ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: போர்க்கால நடவடிக்கை தேவை
- வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயலால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும் புதுச்சேரி மத்திய ஆட்சிப் பகுதியும் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. எதிர்பார்த்ததைவிடவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உதவி தேவை.
- வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, நவம்பர் 29இல் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இது புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிப்பைச் சந்திக்கும் என்றும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. எனினும், இந்த மாவட்டங்களில் சில பகுதிகள் மட்டுமே மழை வெள்ளப் பாதிப்பில் சிக்கின.
- அதேபோல் 2015, 2023இல் ஏற்பட்ட மழை, வெள்ளம் போன்ற பாதிப்பைச் சென்னை மீண்டும் சந்திக்குமோ என்கிற அச்சம் நிலவியது. ஆனால் திசை மாறியதால், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த பிறகும் புதுச்சேரி நிலப்பகுதியில் நீண்ட நேரம் வலுவிழக்காமல் இருந்ததால், பெரும் மழைப் பொழிவைப் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெற்றன.
- குறிப்பாக, இதுவரை இல்லாத அளவுக்கு விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், இப்பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களும் பெரும் மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாடு, புதுவையில் புயல், மழைக்கு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை நிலச்சரிவில் நிகழ்ந்திருக்கும் உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பதும் கவலை அளிக்கிறது.
- ஒரே நேரத்தில், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழைப் பொழிவு ஏற்படும்போது, அதை எதிர்கொள்வது சவாலானது. எளிதில் கணிக்க முடியாத வகையில் இந்தப் புயலின் நகர்வு இருந்தது, அதை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. என்றாலும், அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நிற்பது பாராட்டத்தக்கது.
- இரவு பகல் பாராமல் பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளில் பெற்ற படிப்பினையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
- இதுபோன்ற பேரழிவுகளையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் அண்மைக் காலமாகக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். எனவே, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
- சென்னையைப் போல மக்கள் நெருக்கடியோ இட நெருக்கடியோ இல்லாத மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கினால், எதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அரசு ஆராய்ந்து திட்டங்களை வகுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல மத்தியக் குழுவை மத்திய அரசு விரைந்து அனுப்பி, மாநில அரசு கோரும் நிதியை விடுவிக்க வேண்டும். இதுபோன்று இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2024)