- நடிகர் விஜய் பிப்ரவரி முதல் வாரத்தில் தனது கட்சியை நிறுவினார். கட்சியின் பெயர் - தமிழக வெற்றி கழகம்(sic). வெற்றிக்கும் கழகத்திற்கும் இடையில் ஒரு ‘க்’ வந்திருக்க வேண்டும். வரவில்லை. விஜய் விட்டது ஒற்றுப் பிழை. அது எதிர்பாராத ஒரு நல்ல விளைவை உண்டாக்கியது. சமூக வலைதளங்களில் தமிழ் இலக்கணம் பேசுபொருளாகியது. விமர்சனங்களும் பகடிகளும் இணையவெளியை நிறைத்தன. அவை விஜய்யின் செவிகளை எட்டின. அவர் வெற்றியையும் கழகத்தையும் ஒற்றினார். பிழையைத் திருத்தினார்.
- ஆனால், பிழை அங்கே முடியவில்லை. விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில் 65 பிழைகள் இருப்பதாக ஒரு தமிழன்பர் பதிவிட்டிருந்தார். இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், வாக்கிய அமைப்பில் பிழைகள் முதலான எல்லாப் பிழைகளின் கூட்டுத்தொகைதான் மேற்குறிப்பிட்ட 65. அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஆஸ்திரேலியாவிலோ ஒரு கட்சித் தலைவர் பிழைகள் மலிந்த ஓர் ஆங்கில அறிக்கையை வெளியிடுவதை நினைத்தாவது பார்க்க முடியுமா? எனில், இங்கே அதோர் பிரச்சினையாக இல்லை. விஜய் கட்சிப் பெயரில் இருந்த ஒற்றுப் பிழையை நீக்கியதே பலருக்கும் போதுமானதாக இருந்தது.
- உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.
மற்றும் ஒரு பிரச்சினை
- விஜய்யின் அறிக்கையில் பிழைகள் அன்னியில் இன்னும் ஒரு பிரச்சினையும் இருந்தது. அந்த அறிக்கையில் அவர் மற்றும் என்கிற சொல்லை ஐந்து இடங்களில் பயன்படுத்தியிருந்தார். எல்லா இடங்களிலும் ‘and’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாகத்தான் ‘மற்றும்’ எனும் சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். இதற்காக நாம் அவரைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில், இன்று தமிழ் உரைநடையில் மிகப் பரவலாக மற்றும் என்கிற சொல், and என்கிற சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இது தமிழுக்கு இயைந்ததுதானா என்று பேசுவதற்கு முன்னால், விஜய்யின் அறிக்கையில் மற்றும் இடம்பெறும் இடங்களைப் பார்க்கலாம்.
- 1. நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம்,
- 2. தனக்கு புகழ் பெயர் மற்றும் எல்லாம் கொடுத்த,
- 3. எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்,
- 4. கட்சியின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிகள்,
- 5. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்குத் தேவையான கால அவகாசத்தைக் கணக்கில் கொண்டே,
எண்ணும்மை
- மேற்கூறிய இடங்கள் அனைத்திலும் உள்ள மற்றும் என்கிற சொல்லை எடுத்துவிட்டு முன்னும் பின்னும் ‘உம்’ சேர்க்க முடியும். அப்படிச் சேர்த்தால் அந்த வாக்கியங்கள் இப்படியாக மாறும்.
- 1. நிர்வாகச் சீர்கேடும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரமும் ஒருபுறம்,
- 2. தனக்கு புகழும் பெயரும் இன்னும் எல்லாமும் கொடுத்த,
- 3. எனது நீண்ட கால எண்ணமும் விருப்பமுமாகும்,
- 4. கட்சியின் அரசியலமைப்புச் சட்டமும் அதன் விதிகளும்,
- 5. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் கட்சியின் விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான கால அவகாசத்தையும் கணக்கில் கொண்டே,
- மற்றும் நீக்கப்பட்டு ‘உம்’ சேர்க்கப்பட்ட வாக்கியங்களில் உயிர் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். ஏனெனில், அவை தமிழுக்கு இயைந்த உம்மைகளைப் பெற்றுவிட்டன. உம்மைகள் அடுத்தடுத்து வந்தால் அதை எண்ணும்மை என்று அழைக்கிறது இலக்கணம். உம் தன்னை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் மறைந்திருப்பதும் உண்டு. அதாவது உம்மை தொக்கி நிற்கும். அதற்கு உம்மைத் தொகை என்று பெயர்.
