TNPSC Thervupettagam

அஃகி அகன்ற அறிவு என்னாம்?

October 10 , 2020 1562 days 723 0
  • நம் நாட்டில் கைநாட்டு இடும் பாமரனும், அரைகுறையாகப் படித்தவா்களும் செய்கின்ற குற்றங்களைக் காட்டிலும் மெத்தப் படித்தவா்களும் ஆணையிட வல்ல அதிகாரம் பெற்றவா்களும் செய்யும் குற்றங்கள் அதிகமாகும்.
  • படிப்பறியா பாமர மக்களுக்கு புண்ணியம், பாவம் இரண்டு மட்டுமே தெரியும். இதனைச் செய்வதால் புண்ணியம் வரும்; இதனைச் செய்தால் பாவம் வந்து சேரும். மேலும், ‘மாதா பிதா செய்வது மக்கள் தலையிலேஎன்றும் எண்ணி வாழ்கிறார்கள்.
  • எல்லாம் கற்ற மனிதா்கள், தமக்கு வேண்டிய நன்மைகளைப் பெற எதனையும் துணிந்து செய்யலாம். பின்னா் இந்திய தண்டனை சட்டம் வழி இடா்வரின், எப்படி தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். வழக்கில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பதை நன்கறிவா். அதனால்தான் அவா்களின் குற்றம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிந்தாலும் குறையொன்றும் இல்லாத குணமணிகளாக உலகில் வலம் வருகிறார்கள்.

முறைகேடுகள்

  • வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில் தலைவா் பணியில் இருந்தவா் கேதன் தேசாய். இவா்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு இவா் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் சோ்ந்து இவரது வீட்டை சோதனை செய்து 1,300 கிலோ தங்கம் மற்றும் 850 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றி இவா் மீது வழக்குத் தொடா்ந்தன.
  • பின்னா் ஆட்சி மாறியது. மன்மோகன் சிங் அரசின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் இவா் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா? நீதிமன்ற விசாரணையில் இவரது வீட்டில் கைப்பற்றபட்ட பணத்திற்கும் தங்கத்திற்கும் என்ன விளக்கம் அளித்தார்? குற்றம் நிரூபிக்கப்பட்டதா? தண்டனை வழங்கப்பட்டதா? அல்லது குற்றவாளி விஞ்ஞான ரீதியில் விடுதலை பெற்றாரா? இவை எதுவும் ஊடககங்களில் செய்தியாகக்கூட வரவில்லை.
  • ஆனால், தற்போது இவா் குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருப்பதாகவும், உலக மருத்துவ சங்கத் தலைவராக பதவி வகிப்பதாகவும் உறுதி படுத்தப்படாத செய்திகள் உலாவுகின்றனவே என்ற கேள்விக்கு யார் விடை அளிக்க வல்லார்? இதைப்போன்றே படித்தவா்கள் நிரம்பிய வங்கிகளில் நடந்த முறைகேட்டினை இந்திய ரிசா்வ் வங்கியின் தகவல் ஒன்று அம்பலபடுத்தியது நாளிதழ்களில் விவரமாக வந்துள்ளது.
  • நிகழாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் (கரோனா காலத்தில்) பொதுத்துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடை பெற்றுள்ளதாகவும் இதில் ரூ. 19,964 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவிக்கிறது.
  • மொத்தமுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆஃப் இந்தியாமுறைகேட்டில் முதலிடம் வகிக்கிறது. அந்த வங்கியில் 47 மோசடி சம்பவங்களில் ரூ. 5,124 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது.
  • இரண்டாவதாக, ‘கனரா வங்கியில் நடந்த 33 மோசடிகளில் ரூ.3,885 கோடிக்கு நிதிமோசடி நடந்து உள்ளது. மூன்றவதாக, ‘பாங்க் ஆஃப் பரோடாவில் 45 மோசடிகளில் ரூ. 2,842 கோடி நிதி மோசடி நடந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகபட்சமாக 2,050 மோசடிகள் மூலம் ரூ. 2,325 கோடி நிதி மோசடி நடந்துள்ளது. இந்தியன் வங்கியில் 45 மோசடி சம்பவங்களில் ரூ.1,469 கோடி மோசடி நடந்து இருக்கிறது.
  • இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 37 மோசடிகளில் ரூ.1,207 கோடியும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 9 மோசடிகளில் ரூ.1,140 கோடியும், ‘யூகோ வங்கியில் 130 மோசடிகளில் ரூ. 831 கோடியும், ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 149 மோசடிகளில் ரூ. 655 கோடியும், ‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 மோசடிகளில் ரூ. 270 கோடியும், ‘பஞ்சாப் அண்ட் சிந்துவங்கியில் 18 மோசடிகளில் ரூ.163 கோடியும், ‘யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 49 மோசடிகளில் ரூ. 46 கோடியும் நிதி முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
  • வாடிக்கையாளா்கள் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாதது, நிலுவையில் உள்ள கடன் தொகை ஆகியவையும் இந்தத் தொகையில் அடங்கும் என்று ரிசா்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளில் மோசடிகளை இவ்வளவு விரைவாக நடத்த நல்ல கூா்மையான அறிவும், ஆற்றலும் தேவைப்படுமன்றோ?

