TNPSC Thervupettagam

‘சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்...’ - நெல் குற்றுதல்

September 19 , 2024 118 days 106 0

‘சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்...’ - நெல் குற்றுதல்

  • ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி' என்று 1949ஆம் ஆண்டு வெளியான ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அதில் ‘நெல்லு குத்த மிஷின்’ வேண்டும் என்று பெண் கேட்பார். ‘அதர்மம்’ திரைப்படத்தில் வரும் ‘வம்புக்காரப் பாட்டி’ பாடலில் ‘உன்னோட காலத்தில நெல்லு குத்த, மாவரைக்க அன்னாடம் பொம்பளைங்க அவதிப் பட்டாங்க’ என்று வருகிறது.
  • இப்படி நெல் குற்றுதல் குறித்துப் பதிவுகள் ஆங்காங்கே இருந்தாலும், நெல் குற்றுதல் என்றால் என்ன? நெல்லிலிருந்து உமியை நீக்கி அதைச் சமைக்கும் அளவிற்கான அரிசியாக மாற்றும் செயல்தான் இந்த ‘நெல் குற்றுதல்.’ பணக்காரர்கள் வீடுகளில் இவ்வாறு நெல் குற்றுவதற் கென்றே வேலையாள்கள் இருந்திருக்கிறார்கள்.
  • சில ஊர்களில் சமதளமாக இருக்கும் பாறைகளின் மேல், அவரவருக்குத் தேவையான நெல்லைக் கொண்டு போய்க் குற்றும் வழக்கம் இருந்திருக் கிறது. சிலர் வீடுகளில் அதற்கான இடத்தை அமைத்திருக்கிறார்கள். எங்கள் பாட்டி வீட்டில் இப்படியான அமைப்பு இருந்தது. சாய்வான சிறு அறையின் நடுவில் சமதளமாக ஒரு கல் பதித்து இருப்பார்கள். அதற்குக் ‘குத்துப்பிறை’ என்று பெயர். அந்தக் கல்லின் மீது, உறைப்பெட்டி வைத்து, அந்த உறைப்பெட்டியினுள் நெல்லைப் போட்டுக் குத்துவார்கள்.
  • உறைப்பெட்டி என்பது கீழே சிறிது குறுகலாகவும் மேலே செல்லச் செல்ல சிறிது விரிவாகவும் இருக்கும், ஏறக்குறைய வாளி போன்ற அமைப்பு. அதை வைப்பதால், நெல் சிதறாது. நாரில் செய்த உறைப்பெட்டியும் உண்டு; நாகத்தகட்டில் செய்த உறைப்பெட்டி யும் உண்டு. இருவர் மாற்றி மாற்றி உலக்கையைப் போடும்போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால், உலக்கை போடுபவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.
  • சில வீடுகளில் ‘நெல் குற்றுதல்’ தொழிலாகவும் நடைபெற்றது. ஊருக்கு ஊர் நெல்லுக்கடை வைத்திருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் சென்று நெல்லை வாங்கிவந்து, அரிசியாகக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். இப்போது பீடி சுற்றுபவர்கள், பீடி இலையையும் தூளையும் வாங்கிவந்து சுற்றிக் கொண்டு போய்க் கொடுத்து, கூலி பெறுகிறார்களே அது போன்ற நடை முறை. மிகவும் வேலைப்பளு மிகுந்தது.
  • நெல்லை அளந்து தலைச்சுமையாகக் கொண்டுவந்து, அரிசியை மீண்டும் கொண்டுபோய் கொடுக்க வேண்டும். பச்சரிசியின் பயன்பாடு என்பது குறைவு. மேலும் பச்சரிசி எளிதில் நொறுங்கும் தன்மை வாய்ந்தது. அதனால், புழுங்கல் அரிசிதான் பெரிய அளவில் குற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
