TNPSC Thervupettagam

அசைத்துப் பார்க்கப்படும் அமெரிக்க டாலர்

June 24 , 2024 208 days 180 0
  • உலக நாடுகள் தங்கள் மத்திய வங்கிகள் மூலம் வெளியிடும் பணம், சொந்த நாட்டிலும்இன்னும் ஒரு சில அண்டைநாடுகளிலும் செல்லுபடியாகும். ஆனால், அமெரிக்கா வெளியிடும் டாலர் மட்டும்பெரும்பாலான நாடுகளில் செல்லுபடியாகக்கூடிய ஒரு சர்வதேச கரன்சியாக இருக்கிறது.
  • அதனால், நாடுகள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு தங்கள் நாட்டு கரன்சியில் விலை வைக்காமல், அமெரிக்க டாலரில் விலை வைக்க வேண்டிய நிலை. தற்போது நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகத்தில் 88% அமெரிக்க டாலரில்தான் நடக்கிறது
  • மேலும், பல அரசாங்கங்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் 54%, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் டிரஷரி பாண்டுகள்தான்.
  • பெரிய நாடாக இருந்தாலும் நெ.1 பொருளாதாரமாக இருந்தாலும் மற்ற 195 நாடுகளைப் போல அமெரிக்காவும் ஒரு நாடுதானே. அந்த நாட்டின் ‘பணம்’ ஏன் எல்லா நாடுகளிலும் செல்லுபடியாக வேண்டும்? எதற்காக பல நாடுகளும் அதை தங்கள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்? தவிர, ஒரு அமெரிக்க டாலருக்கு ஈடாக நம்முடைய 83 ரூபாய் இந்தியப் பணத்தைகொடுக்க வேண்டி இருப்பது ஏன்? ஒரு அமெரிக்க டாலருக்கு பாகிஸ்தான் ரூ.278, இலங்கைரூ.305-ஐ ஈடாக கொடுக்க வேண்டியிருக்கிறது? இவையெல்லாம் எப்போது மாறும்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
  • பிடிக்கிறதோ இல்லையோ, உலகப் பொருளாதாரத்தை, அமெரிக்க டாலரை தவிர்த்து, புரிந்து கொள்ளவோ, வரையறை செய்யவோ, மாற்றவோ இயலாது. அந்த அளவுக்கு அமெரிக்க டாலர் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய கருவியாகி சில தசமங்கள் ஆகின்றன.
  • ஆனாலும், அவ்வப்போது, ‘ஆட்டம் காண்கின்றது’ அல்லது ‘முடிந்தது டாலரின் சாம்ராஜ்யம்’ என்பது போல சில செய்திகள் வரும்.மீண்டும் இப்போது அப்படி சிலர் சொல்லக் காரணம், 50 ஆண்டுகளாக நடப்பிலிருந்த ‘பெட்ரோல் டாலர் ஒப்பந்தம்’ சவுதி அரேபியாவால் நீட்டிக்கப்படவில்லை என்பதுதான்.
  • இவற்றைப் புரிந்துகொள்ள, அமெரிக்க டாலர்இப்படி ஒரு சர்வதேச இடத்தைப் பிடித்தது எப்படி? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இரண்டாவது உலகப் போர் தொடங்குவதற்கு முன் வரை, கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டு காலத்துக்கு, பல்வேறு நாடுகளை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பணக்கார நாடு இங்கிலாந்து. அதன் ‘ஸ்டெர்லிங் பவுண்ட்’தான், உலக நாடுகளின் ரிசர்வாகப் பயன்படுத்தபட்டது.
  • ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து உள்பட பல்வேறு பெரிய நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி, போர் முடிந்தபோது, அவற்றின் பொருளாதாரம் படு பாதாளத்தில் இருந்தன. அமெரிக்கா மட்டும் அதிகம் பாதிக்கப்படாத பெரிய பொருளாதாரமாக இருந்தது.
  • 1944-ம் ஆண்டு, நியூ ஹாம்ஸையரில் அமைத்திருக்கும் பெரட்டன் வூட்ஸ் என்கிற இடத்தில்,ஐக்கிய நாடுகளின் நிதி மாநாடு ஒன்று நடந்தது.அதில் 44 நாடுகளின் 730 பிரதிநிதிகள் கலந்துபேசி, சில முடிவுகள் எடுத்து, பெரட்டன் வூட்ஸ்(Bretton Woods) ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.
  • அதன்படி அமெரிக்க டாலரை நடு நாயகமாக வைத்து, மற்ற நாட்டின் பணங்களுக்கு மதிப்பு கொடுக்கலாம் என்றும், அமெரிக்கா டாலர்களை அச்சடிக்க அதற்கேற்ற அளவு தங்கம் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆரம்ப கணக்குப்படி ஓரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமெரிக்க டாலரைக் கொடுத்தால் (சரண்டர்) அந்த மதிப்புக்கு ஏற்ற தங்கத்தை அமெரிக்க பெடரல் தர வேண்டும்.
  • அப்போது தொடங்கப்பட்டவைதான், இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டும்.
  • சில ஆண்டுகளுக்கு பின், தங்கம் இல்லாமலேயே அமெரிக்கா டாலர் அச்சடித்துக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
  • பிறகு, 1971-ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ‘‘பெரட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் முடிந்தது, இனி டாலர் அச்சடிக்க இணையான தங்கம் வைத்துக் கொள்ள முடியாது" என்றார். அதனால் உலக நாடுகள், அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் போகக்கூடும் என்பதால், சவுதி அரேபியாவுடன் ஹென்றி கிசிஞ்சர் மூலம் ஓர் ஒப்பந்தம் போட்டார்.