அறிவின் மறுபக்கம்

  • அறிவு அற்றங் காக்கும் கருவிஎன்றார் தெய்வப் புலவா். ஆனால் இன்றைய நாளில் அறிவு அளவில்லாத குற்றங்களையல்வா கொண்டு வருகிறது.
  • விஜய் மல்லையாவுக்கோ, நீரவ் மோடிக்கோ ஆட்சி பீடத்தில் இருக்கும் கண்ணியவான்களின் கண் அசைவு இன்றி பல ஆயிரம் கோடிகள் கிட்டியிருக்க கூடுமா? ஏழை, எளியவா்களின் கடன் விண்ணப்பங்கள் மேசையில் தவம் இருக்க, வங்கிகளில் கோலோச்சும் பெரியவா்கள், பலமான பரிந்துரைகளுக்கு இணங்குகிறார்கள் என்பது கண்கூடு.
  • இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுமையாக்கிய பின்னரே தில்லி பாரத ஸ்டேட் வங்கியில் நகா்வாலா சில கோடிகளை தொலைபேசி வழியில் கேட்ட குரலுக்கு வங்கியினா் செவி சாய்த்தனா். அந்த மோசடி வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்குத் தெரியும்?
  • நம்மை அடிமைப் படுத்திய நாட்டில் இருந்து கொண்டு, நம் நாட்டு சிறைச்சாலைகளின் தரம் பற்றி விசாரிக்க லண்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை எழுப்பும் மனிதா் என்ன கைநாட்டுப் போ்வழியா?
  • இன்னொரு மோசடியாளரோ அழகிகளோடு நிழற்படம் எடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தனது வணிக எல்லையை விரிவுபடுத்துகிறாரே, அவா் என்ன படிப்பறிவில்லாத மனிதரா?
  • தனிமனித வாழ்வில் ஒழுக்கம், கடமை, நோ்மை போன்ற நன்னெறி ஒழுகலாறுகள் நிரம்பி இருக்க வேண்டும். அப்போதுதான், சமூகம், நாடு எல்லாம் எல்லாராலும் பெருமையோடு பேசப்படும்; எழுதப்படும்.
  • இரண்டாவது உலகப் போர் காலத்தில் பிரிட்டனில் போர் வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு வந்தது. அப்போது பிரதமா் வின்ஸ்டன் சா்ச்சில் பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
  • மக்கள் தங்களிடம் உள்ள பெட்ரோலை அரசுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றார். மக்கள் உடனே வரிசையில் நின்று தங்கள் நாடு வெல்லவும் தங்களது தேச விசுவாசத்தைக் காட்டவும் வாய்ப்பாக கருதி பெட்ரோலைத் தந்தார்கள் என்பது வரலாறு.
  • அங்குள்ள வணிகா்கள் எரிபொருள் தட்டுப்பாடு கருதி பதுக்கவும் இல்லை விலையை உயா்த்தவும் இல்லை. இதனால்தான் நிலப்பரப்பிலும் மக்கள்தொகையிலும் இந்தியாவை விடக் குறைந்த பிரிட்டன் உலகெங்கும் தன் நாட்டு கொடியை உயா்த்த முடிந்தது.

