- செங்கல்பட்டு மாவட்டம், கோழியாளம் என்னும் சிற்றூரில் பொ.ஆ. (கி.பி.) 1860 ஜூலை 7 இல் பிறந்த இரட்டைமலை சீனிவாசன், தமிழ்நாட்டில் சாதியால் நசுக்குண்டு கிடந்த மக்களைச் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பே திரட்டி அமைப்பாக்கிய பெருமை கொண்டவர் ஆவார். 1893இல் ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்திலும், 1895இல் சென்னை டவுன் ஹாலிலும் அவர் கூட்டிய மாநாடுகள் தமிழ்நாட்டு ஆதிதிராவிட மக்களைக் கிளர்ந்தெழச் செய்தன.
- 1893 முதல் 1900 வரை ஏழு ஆண்டுகள் ‘பறையன்’ என்னும் பெயரில் அவர் நடத்திய பத்திரிகை, அந்தச் சமூக மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. முதலில் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டு, மூன்றே மாதங்களில் வாரப் பத்திரிகையாக வெளியானது.
முன்னோடித் தலைவர்
- ‘லண்டன் நகருக்குப் போய் தாழ்த்தப்பட்டோரின் இடுக்கண்களை எடுத்துக்காட்டி பிரிட்டிஷாரின் அனுதாபத்தை நாடி வர வேண்டுமெனும்’ நோக்கத்தோடு புறப்பட்ட அவர், தென் ஆப்ரிக்காவில் இறங்க நேர்ந்தது. அங்கே 1904இல் அரசாங்க வேலையில் சேர்ந்து பணியாற்றி, 1921இல் மீண்டும் தாயகம் திரும்பினார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தர் முதலான தலைவர்களோடும்; இந்திய அளவில் காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கர் முதலான தலைவர்களோடும் சேர்ந்து பணியாற்றினார்.
- பட்டியல் சமூக மக்களை முதலில் அமைப்பாக்கியது, அவர்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கெனப் பத்திரிகை நடத்தியது ஆகியவற்றில் மட்டுமல்ல... பௌத்தத்தைத் தழுவியதிலும் இந்திய அளவில் இரட்டைமலை சீனிவாசன்தான் முன்னோடி. 1882இல் கர்னல் ஆல்காட்டையும், பிளாவட்ஸ்கி அம்மையாரையும் நீலகிரியில் சந்தித்து அவர் பௌத்தத்தைத் தழுவினார். மதம் மாறியவர்களுக்குப் பட்டியல் சமூகத்தவருக்கு அளிக்கப்படும் அரசாங்கத்தாரின் ஆதரவு இருக்காது என்பதால், ஏழெட்டு ஆண்டுகளிலேயே அதிலிருந்து விலகிவிட்டார்.
திராவிட அடையாளம்
- இப்போது திராவிடம் என்ற அடையாளத்தை விமர்சிப்பவர்கள், இரட்டைமலை சீனிவாசன் உள்சாதி அடையாளத்தை உயர்த்திப் பிடித்தவர் என்பதுபோலச் சித்திரித்து, அவரைத் தம் வயப்படுத்த முற்படுகின்றனர். அவர் ‘பறையன்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
- ஆனால், அதே இரட்டைமலை சீனிவாசன்தான் தமிழ்நாட்டில் இருக்கும் பட்டியல் சமூக மக்கள் அனைவரையும் ‘ஆதிதிராவிடர்கள்’ என்று அழைக்க வேண்டும் எனப் போராடி, அதற்காக நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே அரசாணை வெளியிட வைத்தவர். திராவிடம் என்கிற அடையாளத்தை சாதியற்ற அடையாளமாகப் பார்த்தவர்களில் அவரும் ஒருவர். அதனால்தான் அவரது 80ஆவது பிறந்த நாளின்போது அவருக்கு ‘திராவிட மணி’ என்று பட்டம் சூட்டப்பட்டது.
சமரசம் செய்து கொள்ளாதவர்
- 1939 ஜூலை 8இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அன்றைய பிரதம அமைச்சர் ராஜாஜி முன்னிலையில் தமிழறிஞர் திரு.வி.க-வின் தலைமையில் நடைபெற்ற அவரது 80ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பேசும்போது, தான் பிறந்த கிராமம் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் திவான் பகதூர் சீனிவாசனும் பிறந்தார் என்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்; ‘அவருடைய முயற்சிகளின் காரணமாகவே ஒடுக்கப் பட்ட மக்கள் இன்று முனிசிபாலிட்டிகளிலும் டிஸ்ட்ரிக்ட் போர்டுகளிலும் இடம் பெற்றுள்ளனர்.
- அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கின்றனர். திவான் பகதூர் சீனிவாசனின் சமூகப் பணிகள் 1890ஆம் ஆண்டே ஆரம்பித்துவிட்டன. அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகப் பாடுபடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று’ எனவும் குறிப்பிட்டார்.
- திரு.வி.க. பேசும்போது, அதே விக்டோரியா மண்டபத்தில்தான் 1895இல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் கூடி, தங்களது கோரிக்கைகளுக்காகக் குரல் எழுப்பினர் என்பதை நினைவு கூர்ந்தார். ‘இரட்டைமலை சீனிவாசனுடைய வாழ்க்கையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்: அவர் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கின்ற நேரத்தில் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள், அக்கொடுமைகளைக் களைவதற்கான போராட்டத்தில் ஈடுபட அவரைத் தூண்டின.
- அவருடைய கடும் உழைப்பின் காரணமாகவும், அவர் நடத்திய பத்திரிகையின் காரணமாகவும் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு பகுதி. ஆதிதிராவிடர்கள் யார் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது, அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி.
- ஆதிதிராவிடர்கள் என்போர் தனித்துவமான சமூகக் குழுவினர். அவர்கள் இன்னொரு மதத்தைத் தழுவுவது தற்கொலைக்குச் சமம் என்பது திரு.சீனிவாசன் அவர்களுடைய உறுதியான கருத்து. அவர் ஒருபோதும் விளம்பரத்துக்காகவோ, புகழுக்காகவோ எதையும் செய்ததில்லை’ எனத் திரு.வி.க. பாராட்டினார்.
சரித்திரபூர்வமான பெயர்
- ‘திராவிட மணி’ என்ற பட்டத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து வழக்கறிஞர் பி.நாராயண குரு பேசினார். ‘திவான் பகதூர் சீனிவாசன் அவர்கள் ஒடுக்கப் பட்ட சமூகத்தினருக்கு ஆற்றிய பணிகளுக்காகவும், செய்த சாதனைகளுக்காகவும் அவரது தனிப்பட்ட குணநலன்களைக் கருதியும், இந்த திராவிட மணி என்ற பட்டம் சூட்டப்படுகிறது’ எனத் தெரிவித்தார். அந்த தீர்மானத்தை எஸ்.அண்ணாமலையார் வழிமொழிந்தார் (The Hindu 08.07.1939).
- இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் சமூக மக்களை ‘ஹரிஜன்’ என்று அழைக்கும்படி காந்தியடிகள் முன்மொழிந்தபோது, அதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 1938 டிசம்பர் மாதம் சென்னை மாகாண சட்டசபையில் ‘சமூகக் கஷ்ட நிவாரண மசோதா’ சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இரட்டைமலை சீனிவாசன், அந்த மசோதாவின் பிரிவு 2இல் ‘ஹரிஜன்’ என்ற வார்த்தைக்குப் பதில் ஆதிதிராவிடர்கள், ஷெட்யூல்டு ஜாதிகள் என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டுமெனத் திருத்தத்தை முன்மொழிந்தார். ‘ஒரு வகுப்பினரைக் கடவுளின் குழந்தைகள் என்று கூப்பிடுவதில் அர்த்தமில்லை. மற்றவர்களெல்லாம் சைத்தான் பிள்ளைகளா?’ என்றுகேட்ட அவர், ‘ஆதிதிராவிடர் என்ற வார்த்தையே தாழ்த்தப்பட்டவருக்குத் தகுதியானது. அதுவே சரித்திர பூர்வமான பெயர்’என்றும் உறுதிபடக் கூறினார் (சுதேசமித்திரன் 12.12.1938).
- அரசு செய்ய வேண்டியது: மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது. அது பட்டியல் சாதிகளில் இடம்பெற்றுள்ள உள்சாதி ஒன்றின் பெயர் அல்ல. அந்தப் பெயரில் எந்தவொரு சாதியும் இருந்ததில்லை.
- சாதி மறுப்பின் அடையாளமாகவே அந்தப் பெயர் சூட்டிக்கொள்ளப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும், சாதிச் சான்றிதழ் வழங்கும் போதும் உள்சாதிகளின் பெயர்களையே அதிகாரிகள் பயன்படுத்தியதால் இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட முன்னோடிகள் போராடிப் பெற்ற அடையாளம், இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலை உள்ளது.
- 1967இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவில் (The Scheduled Castes and Schedule Tribes Orders (Amendment) Bill 1967) தேட், சண்டாளா, பஞ்சமா, பறையன் என்கிற பெயர்கள் இழிவுபடுத்தும் தன்மை கொண்டவை; எனவே அவற்றை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 1969 நவம்பர் மாதம் 17இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட அந்தச் சட்ட மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையும் அதை வலியுறுத்தியது.
- அந்தக் கூட்டுக் குழுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கா.சுப்ரவேலு இடம் பெற்றிருந்தார். அந்த மசோதாவில் தமிழ்நாட்டின் எஸ்.சி. பட்டியலில் 58 சாதிகள் மட்டுமே இருந்தன. அதில் பறையன் என்பது இல்லை. அந்தப் பெயரில் அழைக்கப்படும் மக்களை ஆதிதிராவிடர் எனப் பட்டியலில் குறிப்பிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அன்றைய காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றவில்லை.
- தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என்ற அடையாளங்களுக்குள் உள்ளடக்கப்பட்ட 14 சாதிகள் போக மீதமுள்ள சாதிகளை ‘ஆதிதிராவிடர்’ என ஒரே பெயரில் வகைப்படுத்திட வேண்டுமெனத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘திராவிட மணி’ இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்து மரியாதை செய்யும் தமிழ்நாடு அரசு, அவர் போராடி உருவாக்கிய ஆதிதிராவிடர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும். அது அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நெறியை உயர்த்திப்பிடிப்பதுவும் ஆகும்.
நன்றி: தி இந்து (07 – 07 – 2023)