TNPSC Thervupettagam

அசோகர் கல்வெட்டில் அரசியல்

January 13 , 2021 1469 days 716 0
  • மன்னுயிர் அனைத்தையும் நேசிக்கும் பண்பு என்பது நமக்குப் புதியதன்று. ஆனாலும் பொதுவாக வரலாறு என்பது வேட்டையாடும் வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது. விலங்குகள் மனிதர்களை வேட்டையாடியதும் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடியதும் மனிதர்கள் மனிதர்களை வேட்டையாடுவதுமாக வரலாறு தொடர்கிறது.
  • தொல்காப்பிய மரபியல் நூற்பா, அரசனுக்குத் தேவையானவற்றைப் பட்டியல் இடுகிறது.
  • படையும் கொடியும் குடையும் முரசும்
  • நடை நவில் புரவியும் களிறும் தேரும்
  • தாரும் முடியும் நேர்வன பிறவும்
  • தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய
  • திருக்குறளில் ( இறை மாட்சி) ஒரு பட்டியல் இருக்கிறது.
  • படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  • உடையான் அரசருள் ஏறு.
  • இவை எல்லாவற்றிலும் படையே முதலில் இருக்கிறது. ஆனாலும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருவள்ளுவர் ஒரு நுட்பத்துடன் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவரின் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனும் வரிசை வைப்புமுறை அதற்கு இடம் தருகிறது.
  • ஒரு அரசனுக்குப் படை என்பது குடிமக்கள்தாம். குடிமக்கள் பசியில்லாமல் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அமைச்சர்கள்; அவர்களின் அறிவுரையில் அண்டை நாடுகளுடன் நட்பு; அந்த நட்பே அரண். படைபலம் அரண் இல்லை; அண்டை நாடுகளுடன் இருக்கும் நட்பே அரண்.
  • இப்போதும் கணினி, இணையம் வழி நடக்கிற, நடக்க இருக்கிற கண்ணுக்குத் தெரியாத போர்கள், ஏவுகணைகள் - ஆள் இல்லாத விமானம்- ஆள் இல்லாத போர் - ஆட்கள் இல்லாமல் போகும் போர் ஆகியவை மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. ஆகவே வன்முறைக்குச் சாத்தியமில்லாத உலகில் வாழ விரும்புகிறவர்களால் மட்டுமே இந்தப் பூமியில் உயிர்களின் இயக்கம் தொடர்வது சாத்தியமாகும். கலிங்கப் போருக்குப் பின் அசோகர் அப்படி ஒரு உலகை உருவாக்க விரும்பியிருக்கிறார்.
  • அசோகர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தான் விரும்பியதை நாட்டு மக்களுக்கும் எடுத்துச் சொல்லக் கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார். போரின் காரணமாகத் தாம் செய்த கொடுமைகளைக் கல்வெட்டுகளில் குறிப்பிட்டு அதற்காக வருந்திய ஒரு அரசரை- அரசை - வரலாற்றில் கடந்தகால முள்ளிவாய்க்கால் வரை அசோகரைப் போல் ஒருவரைக் காண முடியாது.
  • மக்கள் ஆட்சிமுறை பின்பற்ற வேண்டிய இறைமாட்சி முறைக்கு எடுத்துக்காட்டான வழிமுறைகளை வலியுறுத்தும் ஆவணங்களாக அந்தக் கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றைத் தமிழில் டி.எஸ். குப்பண்ணா சாஸ்திரி மொழிபெயர்த்துள்ளார்.
  • அசோகரின் கல்வெட்டுகள் பாறைகளிலும் தூண்களிலும் குகைகளிலும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் எல்லைப்புறங்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் அவரது ஆணைகள், அறிவுரைகள், விருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. அசோகர் பேரரசர்; அவர் காலத்தில் அவர் சொன்னதுதான் அவரது ஆட்சிப் பகுதியில் ஆணையாக இருந்த காலம். ஆனாலும் மானுட நேயம் வெளிப்படும் வகையில் அவரது கல்வெட்டுகளில் செய்திகள் உள்ளன.
  • மக்கள், நலனையும் இன்பத்தையும் பெற போரைத் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். மிருக பலத்தால் கிடைக்கும் வெற்றியை விடுத்து நன்னெறி முறையில் மானுட சமூகத்தின் உறவை நிலை நிறுத்த முயன்றிருக்கிறார். பொதுவான குறிக்கோளை அடைவதற்குக் கொள்கைச் சண்டைகளையும் மதச்சார்பினையும் நீக்குவதற்கு விரும்பியிருக்கிறார். கட்டாய விதிகளால் இல்லாமல் மக்கள் விருப்பத்தால் நடைமுறைப்படுத்த விரும்பியிருக்கிறார்.
