசியம் ஏற்படுகிறது. நவபாசிஸ சக்திகள் உச்சத்துக்கு வரும்போது மட்டும்தான் இத்தகைய கூட்டணிகளுக்குத் தேவை என்பதில்லை.
ஈடுசெய்ய முடியாத இழப்பு!
- இதுதான் சீதாவின் நிலை. சமூகத்தோடு வாழ்ந்துகொண்டு வெவ்வேறு சித்தாந்தமுள்ள குழுக்களுடன் இணைந்து செயல்படுவதால், சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அடிப்படை நோக்கமே நாளடைவில் அடிபட்டுப்போய்விடும். அப்படி நேராமலிருக்க, இன்றைய சமூகத்தில் இணக்கமாக செல்ல வேண்டிய குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும், அதேசமயம் அடிப்படை நோக்கத்தை மறந்துவிடவோ, விலகிவிடவோ கூடாது என்பதில் சீதா கவனமாக இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் வெளியறவுப் பிரிவின் செயல்களுக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் அவர் பெற்ற உலக அறிவு, இந்த விவகாரங்களில் அவருடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் உதவியிருக்கிறது.
- அவர் உண்மையான நவீன கம்யூனிஸ்ட், நம்முடைய காலத்தைச் சேர்ந்தவர், உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உணர்ந்து முகம்கொடுத்தவர், அவற்றால் அறிவியல் யதார்த்தங்களுக்கு வரும் ஆபத்துகளையும் நன்கு உணர்ந்தவர். கடந்த செப்டம்பர் 12இல் அவர் இறந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு.
நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)