TNPSC Thervupettagam

அகதிகளாக ஆக முடியாதவர்கள்

April 20 , 2021 1375 days 550 0
  • பிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இந்தியாவின் எல்லைப்புறத்தில் வசிக்கும் மியான்மர் மக்கள், அடைக்கலம் தேடி மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு வருகிறார்கள்.
  • புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர்களால் அகதிகளாக முடியாது. ஏன்?
  • ஏனெனில், ஐநா 1951-ல் உருவாக்கிய சர்வதேச ‘அகதி உடன்பா’ட்டில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை. இந்த உடன்பாடு யார் அகதி என்பதை வரையறுக்கிறது.
  • இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் சார்பு ஆகிய காரணத்தால் சொந்த நாட்டில் வசிக்க முடியாதவர்களும் வசிக்க அஞ்சுபவர்களும் அச்சுறுத்தப்படுபவர்களும் அகதிகள் ஆகிறார்கள்.
  • 1967-ல் இந்த வரையறைக்குள் யுத்தங்களாலும் வன்முறைகளாலும் சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
  • ஒரு புதிய நாடு ஒரு அகதியை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் புதிய நாட்டின் குடிநபர் ஆவார். 1951-ஐநா உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும்.
  • இதில் இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கவில்லை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் அகதிகளை அனுமதிப்பதற்கோ பராமரிப்பதற்கோ கூறுகள் இல்லை.

இந்தியாவில் அகதிகள் இல்லையா?

  • அப்படியானால் இந்தியாவில் அகதிகளே இல்லையா? இருக்கிறார்கள் - முதலாவதாக, 1959-ல் திபெத் போராட்டத்துக்குப் பிறகு இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் வழங்கியது.
  • அப்போது இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இப்போது சுமார் ஒரு லட்சம் பேர். அடுத்ததாக, 1972-ல் இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு வந்த ஈழத்தமிழர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களும். சுமார் ஒரு லட்சம் பேர்.
  • மூன்றாவதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள். மியான்மரிலிருந்து வந்தவர்கள். 2017-ல் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பிறகுதான் இவர்களின் இடப்பெயர்வு பெருமளவில் நிகழ்ந்தது.
  • அப்போது அவர்கள் மிகுதியும் (7 லட்சம்) வங்கதேசத்துக்குப் போனார்கள். இந்திய அரசின் கட்டுப்பாடுகளால் குறைவானவர்களே (40,000 பேர்) இந்தியாவுக்கு வந்தார்கள்.
  • வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கணிசமானவர்கள். அவர்களைக் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை.
  • திபெத்தியர், ஈழத் தமிழர், ரோஹிங்கியர் ஆகிய மூன்று பிரிவினரும் அகதிகள் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டாலும், சட்டம் அவர்களை அகதிகளாக ஏற்பதில்லை.
  • கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த, துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகைசெய்கிறது.
  • இவர்கள் இந்துக்களாகவோ சீக்கியர்களாகவோ பௌத்தர்களாகவோ சமணர்களாகவோ பார்சிகளாகவோ கிறிஸ்தவர் களாகவோ இருக்க வேண்டும்.
  • இந்தியாவில் குறைந்தது ஆறு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படியும் மேற்கூறிய மூன்று பிரிவினரால் இந்தியக் குடியுரிமை பெற முடியாது.
  • திபெத்தியர்கள் பௌத்தர்களாக இருந்தாலும், திபெத்தோ சீனாவோ புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை. ஈழத் தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும், இலங்கை எனும் நாடு குடியுரிமைச் சட்டத்துக்குள் வரவில்லை. ரோஹிங்கியாக்களுக்கு அவர்களது மதம், நாடு இரண்டுமே சட்டத்தில் இடம்பெறவில்லை.

ஹாங்காங் எடுத்துக்காட்டு

  • ஹாங்காங்கும் 1951 உடன்படிக்கையில் ஒப்பம் இடவில்லை. ஆனால், புகலிடம் தேடி வந்தவர்களை ஹாங்காங் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் ஐநாவின் அகதி ஆணையத்தில் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ‘அரசப் படைகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம், எங்களால் சொந்த நாட்டுக்குப் போக முடியாது’ என்று அவர்கள் நிறுவ வேண்டும். கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர்கள் அகதிகளாவார்கள். அதன் பிறகு அகதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் ஒரு நாட்டுக்கு விண்ணப்பிப்பார்கள்.
  • அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் புதிய நாட்டுக்கு அகதியாகப் போகலாம். சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதை நிரூபிக்க முடியாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களால் அகதிகளாக முடியாது.
  • இந்த வழக்கும் விசாரணையும் ஆண்டுக் கணக்கில் நடக்கும். அப்போது ஹாங்காங் அரசு அவர்களுக்கு இருப்பிடமும் அரிசி பருப்பும் சிறிய உதவித்தொகையும் வழங்கும்.
  • அவர்களது பிள்ளைகளைப் படிக்கவைக்கும். வளரும் நாடுகள் பலவும் மேலை நாடுகளும் அகதிகளை ஏற்கின்றன. ஆனால், நமது சட்டங்களில் மட்டுமல்ல, நமது குடிமைச் சமூகத்திலும் சிலருக்கு அகதிகளைக் குறித்து ஒவ்வாமை இருக்கிறது.
  • சமீபத்தில் ஓர் இணைய இதழில் மியான்மரின் சின் அகதிகளை நாம் பேண வேண்டும் என்று ஒரு செய்தியாளர் எழுதியிருந்தார். அதற்கு, அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று பல வாசகர்கள் கடுமையான சொற்களில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.
  • சமீபத்தில் மியான்மருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்ட ரோஹிங்கியாக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.
  • ஆனால், நமது சட்டப் புத்தகத்தின் எந்தக் கூறும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் எவரும் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்தான். அவர்கள் அகதிகள் ஆக மாட்டார்கள்.

என்ன செய்யலாம்?

  • நீண்ட வரலாறும் நாகரிகமும் பாரம்பரியமும் ஜனநாயக விழுமியங்களும் மிக்க இந்தியா, தனது அகதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  • 1951 ஐநா உடன்பாட்டில் இணைவதைத் தொலைநோக்காக வைத்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக, குடிமக்கள், குடியேற்றக்காரர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், புகலிடம் நாடுபவர்கள், அகதிகள் முதலான ஒவ்வொரு பிரிவினருக்கும் சட்டரீதியிலான வரையறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.
  • அவை ஐநா அகதி ஆணையத்தின் வழிகாட்டல்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாப் பிரிவினருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். சட்டம் மாட்சிமையோடு விளங்கும்.
  • அகதிகளின்பால் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது முழக்கமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை நெறியாகவும் மாற வேண்டும்.

நன்றி: தினமணி  (20 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்