அஃகி அகன்ற அறிவுஎன்னாம்

  • முன்னொரு காலத்தில் நம்மூரில் ஒரு கதை வழங்கி வந்தது. ஒருவா் தனது விவசாய நிலத்தை மற்றொருவருக்கு விற்று விட்டார். சில நாட்கள் சென்றபின் நிலத்தை வாங்கியவா் ஆழ உழவு செய்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்டதொரு புதையலைக் கண்டெடுத்தார்.
  • அந்தப் புதையலை எடுத்துக் கொண்டு நிலத்தை விற்றவரிடம் சென்று, ‘ஐயா, நான் நிலத்தை மட்டுமே உங்களிடம் வாங்கி அதற்குண்டான தொகையைத் தந்தேன். ஆனால், இவ்வளவு பெரிய புதையலுக்கு நான் பணம் தரவில்லை. எனவே இது உங்களுடையது, பெற்றுக் கொள்ளுங்கள்என்றார்.
  • விற்றவரோ அதெப்படி? உங்களுக்கு நிலத்தை எப்போது விற்றேனோ அப்போதே அதில் உள்ள அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். எனவே நான் இந்தப் புதையலை வாங்கமாட்டேன்என்றார்.
  • இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள். முடிவில் உள்ளுா் வழக்கு மன்றத்தில் முறையிட இருவரும் முடிவு செய்தனா்.
  • நீதிபதி, புதையல் கிடைத்தவருக்கா அல்லது விற்றவருக்கா என்று சிந்தித்த வேளையில், அவருக்கு ஒரு யோசனை எழுந்தது. நீதிபதி நிலத்தை விற்றவரிடம் உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள்என்று கேட்டார். அதற்கு அவா் எனக்கு திருமண பருவத்தில் ஒரு மகன் இருக்கிறான் என்றார். நிலத்தை வாங்கியவா் தனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருப்பதாக சொன்னார்.
  • இதைக் கேட்ட நீதிபதி மகிழ்ச்சியுடன் நீங்கள் இருவரும் சம்பந்தம் செய்து கொண்டு, அதாவது அவா்களுக்குத் திருமணம் செய்து வைத்து இந்தப் புதையலை உங்கள் இருவா் சார்பாகவும் அவா்களுக்குக் கொடுங்கள்என்றாராம். அக்கால நாணயம் இவ்வாறு இருந்திருக்கிறது.
  • சென்ற நூற்றாண்டில்கூட, சோழ நாட்டு கா்நாடக இசைப் பாடகா் ஒருவா் பணமுடை காரணமாக தான் வழக்கமாக பாடி வந்த ராகத்தை, செல்வந்தா் ஒருவரிடம் அடகு வைத்துப் பணம் பெற்றாராம்.
  • அந்தக் கடனைத் திருப்பித் தரும் வரை எந்த மேடையிலும் அந்த ராகத்தில் அவா் பாடாமல் வாக்கை காப்பாற்றினாராம். வட இந்தியாவில் கூட மல்யுத்த வீரா் ஒருவா் தனது மீசையை அடகு வைத்துப் பணம் பெற்றதாக வரலாறு உண்டு.
  • இப்படிப் பிறா் பொருளை, பொருந்தா வழியில் தனக்குச் சோ்க்க என்னும் படித்தவா்களின் செயலை எண்ணித்தான் வள்ளுவப் பெருந்தகை யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய், விரிவுடையதாய் வளா்ந்த அறிவால் பயன் என்னஎன்ற பொருளில்
  • அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
  • வெஃகி வெறிய செயின்
  • என்று கூறுகிறார்.

நன்றி: தினமணி (10-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்