உம்மைத் தொகை
- கோவையின் புகழ் மிக்க கல்லூரிகளுள் ஒன்று பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (PSG College of Arts and Science). தமிழில், பூசாகோ கலை அறிவியல் கல்லூரி. கலையும் அறிவியலும் என்பதில் உள்ள உம்மைகள் தொக்கி நிற்க, கலை அறிவியல் என்றாயிற்று. ஆகவே உம்மைத் தொகை. ஆனால், இப்போது கலை அறிவியல் கல்லூரிகளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று எழுதுகிற போக்கு அதிகரித்திருக்கிறது.
- உயர்கல்வித் துறையின் இணையதளத்திலேயே கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளைக் காண முடிகிறது. ரூ199.36 கோடி செலவில் 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கிறது ஓர் அரசாணை (எண் 152 நாள் 10.8.2022).
மற்றும் என்றால் என்ன?
- ஆங்கிலம், தமிழில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பின்னர்தான், நம்மவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதத் தொடங்கியதற்குப் பிறகுதான் ‘மற்றும்’ இப்படி ஒரு வடிவெடுத்திருக்கிறது. அப்படியானால் அதற்கு முன்பு ‘மற்றும்’ இல்லையா? இருந்தது. ஆனால், ‘and’ எனும் பொருளில் இல்லை. ‘வேறு’ என்பது மற்றும் என்கிற சொல்லுக்கு வழங்கிவந்த பொருள்களில் முதன்மையானது எனலாம்.
- “மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” என்பது தேவாரம். உன் திருப்பாதத்தைத் தவிர வேறு பற்றே எனக்கில்லை என்கிறார் சுந்தரர்.
- “மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்கிறது திருப்பாவை. உன்னைத் தவிர வேறு விருப்பங்களை எல்லாம் அழித்துவிடு என்று திருமாலிடம் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.
- “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்” என்பது புகழ்பெற்ற திருக்குறள். விதியை வெல்ல நாம் எப்படிச் செயற்பட்டாலும் வேறு ஒரு வழியில் அது நம்முன் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். (பிறிதொரு இடத்தில் ஊக்கமுடையவர்கள் 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று சொல்லுவதும் அதே வள்ளுவர்தான்).
- இதைத் தவிர ‘மேலும்’ என்கிற பொருளிலும் ‘மற்றும்’ கையாளப்பட்டிருக்கிறது. “இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து” என்கிற குறளுக்கு சாலமன் பாப்பையா சொல்லும் பொருள்: தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
ஆகிய என்பீர்!
- இப்படியாக ‘வேறு’, ‘மேலும்’ போன்ற பொருள்களில் பயன்பட்டுவந்த ‘மற்றும்’ இன்று ஆங்கிலத்தின் செல்வாக்கால் ‘and’ என்பதற்கு ஈடாக மாறிவிட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இணையதளத்தில் பின்வரும் வாக்கியம் இருக்கிறது.
- காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டுப் புடவை ஆகும். இந்தப் புடவைகள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பெண்களால் திருமண மற்றும் விசேஷ புடவைகளாக அணியப்படுகின்றன.
- இதில் மற்றும் என்பதை எடுத்துவிட்டு தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் என்னவாகும்? ‘தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான பெண்கள்’ என்றாகும். வாக்கியம் இலகுவாகும். இதே வாக்கியத்தை ‘தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், முதலான தென் மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான பெண்கள்’ என்றும் எழுதலாம். அப்போது தெலுங்கானாவும் தன்னை வெளிக்காட்டாமல் உள்ளே வந்துவிடும்!
- பெயர்களையும் பொருள்களையும் அடுக்குகிறபோது எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் ஆகிய என்று முடிப்பது வழக்கம் (தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர் பாண்டவர்கள்). சிலவற்றைச் சொல்லி சிலவற்றை விட்டுவிட்டால் முதலிய என்று முடிக்க வேண்டும் (துரியோதனன், துச்சாதனன், துசாகன் முதலிய நூற்றுவர் கௌரவர்கள்). முதலிய, ஆகிய எனும் சொற்கள் தமிழில் ஆகிவந்தவை. ஆகவே, ‘மற்றும்’ எனும் சொல்லுக்கு மாற்றாக அமையும்.
மற்றும் பலர்
- எப்போது முதல் ‘மற்றும்’ ‘and’க்கு மாற்றாக வந்தது? இதை ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஓர் ஊகம் இருக்கிறது. இது தமிழ்த் திரைப்படங்களிலிருந்து வந்திருக்கலாம்.
- ஆங்கிலத் திரைப்படங்களில் கடைசியாகத்தான் கலைஞர்களின் பெயர்களைப் போடுவார்கள். ஆனால், ஒரேயொரு காட்சியில் வந்திருந்தாலும் ஒற்றை வரி வசனம் பேசியிருந்தாலும் அவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெறும். இரண்டாவது சேடி, மூன்றாவது போலீஸ்காரன், சைக்கிள்காரப் பையன் யாரையும் விட்டுவிட மாட்டார்கள். தமிழில் அப்படிப் பழக்கமில்லை. பெரும்பாலும் முதலிலேயே பெயர்கள் வந்துவிடும். மேலும் பாத்திரங்களின் பெயர்களையும் நடிகர்களின் பெயர்களையும் இணைத்துப் போடுவதும் குறைவு. நடிகர்களின் பெயர்களை நட்சத்திர மதிப்பின் வரிசைப்படி போடுவர்கள்.
