TNPSC Thervupettagam

‘பிகில்’ கபில், ‘மெர்சல்’ மேக்ஸ்வெல்

November 10 , 2023 234 days 181 0
  • அணிப் போட்டியான கிரிக்கெட்டில் தனி ஒருவராக அணிக்கு வெற்றி தேடி தந்த இன்னிங்ஸ்கள் பல உண்டு. ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடையும் நிலையில் உள்ள போட்டியை தனி ஒருவராக வெற்றியாக்கி தந்த வீரர்கள் சற்று குறைவுதான்.
  • அந்த வகையில் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவ் ருத்ரதாண்டவம் ஆடிக் குவித்த 175 ரன்கள், 2011இல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆடிய சூறாவளி ஆட்டம் போன்ற சில போட்டிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடிய புயலாட்டமும் சேர்ந்திருக்கிறது.

கபில்தேவின் சூறாவளி ஆட்டம்

  • முதல் இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் சோபிக்காத இந்தியா, 1983 உலகக் கோப்பையில்தான் வெற்றிகளைப் பெற்று நம்பிக்கை அளித்தது. டன்பிரிட்ஜ்வெல்லில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலை இருந்தது. ஆனால், அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 17 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
  • சோர்ந்து போயிருந்தனர் இந்திய ரசிகர்கள். இந்தப் போட்டியோடு மூட்டையைக் கட்ட வேண்டியதுதான் என்ற நிலைக்கு இந்திய வீரர்களும் வந்துவிட்டனர். அப்போதுதான் இந்தியாவின் இளம் கேப்டன் கபில் தேவ் களத்தில் இறங்கினார். தொடக்கம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை கிழிந்தெறிந்தார் கபில்தேவ். 138 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 175 ரன்களைக் குவித்தார்.
  • இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களைக் குவித்தது இந்திய அணி. 17 ரன்னிலிருந்து 266 ரன்னுக்கு இந்தியாவை நிலை நிறுத்தியதோடு உலகக் கோப்பையையும் வென்றதால்தான் கபில்தேவின் அந்தப் புயல் ஆட்டம் காலம் கடந்தும் நினைவில் நிலைத்து நிற்கிறது.

பிரையனின் வெறித்தனம்

  • 2011 உலகக் கோப்பையில் பலமான அணியான இங்கிலாந்தை கத்துக்குட்டியான அயர்லாந்து வீழ்த்தி அதிர்ச்சிக் கொடுத்தது. அதுவும் இது சாதாரண அதிர்ச்சி அல்ல. இங்கிலாந்து நினைத்துப் பார்க்க முடியாத பேரதிர்ச்சியைக் கொடுத்தார் கெவின் ஓ பிரையன். பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 329 ரன்களைக் குவித்தது.
  • கடினமான இலக்கைக் துரத்தி ஆடத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு வரிசையாக அதிர்ச்சி காத்திருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில்தான் பிரையன் களமிறங்கினார். மின்னல் வேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கிய பிரையனைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் கலங்கி நின்றார்கள்.
  • நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்ட பிரையன் 63 பந்துகளில் 113 ரன்களைக் குவித்து அயர்லாந்து அணிக்கு மறக்க முடியாத ஒரு வெற்றியைப் பரிசாக அளித்தார். அயர்லாந்து அணியின் வெற்றியில் இந்த வெற்றி இன்று வரை முக்கியமானதாகப் பதிவாகியிருக்கிறது.