  • உலக கச்சா எண்ணை உற்பத்தியில் பெரும்பங்கு வகித்த சவுதி அரேபியாவிடம், ’உங்களுக்கு நாங்கள் ராணுவ பாதுகாப்புத் தருகிறோம். அதற்காக நீங்கள் இனி கச்சா எண்ணையை அமெரிக்க டாலர் கொடுப்பவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும்’ என்றார். ஒப்பந்தம் 1974 ஜூன் மாதம் 8-ம் தேதி கையெழுத்தானது.
  • அதனால் கச்சா எண்ணை வாங்க, அதற்கு கடன் பெற, கப்பலில் கொண்டு செல்ல, அதற்கு காப்பீடு எடுக்க, என்று எதுவானாலும் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்கப் பணம், அமெரிக்க ஸ்விப்ட் பைனான்சியல் சிஸ்டம் என்றானது. இப்படியாக, இணையான தங்கம் வைத்துக்கொள்ளாமலேயே அச்சடிக்கப்படும், டாலர், மீண்டும் சர்வதேச கரன்சியாக தொடர்ந்தது.
  • 50 ஆண்டுகளாக தொடர்ந்த, அந்த பெட்ரோ டாலர் ஒப்பந்தம், 2024 ஜூன் மாதம் வழக்கம் போல நீட்டிக்கப்படவில்லை என்பதுதான் உலா வரும் செய்தி.
  • இப்படியாக அமெரிக்க டாலர் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தகம் செய்ய தேவைப்படும் ஒரு பணமாக, அந்நியசெலாவணி கையிருப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய டிரஷரி பாண்டாக இருப்பதாலும், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிற, ’ஸ்விப்ட் பைனான்சியல் சிஸ்டம்’ (Society for Worldwide Interbank Financial Telecommunication (Swift) பெரும்பாலான உலக வர்த்தகத்தை சாத்தியமாக்குவதாக இருப்பதாலும், அமெரிக்காவுக்கு பலவிதங்களில் ஆதாயம். மற்ற நாடுகளின் பொருளாதார வளங்கள் குறைகிறபோது அமெரிக்கா பாதிக்கப்படாமல் இருப்பது தவிர, சமயத்தில் கூடுதலாக வளரவும் செய்கிறது.
  • இவையெல்லாம் தவிர, அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிற நாடுகளின் பொருளாதாரங்களை முடக்க, அந்த நாடுகள் மீது வர்த்தக தடைகள் மற்றும் ’ஸ்விப்ட் சிஸ்டத்தில் தடை ஆகியவற்றை அமெரிக்கா செய்து வருகிறது.
  • இந்த சிக்கல்களில் இருந்து வெளிவர, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் சேர்ந்து 2009-ல், பிரிக்ஸ் (BRICS) அமைப்பை உருவாக்கின. 2024 ஜனவரி மாதம் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்தன. சவுதி அரேபியா மற்றும் மலேஷியா ஆகியவை தவிர நேட்டோ உறுப்பு நாடான துருக்கியும் சேர விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
  • பிரிக்ஸ் அமைப்பு, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். ஆகியவற்றுக்கு மாற்றாக ‘நியூ டெவலப்மெண்ட் பேங்க் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு பொது கரன்சி; ஸ்விப்ட் பைனான்சியல் சிஸ்டத்துக்கு மாற்றாக வேறு ஒன்று; அமெரிக்க டாலரை அந்நிய செலாவணி கையிருப்பாக வைத்துக் கொள்ளாமல் அதற்கு பதிலாக தங்கம் மற்றும் பிற வலுவான நாட்டு கரன்சிகளை, பாண்டுகளை வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • உதாரணமாக, டிசம்பர் 2023-ல் 816 பில்லியன் டாலராக இருந்த சீனாவின் அமெரிக்க டாலர் (பாண்ட்) அந்நியச் செலாவணி கையிருப்பு 2024-ல் 767 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவு ஆகும்.
  • அமெரிக்க அரசு விதித்த தடைகளின் காரணமாக ரஷ்யா, ‘ஸ்விப்ட்’க்கு மாற்றான, ’சிஸ்டம் ஃபார் டிரான்ஸ்பர் ஆப் பைனான்சியல் மெசேஜஸ்’ (SPFS) என்ற பணம் பரிமாற்ற தகவல் ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது. அதேபோல சீனாவும் ‘கிராஸ் பார்டர் இன்டர்நேஷனல் பேமென்ட் சிஸ்டம்’ (CIPS) என்ற ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது. இவற்றை ஒருங்கிணைக்கிற முயற்சிகளும் நடந்து வருகின்றன.
  • இப்படியாக பல வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஆனால், உலக பொருளாதாரத்தில் இருந்து அமெரிக்க டாலரின் தேவையை, ஆதிக்கத்தைத் தவிர்க்க இன்னும் பல வேலைகள் ஆக வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு மூலம் அதன் சாத்தியங்கள் அதிகமாகியிருக்கின்றன. வேலைகள் வேகம் எடுத்திருக்கின்றன.
  • டிசம்பர் 2023-ல் 816 பில்லியன் டாலராக இருந்த சீனாவின் அமெரிக்க டாலர் (பாண்ட்) அந்நியச் செலாவணி கையிருப்பு 2024-ல் 767 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவு.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்