‘நான் தமிழச்சிதான்!’ - கன்னட மண்ணில் கர்ஜித்த ஜெயலலிதா
- ‘சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரியை உலுக்கியது போல...’ என்பது வீரத்துக்கு உதாரணமாகக் கூறப்படும் சொலவடை. அப்படி, வாட்டாள் நாகராஜின் சொந்த மாநிலத்தில் அவரது சொந்த மாவட்டமான மைசூருக்கே சென்று பிடரியை பிடித்து உலுக்கினார் ஜெயலலிதா! ஜெயலலிதாவின் முன்னோர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
- ஜெயலலிதாவின் தாய்வழி தாத்தா ரங்கசாமி ஐயங்கார், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்குச் சென்றவர். ஜெயலலிதா பிறந்தது கர்நாடகா என்றாலும் அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம்தான். அதனால், ஜெயலலிதா எப்போதும் எங்கேயும் தன்னை தமிழச்சி என்றே பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
- புகழ்பெற்ற தயாரிப்பாளர் - இயக்குநர் பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கி 1973-ல் வெளியான ‘கங்கா கெளரி’ என்ற பக்திப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் பிரிமியர் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஜெயலலிதா மைசூர் சென்றார். படப்பிடிப்புக்கு நடுவில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ‘‘நான் மைசூரில் பிறந்திருந்தாலும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
- என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி’’ என்று சொன்னார். ‘மைசூரில் பிறந்தவர் தன்னை தமிழ்ப் பெண் என்று சொல்லிக்கொண்டு, மைசூருக்கே வருவதா?’ என்று கன்னட அமைப்பினருக்கு மூக்கில் வியர்த்தது. ஜெயலலிதா ஷூட்டில் இருந்த மைசூர் பிரிமியர் ஸ்டூடியோவைச் சுற்றி ஆயுதங்களுடன் திரண்டு வந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக அதகளம் செய்தனர்.
- அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த பந்துலு வேறுவழியில்லாமல் ஜெயலலிதாவிடம் சென்று நிலைமையை விளக்கினார். “கன்னட உணர்வாளர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால், பேசாமல் மன்னிப்புக் கேட்டு விடம்மா” என்று பதற்றத்தை மறைத்துக் கொண்டு பாந்தமாய் சொன்னார் பந்துலு. இதைக் கேட்டதும் வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்கு... ‘‘கன்னட உணர்வாளர்கள் மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாததைச் சொல்லமாட்டேன்.
- நான் தமிழ் பெண் என்பது உண்மை. இப்படி உண்மையைச் சொல்வதற்காக தாக்கப்பட்டு என் உயிரே போனாலும் கவலையில்லை” என்று உறுதியாகச் சொல்லிட்டார். அதற்குள் போராட்டக்காரர்கள் சிலர் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து, ‘ஜெயலலிதாவே மன்னிப்புக் கேள்’ என்று கோஷமிட்டு தாக்குதல் நடத்தவும் முயற்சித்தனர். “ஜெயலலிதா மன்னிப்புக் கோராவிட்டால் ஸ்டூடியோவையே கொளுத்துவோம்” என்று கோஷங்கள் ஒலித்தன. நிலைமை மோசமானது.
- அந்த சமயத்தில் பந்துலுவுக்கும் அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கும் நிலைமையை சமாளிக்க மனதில் தோன்றிய ஆபத்பாந்தவன் எம்ஜிஆர்! சென்னையில் இருந்த எம்ஜிஆருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செயலில் இறங்கினார் எம்ஜிஆர். அந்தச் சமயத்தில் கர்நாடக முதல்வராக இருந்தவர் காங்கிரஸின் தேவராஜ் அர்ஸ். அவருக்கு எம்ஜிஆரிடம் இருந்து போன் பறந்தது.
- அடுத்த சில நிமிடங்களில் மைசூர் பிரிமியர் ஸ்டூடியோ வாசலில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர், மைசூரில் ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பு நடக்கும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
- கலவரக்காரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டபோதும் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல், “நான் தமிழச்சிதான், இதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று துணிச்சலுடன் உறுதியாக நின்றார் ஜெயலலிதா. அதன்பிறகு ஜெயலலிதாவின் படப்பிடிப்பு முடியும் வரை மைசூரில் அவர் இருந்த பக்கமே கன்னட உணர்வாளர்கள் தலைவைத்துப் படுக்கவில்லை!
- டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)