  • பிரச்சினைகளை, மக்களைப் பற்றியது,பொதுநல சமூகத்தை பற்றியது, உலக சமூக உறவைப் பற்றியது என்று பிரித்துப் பார்த்திருக்கிறார். வடமேற்கில் ஆப்கானிஸ்தானம் தெற்கில் மைசூர், ஆந்திரா வரை அவர் ஆட்சிக்கு வந்தபோது எல்லைகளாக இருந்தன. பின்பு கலிங்கத்தை வென்று அதனையும் சேர்த்துக் கொண்டார். அவரது ஆட்சிப் பரப்பில் ஒரே மொழி கிடையாது. ஆனாலும் ஒரே மொழியில் அனைத்தையும் கொண்டுவரும் முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.
  • தனது மொழியில் மட்டுமே தகவல் தருவேன் என்று சொல்லவில்லை. தனது மொழி தெரியாதவர்களை வெளியேறச் சொல்லவில்லை. பிராகிருதம், கிரேக்க அராமிய மொழிகளில் அவரது கல்வெட்டுகள் இருக்கின்றன. பிராகிருதம், பாலிமொழிக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும் அராமிய மொழிக் கல்வெட்டுகள் கரோஷ்டி எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இப்படி, கல்வெட்டுகள் இருக்கும் இடத்தில் மக்கள் வழங்கிய மொழிகளில் கல்வெட்டுகளைப் பொறித்து வைத்திருக்கிறார். கிரேக்க அராமிய மொழிக் கல்வெட்டுகள் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் காணப்படுகின்றன.
  • ஒரே மொழியை ஆட்சிமொழியாக்காமல் தனது ஆணைகளை இருமொழிகளில் பொறித்திருக்கிறார். அப்படியான இருமொழிக் கல்வெட்டு ஒன்று ஆப்கானிஸ்தானத்தின் காந்தகாருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்றார் நாள்தோறும் அரண்மனையில் உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்.
  • மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் மருத்துவ வசதிகள் செய்துதர வழிவகுத்தார். விலங்குகளையும் தமது ஆட்சியில் குடிமக்களைப் போல நடத்தியதற்கு உலக வரலாற்றில் அசோகர் ஒருவரே காணக் கிடைக்கிறார்.
  • ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட விலங்கின் இறைச்சி உணவையும் மக்கள் உண்ணக் கூடாது என்று கட்டாயப்படுத்தியதாகத் தகவல் இல்லை.
  • "மூர்க்கத்தனம், குரூரம், கோபம், இறுமாப்பு, பொறாமை, இவை பாபத்தை விளைவிக்கும். இம்மனவெழுச்சிகள் என்னைக் கெடுக்கும்படி நான் விடக்கூடாது' (தூண் சாசனம் 3) என்று தனக்குத்தானே விதித்துக் கொண்டதை மக்களுக்கும் தெரிவித்திருக்கிறார்.
  • பிரியதரிசி அரசர் எல்லா மதத்தினரையும், துறவு பூண்டோரையும் பூணாதோரையும் ஒன்றுபோல் தானங்களாலும் கெளரவச் சின்னங்களாலும் கெளரவித்திருக்கிறார்.
  • அநியாயமாகத் தம் மதத்தை உயர்த்தியும் பிறர் மதத்தைத் தாழ்த்தியும் பேசுவதையும் நியாயமிருப்பினும் அளவுக்கு மீறி தாழ்த்திப் பேசுவதையும் தவிர்க்க வேண்டி, நாவை அடக்கிப் பேச ஆணையிட்டிருக்கிறார்.
  • பிற மதங்கள் எல்லாமே ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டு மரியாதைக்கு உரியனவாகும். அவ்வாறு மரியாதை காட்டுவதால் ஒருவன் தன் மதத்தையும் உயர்த்திக்கொண்டு பிறர் மதத்திற்கும் தொண்டு செய்பவனாக ஒருங்கே ஆகின்றான். மாறாக நடப்பதால் ஒருவன் பிறர் மதத்திற்கு அபகாரம் செய்வதுடன் தம் மதத்திற்கும் தீங்கிழைக்கின்றான்.
  • ஏனெனில் ஒருவன் தன் மதத்தை உயர்த்திப் பேசி, தன் மதத்திலுள்ள பக்தி காரணமாகவும் அதைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிற மதத்தைத் தாழ்த்திப் பேசினால் அவன் தன் மதத்திற்கே தீங்கைச் செய்து கொள்கின்றான்.
