TNPSC Thervupettagam

‘பிஞ்ச் வாட்ச்’ கலாச்சாரம் தெரியுமா?

June 28 , 2024 151 days 240 0
  • இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ‘பிஞ்ச் வாட்ச்’ (Binge Watch) கலாச்சாரம் குறையத் தொடங்கியிருக்கிறது. அதென்ன ‘பிஞ்ச் வாட்ச்’ என்றுதானே யோசிக்கிறீர்கள்? வார இறுதியில் சனி இரவு முழுவதும் தூக்கமே இல்லாமல் திறன்பேசி அல்லது தொலைகாட்சியில் விறுவிறுப்பான திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது ஓடிடி தொடர்களைப் பார்ப்பது; ஞாயிற்றுக்கிழமை காலையில் நீண்ட நேரம் தூங்கிச் சோம்பலாகக் கண் விழிப்பதுதான் ‘பிஞ்ச் வாட்ச்’ கலாச்சாரம்.
  • பொழுது போக்குவதற்காக நீண்ட நேரம் திரைகளைப் பார்ப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பது, இன்றைய இளைய தலைமுறையின் தினசரி நடவடிக்கைகளில் ஒன்று. இப்படி இயல்பாகிபோன அந்த ‘பிஞ்ச் வாட்ச்’ பழக்கம்தான் மெல்ல மெல்லக் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறத் தொடங்கியிருக்கின்றன. இந்த ‘பிஞ்ச் வாட்ச்’ மனநிலை மாற்றத்திலிருந்து மேலை நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் விடுபட்டு வருகிறார்களாம்.

கரோனா காலம்:

  • ஓடிடி தளத்தில் ஏதாவது ஒரு புதிய தொடர் வந்துவிட்டால் போதும், அதை முழு மூச்சாகப் பார்த்துவிடும் இளைஞர் கூட்டம் இன்று பெருகிவிட்டது. ஓய்வே இல்லாமல் இடைவிடாது ஒரு தொடரைப் பார்த்து முடித்துவிட்டு தான் வேறு வேலையையே பார்க்கும் அளவுக்கு ‘பிஞ்ச் வாட்சிங்’ கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைத்துவருகிறது.
  • இந்த ‘பிஞ்ச் வாட்ச்’ என்கிற சொல் கரோனா காலத்தில் வைரஸ் பரவியதுபோல இளைஞர்கள் மனதில் ஊடுருவத் தொடங்கியது. இந்தியாவிலும் அப்போதுதான் இந்தச் சொல் பிரபலமானது. கரோனாவில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
  • குறிப்பாகத் தனிமையில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடத் தங்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்ப விரும்பினர். அது போன்றவர்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் திரைப் படங்களும் ஓடிடி தொடர்களும் உதவின. அதுவும் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு ‘குவாரண்டைன்’ எனப்படும் விலகி இருக்கவேண்டிய சூழலில் இவைதான் அவர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தன.
  • ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனாவின் தாக்கம் சிறிது சிறிதாக நம்மை விட்டு விலகி விட்டது. ஆனாலும், கரோனா காலத்தில் பழக்கப்படுத்திக்கொண்ட ‘பிஞ்ச் வாட்ச்’ கலாச்சாரம் பெரும்பாலான இளைஞர்களை விட்டு இன்னும் செல்லவில்லை. கரோனாவுக்குப் பிந்தைய காலத்திலும் தொடர்களையும் திரைப்படங்களையும் இடைவிடாமல் பார்க்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்தே வந்தது.
  • உணவு, வேலை, தூங்கும் நேரம் தவிர்த்து ரயில், பேருந்துப்பயணங்களில்கூட ‘பிஞ்ச் வாட்சிங்’ கலாச்சாரத்தைப் பின்தொடந்தபடியே இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? குளியல் அறையில்கூட இதை விடுவதில்லை என்கிற அளவுக்குக் கதைகள் உண்டு. இந்நிலையில்தான் ‘பிஞ்ச் வாட்சிங்’ முறை இளைஞர்களிடம் அச்ச உணர்வைத் தூண்டுவதாக ஆய்வுகள் வரிசைக் கட்டத் தொடங்கின.

நிஜத்துடன் ஒப்பிடுவது:

  • ‘பிஞ்ச் வாட்சி’ங்கில் த்ரில்லர், குற்றப் பின்னணி கொண்ட தொடர்களை அதிகளவில் பார்க்கும் பதின்பருவத்தினர், நிஜ வாழ்க்கையிலும் அத்தகைய நிகழ்வுகளைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் அச்சத்தினால் குறிப்பிட்ட பொது இடங்களுக்குச் செல்ல அவர்கள் தயங்குவதாகவும் ஆய்வுகள் கூறின.
  • மேலும், குறைவான நேரம் உறங்குவதால் ஏற்படும் பதற்றம், மன அழுத்தத்திற்குச் சிலர் உள்ளாகிறார்கள் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டின. ‘பிஞ்ச் வாட்ச்’சின் தாக்கம் இளைஞர்களிடம் கவனச் சிதறல்களை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
  • இப்படி ‘பிஞ்ச் வாட்ச்’ பற்றி எதிர்மறையான விமர்சனங்களே குவிந்து வந்த நிலையில், தற்போது அதன் பிடியிலிருந்து இளைய தலைமுறையினர் விலகுவது அதிகரித்து வருவதாகவும், அந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் வேறு சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
  • குறிப்பாக அமெரிக்காவில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு, ‘பிஞ்ச் வாட்ச்’ தாக்கத்தால் விறுவிறுப்பான திரைக்கதைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ‘ஜென் இசட்’ என்கிற ‘ஸுமர்ஸ்’ (1997க்கும் 2010க்கும் இடையில் பிறந்தவர்கள்) கூட்டம், மீண்டும் நத்தைபோல் நகர்ந்து செல்லும் திரைக்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் பக்கம் ஒதுங்கி வருவதாகக் கூறியுள்ளது. இப்படி விடுபடுபவர்கள் எண்ணிக்கை போகபோக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
  • ‘பிஞ்ச் வாட்சிங்’ என்கிற சதா சர்வகாலமும் விறுவிறுப்பான திரைப்படம், தொடர்களைப் பார்த்தவர்கள், அதிலிருந்து மீள இன்னொரு வகையான திரைக்கதைகளுக்குள் நகர்ந்திருக் கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள நகை முரண்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories