TNPSC Thervupettagam

அகிம்சை சந்தை எனும் அறம்சார் சந்தை

September 15 , 2022 694 days 426 0
  • பண்டைக் காலத்தில் இருந்தே பல்வேறு பொருளாதார முறைகள் நிலவி வந்துள்ளன. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மெளரியர் காலத்து சாணக்கியனின் பொருளியல் முறை, தென்னகத்தில் திருவள்ளுவர் கூறிய பொருளியல் முறை என்று பல்வேறு முறைகள் இருந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் ஆதம்ஸ்மித் தொடங்கி, காரல் மார்க்ஸ், கீன்ஸ் முதலிய பல சிந்தனை முறைகள் நம்முன்னே இருக்கின்றன.
  • இவற்றில் அடிப்படையான இரண்டு வேறுபாடுகளை நாம் காண வேண்டும். ஒன்று அறம் சார்ந்த பொருளியல் நடவடிக்கைகள், மற்றது கட்டற்ற அதாவது அறம்சாராப் பொருளியல் நடவடிக்கைகள்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்

  • என்ற குறளில் அருளையும் அன்பையும் கொண்ட பொருளாதார நடவடிக்கைதான் சிறந்தது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
  • அருளுக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், நம்முடைய உற்றாரிடமும் சுற்றத்தாரிடமும் காட்டும் நேயத்திற்கு அன்பென்று பெயர். அவ்வாறு இல்லாத பிறரிடம் காட்டும் நேயத்திற்கு அருள் என்று பெயர். இன்னும் விளக்கமாகக் கூறினால், கைம்மாறு கருதாத அன்பிற்கு அருள் என்று பெயர்.
  • ஆனால் பொருளியல் சிந்தனைகளில் அறம் என்ற உள்ளடக்கத்தை எடுத்துவிட்டதால், அதன் வீச்சு ஒட்டுமொத்த உலக வாழ்வியலையும் சிதைக்கக் கூடியதாக மாற்றியுள்ளது. மேற்கத்திய பொருளாதார சிந்தனைகள் பெரிதும் பொருள் என்ற ஒன்றை தனியாக மட்டுமே வைத்து பொருளியலை அணுகின. அதன் விளைவாக எப்படியும் பொருளை ஆக்கலாம், அதை எப்படியும் நுகரலாம் என்ற கட்டற்ற முறை வளர்ந்து, சமூகத்தையும், சுற்றுச்சூழலையும் சீரழித்து வருகிறது.
  • பொருளியல் என்பது, சமூகவியல், அரசியல், சூழலியல், பண்பாடு ஆகிய எல்லாவற்றுடனும் நெருக்கமான தொடர்புடையது மட்டுமல்லாமல், இவை இல்லாமல் பொருளியல் தனித்து இயங்கவும் முடியாது என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அதன் காரணமாகவே, உழைப்புச் சுரண்டல், வளங்களைச் சுரண்டல் என்ற சுரண்டல் பொருளியல் விரிவானது.
  • பயன்பாட்டிற்கும் சுரண்டலுக்கும் வேறுபாடு உண்டு. ஒரு வளத்தை அதன் ஒட்டுமொத்த இருப்பையே அழித்து பணமாக மாற்றுவதே சுரண்டல் என்பதாகும். எடுத்துக்காட்டாக ஒரு மரத்தை வெட்டிப் பயன்படுத்துவதற்கும், காட்டையே அழித்து சந்தைக்கு அனுப்பி பணமாக மாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு.
  • மரத்தை வெட்டும் உரிமை கொண்ட மனிதனுக்கு அதை மீண்டும் நடுவதற்கும், பேணுவதற்கும் கடமை உண்டு என்ற புரிதல் இருக்க வேண்டும். அதுவே உண்மையான பொருளியல் நடவடிக்கையாகும். அதுவே அறம்சார் பொருளியல்.
  • அறமற்ற பொருளியல் நடவடிக்கைகள் வன்முறைக்கு வித்திட்டு, பூவுலகின் அனைத்துக் கூறுகளின் மீதும் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது. உடனடியாகத் திருப்பித் தாக்காத அனைத்து வளங்களின் மீதும், இந்த அறமற்ற பொருளியல் தாக்குதல் நடத்துகிறது. அது தொழிலாளர்களாகட்டும், விலங்குகள், ஆறுகள், மலைகள், காடுகள், கடல்களாகட்டும் அனைத்தையும் தாக்கிச் சிதைக்கின்றது.
  • உடனடியாகத் திருப்பித் தாக்க இயலாத சூழல் இருக்கும்போது, இவற்றின் மீது பொருளியல் போர்வையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆனால் இந்த உலகில் எதுவும் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளவையே. எனவே அவை ஏதோ ஒரு வகையில் திருப்பித் தாக்குகின்றன.
  • நாம் பணம் பெருக்குகிறோம் என்ற பெயரில், அனைத்து அடிப்படைகளையும் வன்முறையாகத் தகர்த்துக் கொண்டே வருகிறோம். இதன் விளைவு நாம் வழியற்ற ஒரு முட்டுச்சந்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
  • தற்காலத்தில், பற்றாக்குறைகளும், நோய்களும், மன அழுத்தங்களும், துயரங்களும் பரவலாகிக் கொண்டு வருகின்றன. பணம் பெருக்குபவர்களிடமும் மகிழ்ச்சியில்லை; இழப்பவர்களிடமும் மகிழ்ச்சியில்லை.
  • எனவேதான் காந்தியடிகள் கூறும், மாற்றுப் பொருளியல் பார்வை தேவைப்படுகிறது. அதைப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா இலக்கணமாக வகுத்துக் கொடுத்துள்ளார். இயற்கையைச் சிதைக்காத பொருளியல் நடவடிக்கையை அவர் முன்னிறுத்துகிறார். கொள்ளைப் பொருளியலுக்கும், சுரண்டல் பொருளியலுக்கும் மாற்றான தாய்மைப் பொருளியலை வலியுறுத்துகிறார்.
  • புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்தி பொருளியலை உருவாக்க வேண்டும் என்றும், நிலக்கரி, பெட்ரோல் போன்ற படிக எரியல்களைப் கொண்ட பொருளியல் விரைவில் அழிந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்.
  • அதற்காக திட்டங்களை வகுத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கைத்தொழில்கள், இயற்கைவழி வேளாண்மை என்று வன்முறையற்ற பொருளியலைக் கட்டியமைக்க முயன்றார். அந்த முயற்சிகளில் ஒன்றாகவே, அகிம்சை சந்தை என்ற வன்முறையற்ற அறச் சந்தையை வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
  • பெரும் பொருளாடல்களில் ஒதுக்கித் தள்ளப்பட்டு விளிம்பு நிலையில் உள்ள சிறு உழவர்கள், நெசவாளர்கள், பானை வனைவோர், கூடை முடைவோர் முதலிய எளிய பொருளியல் ஆக்குநர்களை நாம் கைதூக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சமூக நீதி பற்றி நிறையவே பேசுகிற நாம், இப்படிப்பட்டவர்களின் பொருளியல் நீதி பற்றி கவலைப்படுவதில்லை.
  • இவர்களின் பொருட்கள் சந்தைக்குள் வராமலேயே ஓரங்கட்டப்படுகின்றன. இவர்களுக்கு அரசு கொடுக்க முனைவது, சில சலுகைகளே. அவை அவர்களது கண்ணியத்தைக் குலைக்கின்றன.
  • அவர்களுக்குத் தேவை சலுகைகள் அல்ல, மரியாதை, கண்ணியம், அவர்களது பொருளாடலுக்கான சம வாய்ப்பு, சம ஆட்டக்களம். இவற்றை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.
  • இப்படிப்பட்ட, சூழலைச் சிதைக்காத, உழைப்பைச் சுரண்டாத, கண்ணியமான சந்தையை உருவாக்கும் பொருட்டு முன்வைக்கும் மாற்று, வன்முறைக்கு மாற்றான அகிம்சைச் சந்தை என்ற நன்முறைச் சந்தை. இதை நாம் அனைவரும் பரவலாக்க முனைய வேண்டும்.

நன்றி: தினமணி (15 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்