- பாத்திரங்களின் முக்கியத்துவமும் அதே வரிசையில்தான் இருக்கும் (அது யதேச்சையானது அல்ல). இதனால் பிரபலமான பெயர்களுடன் பட்டியல் நின்றுபோகும். அப்படியானால் ஏனைய நடிகர்கள்? அவர்களின் பெயர்களையெல்லாம் இரண்டு சொற்களில் அடக்கினார்கள். அதுதான் ‘மற்றும் பலர்’. இரண்டாவது சேடிக்கும் மூன்றாவது போலீஸ்காரனுக்கும் இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதா என்று தெரியாது.
- இந்த ‘மற்றும் பலர்’ என்பதையும் சமீப காலத்தில் கைவிட்டுவிட்டார்கள். பழைய தமிழ்த் திரைப்படங்களின் பெயர்ப் பட்டியலில் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்த இந்த ‘மற்றும் பலர்’ ஒருவேளை ‘மற்றும்’ ‘and’ ஆனதன் தொடக்கப்புள்ளியாக இருக்கலாம்.
தலைப்புகளில் மற்றும்
- இதில் ‘and’ என்பதற்கு மாற்றாக ‘மற்றும்’ புழக்கத்தில் வந்துவிட்டதே, அதை நாம் இழக்க வேண்டுமா? உரைநடையில்தானே மற்றும் நெருடுகிறது? தலைப்புகளில் வைத்துக்கொள்ளலாமே? எடுத்துக்காட்டாக, ‘தமிழ்நாடு டெக்ஸ்ட் புக் அண்ட் எஜுகேஷனல் சர்வீசஸ் கார்பரேஷன்’ (Tamil Nadu Text Book and Educational Services Corporation) என்பதைத் தமிழில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என்று அழைக்கிறார்கள்.
- இது நிறுவனத்தின் பெயர், சொற்சிக்கனம் நல்லது. இம்மாதிரியான இடங்களில் ‘and’ என்பதற்கு மாற்றாக ‘மற்றும்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
என்ன செய்யலாம்?
- பழந்தமிழ்க் கவிதைகளில் மற்றும் என்பது அதன் இயல்பான பொருளில் பயின்றுவந்ததைப் பார்த்தோம். நவீன கவிதைகளிலும் ‘மற்றும்’ எனும் சொல் ‘and’ எனும் பொருளில் வருவதில்லை. சிறுகதைகளிலும் பார்க்க முடியாது. ஏனெனில் அவை படைப்பிலக்கியங்கள், தமிழிலேயே எழுதப்படுகின்றன. நேர்ப் பேச்சுகளிலும் இந்த ‘மற்றும்’ என்கிற சொல் ‘and’ பொருளில் இடம்பெறுவதில்லை. கட்டுரைகளிலும் அறிவிப்புகளிலும் செய்திக் குறிப்புகளிலும்தான் ‘மற்றும்’ வருகிறது. அங்கேதான் மொழிபெயர்ப்பு நடக்கிறது. கட்டுரைகளைத் தமிழிலேயே எழுதினாலும் எழுதுகிறவரின் பேனாவிற்குள்ளிருந்து ஆங்கிலக் கல்வி செயல்படுகிறது. ஆகவே ‘மற்றும்’ கோலோச்சுகிறது.
- ஒரு தமிழ் வாக்கியத்தில் எப்படி ‘and’ என்று எழுதமாட்டோமோ, அவ்விதமே அதற்கு ஈடாக ‘மற்றும்’ என்று எழுதுவதையும் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்யத் தொடங்கினால் விஜய்யின் அறிக்கையில் எண்ணும்மைகள் இடம்பெறும். உயர்கல்வித் துறை உம்மைத் தொகையைப் பயன்படுத்தும். காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகிய அல்லது முதலிய என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்.
- மேலும், ‘மற்றும்’ என்பது ‘and’ எனும் பொருளில் வந்தேறியது. சூழலுக்கு ஏற்றாற்போல் எண்ணும்மைகளையும், உம்மைத் தொகைகளையும், ஆகிய / முதலிய எனும் சொற்களையும் பயன்கொண்டால் மற்றும் வந்த வழி திரும்பிவிடும். அப்போது மற்றுப் பற்றெமக்கில்லை என்றாகும்.
நன்றி: அருஞ்சொல் (03 – 04 – 2024)