  • புழுங்கல் அரிசிக்கு நெல்லை அவித்து ஓரிரு நாள்கள் காயவைத்துக் குற்ற வேண்டும். நிறைய நேரம் அவிந்து விட்டால் அரிசி மிகவும் கடினமாக இருக்கும். சோறாக வடிக்கும்போது நேரமெடுத்து வேகும். குறைவான நேரத்துக்கு வேக வைத்தால், இட்லிக்கு நன்றாக இருக்கும். இரட்டை அவியல், அழுக அவியல் (நன்றாக அவித்தல்), வெம்படலாக அவித்தல் (சிறிது குறைவாக அவித்தல்) எனப் பலவிதமாக நெல்லை அவிப்பார்கள்.
  • இப்படி நெல் அவிப்பதில் பல நுட்பங்கள் உண்டு என்றால், காய வைப்பதிலும் அதற்கு நிகரான நுட்பங்கள் உண்டு. நிறைய நேரம் கடும் வெயிலில் இருந்தால் அரிசி பொரிந்ததுபோல் ஆகிவிடும். நிழலில் நெடுநேரம் காயவைத்து இருந்தால் கடிக்கும்போது கடினமாக இருக்காது; சிலநேரம் புழுங்கல் வாசனை வரும்.
  • நெல் குற்றும் வீடுகளில் மூன்று, நான்கு இடங்களில் நெல் காய்ந்து கொண்டே இருக்கும். மழைக் காலத்தில் கொஞ்சம் சிக்கல். அதனால், முன்கூட்டியே அவித்து வைத்துக் கொள்வார்கள். பல வீடுகளில் படுப்பதற்கே உலர்ந்த இடம் இருக்காது. இதில் நெல்லை வைக்க இடமேது? அதனால், அவித்த பின் யாரி டம் நெல் வாங்கி வருகிறார்களோ அங்கு மீண்டும் கொண்டு போய்ச் சேமித்து வைப்பவர்களும் உண்டு. அவர்கள் வீடுகளிலேயே அவித்துக் காய வைப்பதும் உண்டு.
  • விடியற்காலை எழுந்து அம்மா நெல் அவித்தால், பிள்ளைகள் நெல் குற்றத் தொடங்க வேண்டும். அம்மா நெல்லைக் காயவைத்து, குற்றிய நெல்லைப் புடைத்து, அரிசி தனியாக உமி தனியாகப் பிரித்து, மீண்டும் அரிசியில் இருக்கும் தவிட்டில் சிறு பகுதியை நீக்கி (தீட்டி) என நான்கு மணி நேரம் உழைத்தால், அவர்களின் சாப்பாட்டிற்கான அரிசி கிடைக்கும். அதையும்விற்றுக் காசாக்கி, அருந்தானியங்கள் வாங்கிச் சாப்பிட்டவர்களும் உண்டு.
  • ஏனென்றால் அப்போது அரிசியின் விலை ஒப்பீட்டளவில் மிகவும் கூடுதல். நெல் சாவியாக (சரியான பதத்தில் விளையாதது) இருந்தால், அதுகூடக் கிடைப்பது குறையும். மேலும் இவர்களுக்கு உமி, தவிடு, குருணை அரிசி போன்றவை கிடைக்கும். உமி அடுப்பெரிக்கப் பயன்படும். குருணைஅரிசியில் கஞ்சி செய்வார்கள். கைக்குத்தல் அரிசியின் தவிடு மிகவும் சுவையாக இருக்கும் கருப்பட்டி சேர்த்து இடித்துச் சாப்பிடுவார்கள்.
  • 1960களில் அரிசி ஆலைகள் பரவலாக வந்துவிட்டன. அப்போதும் வீடுகளில் நெல் அவித்துக் காயவைத்து, ஆலைகளுக்குச் சென்று அரைத்து வந்து விற்றார்கள். பெரிய கடைகளுக்கு அரிசி ஆலைகளே நெல் அவித்துக் காயவைத்து, அரைத்து விற்றன. ஆனால், அப்போது பலரும் அதை விரும்பியதில்லை.
  • அவர்கள் விரைவில் அவிக்க வேண்டும் என்பதற்காகத் தொட்டியில் நெல்லை ஊறவைத்து அவிப்பார்கள். அதைத் ‘தொட்டி அரிசி’ எனக் கேலி பேசுவார்கள். இப்போதும் தோட்டம் வைத்திருப்பவர்கள் வீடுகளில் நெல் அவித்துக் காயவைத்து, அரைத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஆலையில் நெல் அரைப்பது என்பது நடைமுறையாகி விட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories