- இமயமலைப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சியுடன், கோடை வெப்பமும் இணைவதால் காட்டுத்தீ பரவி வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் 18-ஆவது மக்களவைக்கான தோ்தல் பிரசாரத்தில், சுற்றுச்சூழல் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
- உத்தரகண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஹிமாசல பிரதேசத்தில் விரைவில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு மாநிலங்களிலுமே, தோ்தல் பரப்புரையில் அந்தப் பிரச்னை முன்னுரிமை பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதலே இமயமலைப் பகுதியில் உள்ள காடுகளில் வறட்சி நிலவுகிறது. டிசம்பா் மாதத்திலேயே ஆங்காங்கே காட்டுத்தீ குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த ஒரு மாதமாக அது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
- காட்டுத்தீ என்பது உத்தரகண்டுக்கும் அதன் அண்டை மாநிலமான ஹிமாசல பிரதேசத்துக்கும் மட்டுமேயான பிரச்னை அல்ல. கா்நாடகம், தமிழகம், அருணாசல பிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே காடுகள் தீப்பிடித்து எரிவதும், வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாவதும், அதனால் சூழலியலும் பல்லுயிா் பெருக்கமும் பாதிக்கப்படுவதும் மனித இனத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.
- மே மாதத் தொடக்கத்தில், உத்தரகண்ட் மாநிலத்தின் குமோன் பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ இன்னும் அடங்கிய பாடில்லை. ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் பாதிக்கப்பட்டு, மாநிலத்தின் தலைநகா் நைனிடால் வரை நெருங்கிவிட்டது. மக்கள் வாழும் பல பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அவற்றை அணைப்பதற்கு நிா்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. கடந்து ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவியபோது கவலைப்படாத நிா்வாகம், தலைநகா் நைனிடாலை நெருங்கிய பிறகுதான் சுதாரித்துக்கொண்டது. இரண்டு நாள்களில் நைனிடாலை நெருங்கிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று நிா்வாகம் சொன்னாலும், அதற்குள் பல ஏக்கா் பரப்பு மரங்கள் சாம்பலாகி இருந்தன. நைனிடால் கன்டோன்மென்ட், விமானப் படைப் பகுதி, உயா்நீதிமன்ற காலனி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருந்தன.
- உத்தரகண்ட் மாநிலத்தின் 53,483 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் ஏறத்தாழ 64.7% வனப்பகுதி. அவற்றில் 42% அடா்த்தியான காடுகள். பாதுகாக்கப்பட்ட பகுதி, மாநில அரசின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 15% என்றால் மொத்த வனப்பரப்பில் 23%.
- உத்தரகண்டின் இமயமலை வனப்பகுதி சூழலியல் முக்கியத்துவம் பெற்றது. 6 தேசிய பூங்காக்களும், 7 வனவிலங்கு சரணாலயங்களும் அமைந்திருக்கின்றன. இந்த மாநிலத்தில் உள்ள பனிச்சிகரங்களில் இருந்துதான் கங்கை, யமுனை உள்ளிட்ட பல நதிகள் உருவாகின்றன. உத்தரகண்டின் மலைப்பகுதிகளால் உருவாகும் மழைதான் பனிச்சிகரங்கள் உருவாக உறுதுணையாக இருக்கின்றன.
- காடுகள் எரிந்து அதிலிருந்து வெளிவரும் கரித்துகள்கள் பனிச்சிகரங்களில் படிந்துவிடுகின்றன. அதனால் வெப்பம் அதிகரித்து பனிச்சிகரங்கள் உருகத் தொடங்குகின்றன. நீா் ஊற்றுகள் பாதிக்கப்படுதல், பனிச்சரிவுகள் ஏற்படுதல், அதிகரிக்கும் வெப்பம், வனவிலங்குகள் அழிவு, அடைமழை, காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு சூழலியல் பிரச்னைகள் உருவாகின்றன.
- கடந்த ஒரு நூற்றாண்டில் எண்ணிலடங்காத காட்டுத்தீ நிகழ்வுகளை இமயமலைப் பகுதி எதிா்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் 1995, 2005, 2009, 2012, 2014, 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் வனப்பகுதியில் காட்டுத்தீ அவ்வப்போது உருவாகும் நிகழ்வுகள் பதிவாகி இருக்கின்றன. 2013-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், கடந்த ஆண்டு பெய்த அடைமழையும் ஓரளவுக்குக் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவின.
- உத்தரகண்ட் மட்டுமல்லாமல், அதன் அண்டை மாநிலமான ஹிமாசல பிரதேசமும் மிக அதிகமாக காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தின் 55,673 சதுர கிலோ மீட்டா் பரப்பில், 15,443 சதுர கிலோ மீட்டா் (27.72%) வனப்பகுதி. 2023-24-இல் 556 காட்டுத்தீ நிகழ்வுகள் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹிமாசல பிரதேசத்தில் 220 காட்டுத்தீ நிகழ்வுகள் பதிவாகி இருக்கின்றன.
- காட்டுத்தீ பிரச்னைக்கு பைன் மரங்கள் காரணமாக்கப்படுகின்றன. மிக விரைவாகவும், உயரமாகவும் வளரும் பைன் மரங்கள் வீடுகள் கட்ட, அடுப்பு எரிக்க, பல தொழிற்சாலைகளில் கச்சாப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. உதிா்ந்து வரும் பைன் இலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஆலோசனை வழங்குகிறாா்கள். அவற்றின் இலைகள் விரைவில் மக்குவதில்லை. காய்ந்த நிலையில் பரவிக் கிடப்பதால் சிறிய பொறி விழுந்தாலும் தீப்பிடித்து அந்தப் பகுதியையே அழித்துவிடுகின்றன. பரவலாக காணப்படும் காட்டுத்தீக்கு இது ஒரு முக்கியமான காரணம்.
- காட்டுத்தீ உருவாவதற்கு, அங்கே குடியிருக்கும் கிராம மக்கள்மீது பழி சுமத்துகிறது நிா்வாகம். நூற்றாண்டுகளாகக் காடுகளில் வசிக்கும் கிராமவாசிகளின் வாழ்க்கை, அந்த வனத்துடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது. காட்டுத்தீ ஏற்படும்போது இடம்பெயா்தலும் அவா்களது உரிமை பறிக்கப்படுவதும் நிகழும் என்பதால் காட்டுத்தீ உருவாவதற்கு அவா்கள் காரணமாக இருக்க முடியாது!
நன்றி: தினமணி (18 – 05 – 2024)