  • எம்மதத்தினரும் மற்ற மதத்தினர் கொள்கைகளை அறிந்துகொண்டு, நல்ல கொள்கைகளைத் தாமும் பின்பற்ற வேண்டும் என்று பிரியதரிசி அரசன் விரும்புகின்றான் (பாறைச்சாசனம் 12) என்று தன் விருப்பத்தை மக்களுக்குத் தெரிவித்து மக்களையும் அவ்வாறு வாழப் பக்குவப்படுத்தியிருக்கிறார்.
  • தான் புத்த மதத்தைத் தழுவினாலும் மக்களை மதமாற்றம் செய்ய வற்புறுத்தாதவர். பிற மதத்தினரைத் துன்புறுத்த அவர் நினைக்கவில்லை.
  • "எல்லா மக்களும் என் குழந்தைகள். இவ்வுலகிலும் மறுமையிலும் என் சொந்தக் குழந்தைகளின் நன்மையையும் சுகத்தையும் தேடுவது போலவே நான் எல்லா மக்களுக்கும் அவற்றைத் தேடுவேன்' என்று குடிமக்களைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போன்று கருதியிருக்கிறார்.
  • அரசர் மக்களுக்குத் தந்தை போன்றவர் என்றும் மக்கள் அரசரது சொந்தக் குழந்தைகள் போன்றவர்கள் என்றும் மக்களுக்கு அதிகாரிகள் உறுதி கூறி அரசரிடம் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும் (கலிங்க சாசனம் 2 ) என்றும் சொல்லியிருக்கிறார்.
  • என் சாம்ராச்சியத்தின் எல்லைப்புறங்களில் வசிக்கும் என்னால் ஜெயிக்கப் பெறாத மக்கள் தங்களைக் குறித்து என் உத்தேசம் யாதோ என்று ஐயமுற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் என்னிடம் பயப்படாமல் நம்பிக்கை கொள்ள வேண்டும். என்னிடமிருந்து துக்கத்தை அல்லாமல் சுகம் ஒன்றையே எதிர்பார்க்க வேண்டும்.
  • இவ்வாறு கல்வெட்டில் குறித்திருக்கிறார்.
  • தம்மைத் தாமே ஆண்டுகொள்ளும் - தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் - பொதுமக்கள் உரிமைக்கும் நல்வாழ்வுக்கும் உறுதியளிக்கும் மக்கள் ஆட்சியை இறைமாட்சியாகத் தர அசோகப் பேரரசர் விரும்பியிருக்கிறார்.
  • சாரநாத், சாஞ்சி ஸ்தூபியில் உள்ள அசோகரின் தர்மசக்கரம் நமது தேசியக் கொடியில் உள்ளது. இந்தியாவின் அதிகாரபூர்வ முத்திரையிலும் இடம் பெற்றிருக்கிறது.
  • பாறைச் சாசனம் 6-இல் உள்ளது பின்வருமாறு:
  • பிரியதரிசி அரசன் கூறுகின்றான்: "இதற்கு முன், தினத்தின் எந்த நேரத்திலும் ராச்சிய காரியத்தைக் கவனிப்பது என்பதோ நிர்வாகத்தைப் பற்றி அரசிடம் தெரிவிப்பது என்பதோ கிடையாது. ஆகையால் இப்போது நான் உணவு செய்துகொண்டிருக்கும் பொழுதும் அந்தப்புரத்தில் உள்ள அறைகளில் இருக்கும் பொழுதும் கன்றுகாலிகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் பொழுதும் உல்லாச நடையிலோ மத வழிபாடுகளிலோ ஈடுபட்டு இருக்கும் பொழுதும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என் அதிகாரிகள் என்னைக் காணவும் என்னிடம் என் பிரச்னைகளை என் பிரசைகளின் காரியங்களைப் பற்றிக் கூறிக் கொள்ளவும் ஏற்பாடு செய்து இருக்கின்றேன்.
  • நான் எங்கும் மக்களின் காரியங்களை கவனிக்கிறேன். நான் வாய் மூலமாக உத்தரவிட்ட ஒரு கொடையோ அறிக்கையோ அல்லது என்னால் தலை பணியாளருக்கு கவனிக்கும்படி விடப்பட்ட ஒரு அவசர காரியமோ சபையில் அபிப்பிராய பேதத்தையோ சர்ச்சையையோ கிளப்பினால் இது எந்நேரம் ஆயினும் நான் எவ்விடம் இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் இது என் உத்தரவு...
  • நிகழ் காலப் பிரச்னைகளுக்கு வரும்கால நிகழ்வுகள் வழிகாட்ட முடியாது என்பதால் அசோகரின் கடந்த கால விருப்பங்களில் நிகழ்காலத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி (13 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்