‘புல்டோசர் நீதி’க்கு முற்றுப்புள்ளி!
- வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை, அரசு நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கான அடையாளமாக புல்டோசர் நடவடிக்கைகள், ஆட்சியாளர்களால் - குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளால் - முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய இரு நபர் அமர்வு இப்படியான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
- 2017இல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர் கலாச்சாரத்தைத் தொடங்கியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி என இந்தப் போக்கு விரிவடைந்தது. கல்வீச்சு சம்பவங்கள், ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
- இதுவரை ஏறத்தாழ 1.5 லட்சம் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் 7.38 லட்சம் பேரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள், விளிம்புநிலை மக்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் ‘தவறு செய்தவர்களுக்கு உடனடித் தண்டனை’ என்ற பெயரில் இதை ஆதரிக்கும் போக்கும் அதிகரித்தது.
- இந்தச் சூழலில், நிர்வாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இப்படியான நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு 2024 செப்டம்பர் 17இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நவம்பர் 13இல் தனது இறுதித் தீர்ப்பில் ‘புல்டோசர் நீதி’யை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
- தங்குமிடத்துக்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை, தனியுரிமை ஆகியவற்றில் ஓர் அங்கம் என அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது கூறு உறுதியளிக்கிறது. இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், புல்டோசர் நடவடிக்கைகளால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் நடுத் தெருவில் நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
- குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படக் கூடாது; அவர்களின் வீடுகளும் இடிக்கப்படக் கூடாது என நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
- சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தை இடிப்பது என்றால், அதற்கென உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அதன்படி, 15 நாள்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்; அதன் நகல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்; கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்தால் அதற்கான சான்றுகளையும் ஆவணங்களையும், இடிக்கப்பட வேண்டிய காரணத்தையும் நோட்டீஸுடன் சேர்த்து வழங்க வேண்டும்; கட்டிடம் இடிக்கப்படுவது காணொளியாகப் படம்பிடிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு விதிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
- விதிமுறைகளைப் பின்பற்றாத அதிகாரிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் ஜனநாயக நாட்டில் இப்படியான அத்துமீறல்களுக்கு இடம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதேவேளையில், புல்டோசர் நடவடிக்கையால் வீடிழந்தவர்கள் தங்களுக்கான இழப்பீட்டைப் பெறுவதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் களையப்பட வேண்டும்.
- சட்டவிரோதமாகக் கட்டப்படும் கட்டிடங்கள் ஓரிரு நாள்களில் உருவாகிவிடுவதில்லை; அவை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசு இயந்திரத்துக்கு உண்டு. சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான வாய்ப்பாகவும் அரசுகள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 11 – 2024)