மேக்ஸ்வெல்லின் இடி அடி

  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கபில்தேவின் ஆட்டத்துக்குப் பிறகு மலைக்க வைத்த ஆட்டம் என்றால் கிளென் மேக்ஸ்வெல்லின் ஆட்டம்தான். மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பைச் சுற்றுப் போட்டியில் பலமான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 291 ரன்களை ஆப்கானிஸ்தான் குவித்தது. சவாலான இலக்காக இருந்தாலும் ஆஸ்திரேலியா அந்த இலக்கைத் துரத்தி பிடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப் பட்டது.
  • ஆனால், ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் சரிவது போல சரிந்தன. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்றுஆஸ்திரேலியா படுபா தாளத்தில் இருந்தது. வெற்றிக் காற்று ஆப்கானிஸ்தான் பக்கம் வீசத் தொடங்கியது. ஆனால், நம்ப முடியாத ஓர் ஆட்டத்தை ஆடி, அந்த வெற்றிக் காற்றை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பி அதகளப்படுத்திவிட்டார் கிளென் மேக்ஸ்வெல்.

தன் கையே தனக்குதவி

  • கேப்டன் கம்மின்ஸுடன் இணைந்து தொடக்கத்தில் தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே மேக்ஸ்வெல் ஆடினார். ஆனால், அவர் 50 ரன்களைக் கடந்த பிறகு ரன் அடிக்கும் வேகத்தைக் கூட்டத் தொடங்கி, ஆப்கன் பந்துவீச்சை நொறுக்கத் தொடங்கினார்.
  • ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருந்த வேளையில், தசைப்பிடிப்பு வலியால் துடித்து மைதானத்திலேயே படுத்துவிட்டார் மனிதர். ஆனால், அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதால், வலியைப் பொறுத்துக்கொண்டு மேக்ஸ்வெல் விளையாடத் தொடங்கினார்.
  • கிரிக்கெட்டில் ‘ஃபுட் வொர்க்’ எனப்படும் கால் நகர்வுகள் பந்தைக் கணித்து விளையாட மிகவும் உதவிக்கரமாக இருக்கும். ஆனால், காலையும் உடலையும் நகர்த்தாமல், அசைக்காமல் கைகளால் மட்டுமே மேக்ஸ்வெல் பந்துகளை சுழற்றத் தொடங்கினார்.
  • அதாவது கண்களுக்கும் கைகளுக்கும் மட்டுமே வேலைகொடுத்து துல்லியமாகப் பந்தை அடித்து நொறுக்கினார். கிரிக்கெட் உலகில் தசைப்பிடிப்பு வலியுடன் இனி ஒரு வீரர் இப்படி விளையாட முடியுமா என்ற அளவுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தார் மேக்ஸ்வெல்.

எத்தனை சாதனை

  • இந்தப் போட்டியில் கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக பவுண்டரிக்கு வெளியே பந்துகளை அனுப்பிவிட்டு 128 பந்துகளில் 201 ரன்களைக் குவித்து தனி ஒருவனாக அணிக்கு வெற்றித் தேடி தந்தார். ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி நிச்சயம் என்ற நிலையிலிருந்து, அந்த அணியை வெற்றி பெற வைத்தவிதம் அடேங்கப்பா ரகம். கேப்டன் கம்மின்ஸும் மேக்ஸ்வெல்லும் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
  • இதில் கம்மின்ஸின் பங்களிப்பு வெறும் 12 ரன்கள்தான். எஞ்சிய ரன்களை சூறாவளி பேட்டிங் மூலம் மேக்ஸ்வெல்லே குவித்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் அடித்த முதல் இரட்டை சதமாகவும் இது பதிவானது.
  • இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 10 முறை இரட்டைச் சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இதில் 9 சதங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் மூலம் வந்தவை. முதல் முறையாக ஆறாவது வீரராகக் களமிறங்கி இரட்டைச் சதம் விளாசப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, முதல் முறையாக சேஸிங்கில் இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் மேக்ஸ்வெல்லுக்குக் கிடைத்திருக்கிறது.
  • கபில்தேவ், கெவின் ஓ பிரையன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் மறக்க முடியாத உலகக் கோப்பை ஆட்டங்களில் ஓர் ஒற்றுமை உண்டு. மூவருமே ஆறாவது வீரராக களமிறங்கிதான் அந்தச் சாதனையைப் படைத்தனர் என்பதுதான் அது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories