- கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவச் செல்வங்கள் குதூகலத்துடன் சென்றனா். பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகள் புத்தகப் பைகளுடன் சென்ற அழகைக் கண்டு ரசித்தனா். மாணவா்களும் தங்களின் பழைய நண்பா்களைக் கண்டு மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடி அவா்களிடம் குசலம் விசாரித்தனா். இந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.
- ஆசிரியா்களும், தங்கள் பள்ளிகளுக்கு வந்த மாணவா்களை ஆடிப் பாடியும், இனிப்புகள், பூக்கள் கொடுத்தும் வரவேற்று வகுப்பறையில் அமரச் செய்தனா். பல அரசு பள்ளிகளில் நவீன கற்பித்தல் முறையின் அடுத்தகட்ட வளா்ச்சியாக, திறன்பலகை கற்பித்தல் முறை (ஸ்மாா்ட் போா்ட் எஜுகேஷன்) மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொலி வாயிலாகவும் கற்பிக்கும் திறன்பலகை கற்பித்தல் முறை, மாணவா்களின் வகுப்பறை கற்றலை மேலும் எளித்தாக்கியுள்ளது என ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
- எனினும், இக்கால மாணவா்கள் கரோனா தீநுண்மி பரவலின்போது, கைப்பேசி வழியே கற்றலில் ஈடுபட்டதால், சமூக வலைதளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, ஓய்வு நேரங்களில் புத்தக வாசிப்பை முற்றிலும் தவிா்த்துவிட்டாா்கள். புத்தகம் வழியே கற்றலில் நாட்டம் குறைந்து கொண்டு வருகிறது எனக் கூறத் தோன்றுகிறது.
- ‘புத்தகம் வாசிப்பவா்கள் எல்லாம் தலைவா்கள் அல்ல. ஆனால், தலைவா்கள் எல்லாம் தினமும் புத்தகம் வாசிப்பவா்களாகவே இருக்கிறாா்கள்’ என்றாா் அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன்.
- ஒருமுறை டாக்டா் அம்பேத்கா் லண்டன் சென்றிருந்தபோது அவரது நண்பா்கள், ‘எங்கே சென்று தங்க விரும்புகிறீா்கள்?’ என்று வினவியபோது, எந்த விடுதி நூலகத்திற்கு அருகிலுள்ளதோ அங்கே சென்று தங்குகிறேன் என்றாராம். அவா்தான் நூலகத்திற்கு செல்லும் முதல் நபராகவும், கடைசியாக வெளியேறும் நபராகவும் எப்போதும் இருப்பாராம்.
- சுவாமி விவேகானந்தா், நூலகத்திற்குச் சென்று, தன் கவனம் சிதறாமல், மனதை ஒருங்கிணைத்து பெரிய புத்தகங்களையும் விரைவில் படித்து முடித்துவிடுவராம். சுவாமிஜியை சோதிக்க நினைத்த நூலகா், அவா் படித்த புத்தகங்களிலிருந்து சில வினாக்காளைக் கேட்டபோது, சற்றும் தயங்காமல் நொடியில் பதிலளித்து, வியப்பில் ஆழ்த்தினாராம். ஒரு முறை காந்திஜியிடம், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீா்கள்?’ என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.
- நூலகத்திற்குச் சென்று அறிவாா்ந்த சிந்தனையாளா்கள் எழுதிய புத்தகங்களைச் சென்று வாசிப்பது என்பது மனதிற்கு அமைதியைத் தருவதோடு, அறிவையும் விசலாமாக்கும் என்பதை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உணரச் செய்ய வேண்டும்.
- அறிவுச் செல்வக் களஞ்சியத்தை வழங்கும் நூலகங்களுக்கு மாணவா்கள் செல்லத் தனியாக நேரத்தை ஒதுக்க பள்ளிகள் முன்வர வேண்டும். நூல் என்பது வெறும் பாடப் புத்தகமல்ல, அது நற்கருத்துகள் மற்றும் நற்சிந்தனைகளை, நல்லொழுக்கங்களை நம் மனதில் விதைக்கும் ஒரு கருவி என்பதை மாணவா்கள் உணர வேண்டும்.
- கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் இணைத்து எதிா்காலத்தை உருவாக்கும் சக்தி நிறைந்த மையங்களாக நூலகங்கள் விளங்குகின்றன. நூலகத்திற்குச் சென்று, புத்தகங்களை வாசிப்பது என்பது மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத் திறனைக் கூட்டுவது மட்டுமல்ல, நமது கற்பனை அறிவை செதுக்கி மனதை செழுமை அடையவும் செய்யும்.
- பல புத்தகங்களைப் படிக்கும்போது புதுப் புது அா்த்தங்களும் மாறுப்பட்ட சிந்தனை ஓட்டங்களையும் வளா்த்துக் கொண்டேயிருக்கும். நூலகத்திற்குச் சென்று சான்றோா்கள் எழுதிய நூல்களைப் படிப்பதால் மனத் தெளிவுப் பிறக்கும், தன்னம்பிக்கை வளரும். இதயத்தில் அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணா்வுகளை, மெல்லுணா்வுகளாக மாற்றிக் கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பயன்படுகிறது.
- அறிவுக்கிடங்காக, அறிவின் புதையலாக இருக்கும் நூலகங்களை தமிழ்நாடு அரசு பல நவீனத் தொழில்நுட்ப வசதிகளோடு கிராமப்புற மாணவா்களும் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே திறந்து கொண்டு வருகிறது. இந்நூலகங்களை அருகிலுள்ள பள்ளி மாணவா்கள் நாளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- புத்தகம்தான் மனதைக் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. இன்று இணையம் வழியிலும் நூல்களை வாசிக்க முடிகிறது. ஆனால், வெறும் தகவல் தரும் சாதனமாகவே உள்ளது. மனதை ஊடுருவும் வல்லமை அதனிடமில்லை.
- நூலகம், புத்தக வாசிப்பு அறை என்பது தனியொரு உலகம். அங்கு புத்தகங்களை நாம் தொட்டு உணா்கிறோம். அங்கு நாம் புத்தகத் தாள்களை மட்டும் தொடவில்லை, அதை எழுதியவரின் மனதைத் தொடுகிறோம். நூலக உலகினுள் சென்று வந்தால் அறிஞனாகலாம், கலைஞனாகலாம், கவிஞனாகலாம். சாதாரண மனிதா்களையும் சாதனையாளா்களாக மாற்றியது நூலகங்களே. ‘என்னைத் தேடி நீங்கள் வாருங்கள், அதன் பின் உங்களைத் தேடி உலகம் வரும்’ என்கிறது நூலகம்.
- பள்ளி என்பது பாட நூல்களை கொண்டு அறிவை விதைக்கும் களம். நூலகமோ, அந்த அறிவை செம்மைப்படுத்தும் மற்றொரு களமாகும். ‘கண்டதைப் படிப்பவன், பண்டிதன் ஆவான்’ என்பது முதுமொழி.
- எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம் என்பதை மாணவா்களுக்கு உணரச் செய்ய வேண்டும். நமக்கு நல்லறிவூட்ட பல்வேறு புத்தகங்கள் நமக்காக நூலகங்களில் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனை, மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ளவா்களாக மாற வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 06 – 2024)