TNPSC Thervupettagam

அகழாய்வு தொடர வேண்டும்

September 3 , 2021 1064 days 582 0
  • புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ள பழைமையான, சிதிலமடைந்த செங்கல் கோட்டைதான் பொற்பனைக்கோட்டை. பொன்பரப்பினான்பட்டி என்ற பண்டைய பெயா்தான் பொற்பனைக் கோட்டை என மாறியதாகவும் கூறப்படுகிறது.
  • இந்த பாழடைந்த கோட்டை 13- ஆம் நூற்றாண்டில் முத்தரைய மன்னா்களால் கட்டப்பட்டது. பின்னா் 15-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னா்களால் பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.

பொற்பனைக்கோட்டை

  • பொற்பனைக்கோட்டை, தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது என்று குறிப்பு உள்ளது.
  • இக்கோட்டையின் மதில் சுவா்களும் மற்ற செங்கல் கட்டுமானங்களுமே இதன் சிறப்பம்சம். சுமார் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் காணப்படும் இக்கோட்டையைச் சுற்றி இடிந்த நிலையில் மதில் சுவா் காணப்படுகிறது.
  • கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. கோட்டை உள்ளே அகழி இருந்ததற்கான அடையாளம் உள்ளதோடு, ஒரு குளமும் காணப்படுகிறது.
  • கோட்டை, மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகளும் இங்கே தென்படுகின்றன. இந்த இடத்தை ‘அரண்மனைத் திட்டு’ என்ற பெயரில் உள்ளூா் மக்கள் அழைக்கின்றனா்.
  • கோட்டையின் வட்ட வடிவ அமைப்பு செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
  • இக்கோட்டையில் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும் அது இங்கிருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ள திருவரங்குளம் வரை செல்வதாகவும் உள்ளூா் மக்கள் கூறுகிறார்கள். இது குறித்த விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.
  • இக்கோட்டைக்குள் சுரங்கம் இருப்பதாக சொல்லப்படும் பகுதியை அகழாய்வு ஆராய்ச்சி மூலம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நாயக்க மன்னா்கள் ஆட்சி காலத்தில் கார்குறிச்சி (திருக்கட்டளை), சிங்கமங்கலம் முதலான பகுதிகளில் மன்னா்களின் போர்ப்படைகள் தங்கி இருந்ததாக கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • தொண்டைமான் மரபினா், புதுக்கோட்டை நகரைப் புதிதாக அமைத்த பின்னா், புதுக்கோட்டையை ஒட்டிய பொற்பனைக்கோட்டை முதலான ஊா்கள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
  • ஒருசிலா், இக்கோட்டையில் இருந்த பனைமரத்தில் தங்க பனங்காய் காய்த்ததாகவும் அதனால் பொற்பனைக்கோட்டை என இவ்வூா் அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
  • இக்கோட்டையின் வரலாறாக உள்ளுா் மக்கள் தாங்கள் கேள்விப்பட்ட செவிவழிச் செய்திகளைக் கூறுவதோடு, தங்களின் கற்பனையாகவும் சிலவற்றைக் கூறுகின்றனா்.
  • 2012-ஆம் ஆண்டு இந்த கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான பழந்தமிழ் எழுத்துகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த நடுகல் தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் தொல்லியல் - கல்வெட்டியல் துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இக்கல் இரண்டு அடி நீளமும் இரண்டு அடி உயரமும் பத்து செ.மீ. பருமனும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக் குழாய்கள், உருக்கு கலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இது 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் அப்பகுதியில் வசிப்பவா்கள் கூறுகிறார்கள். இக்கோட்டையின் மூன்று திசைகளில் மூன்று தெய்வங்களுக்கான கோயில்கள் இருப்பதை இப்போதும் காணமுடிகிறது.
  • கோட்டையின் கிழக்குப்பகுதியில் பெரிய வாரிக் கரையில் பழைமை வாய்ந்த கீழக்கோட்டை ஆதி முனீஸ்வரா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள பெரிய வாரியில் அதிக அளவில் தாழை மரங்கள் காணப்படுகின்றன.
  • மேற்குப் பகுதியில் மேலக்கோட்டை முனீஸ்வரா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் எட்டு அடி உயர முனீஸ்வரா் சிலை உள்ளது. வடக்குப் பகுதியில் காளியம்மன் ஆலயம் உள்ளது.
  • இக்கோயில்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையும், கடைசி ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு பூஜைகளும், பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்துவரும் நிகழ்வுகளும் நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனா்.
  • இந்த திருவிழா நடைபெறும் காலங்களில் புதுக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனா்.
  • இதன் தொடா்பாக அண்மையில் கிடைத்துள்ள அரிய, புதிய செய்தி என்னவென்றால் கடந்த 2021 ஜூலை 30-ஆம் தேதி முதல் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன.
  • இந்த பணியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொல்லியல் ஆா்வலா்கள், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக வரலாற்று துறை மாணவா்கள் தொடா்ந்து சில நாள்கள் ஈடுபட்டனா்.
  • இந்த ஆராய்ச்சியின் விளைவாக, சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நவரத்தின கற்கள், மணிகள், பழம்பெரும் பானைகள், குடுவைகள் ஆகியவை இதுவரை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இவை மட்டுமல்ல, இரண்டு அடி ஆழத்திலிருந்து நீரை வெளியேற்றும் அற்புத கால்வாயும் ஒரு பகுதியில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் கிபி. இரண்டாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக உள்ளது என்று அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளவா்கள் தெரிவிக்கின்றனா்.
  • மேலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டால், அந்தக் கால்வாய் எங்கிருந்து வருகிறது? எதனை மாதிரியாகக் கொண்டு அது அமைக்கப்பட்டது என்பதும் தெரியவரும் என்கின்றனா் கல்வெட்டு ஆய்வாளா்கள்.
  • இந்த பொன்பனைக்கோட்டையில் மட்டுமல்லாது, ,தமிழகம் முழுவதும் இத்தகைய கல்வெட்டு ஆய்வுகளை தொல்லியல் துறையினா் மேற்கொண்டால் பண்டைய காலத்தின் தமிழா்கள் வாழ்வியல் முறை குறித்த பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி  (03 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்